Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

அமரராகிவிட்ட திருவேங்கடம் வேலுப்பிள்ளை அவர்கள் தமிழீழத் தேசியத் தலைவர் வே. பிரபாகரனின் தந்தை என்று எல்லோரும் பேசி வருவதால் அவருக்கு பிரபாகரன் ஒருவர் மட்டுமே பிள்ளை என்ற மாயை ஊடகங்கள் வழியே ஏற்பட்டுள்ளது. ஆனால் அவருக்கு இரண்டு ஆண்களும், இரண்டு பெண்களுமாக நான்கு பிள்ளைகள் உள்ளனர். இந்தக் கட்டுரை அதற்கும் அடுத்த கட்டமாக சென்று ஒரு தமிழீழத்தின் வீரத்தந்தை என்ற பாத்திரத்தின் வடிவமாக அவரை நோக்குகிறது.

தமிழீழ தேசத்தின் குரலைப் பிரதிபலித்தவராக கலாநிதி அன்ரன் பாலசிங்கம் போற்றப்பட்டார். தமிழீழத்தின் தேசியத் தலைவராக வே. பிரபாகரன் திகழ்கிறார். அதுபோல தமிழீழத்தின் தந்தை என்ற சொற்பதத்திற்கு பொருத்தமான பாத்திரமாக அமரர் திருவேங்கடம் வேலுப்பிள்ளை திகழ்கிறார்.

பாசம் மிக்க தந்தைப் பாத்திரத்தை ஒருவர் இலகுவாக வகிக்கலாம், ஆனால் வீரம் மிக்க தந்தைப் பாத்திரத்தை வகிப்பது அதிலிருந்து முற்றிலும் வேறுபட்டது, அது எல்லோராலும் முடியாத பாத்திரம். ஆகவேதான் பாத்திரங்களில் எல்லாம் சிறந்தது வீரம் மிக்க தந்தைப் பாத்திரமே என்று பண்டைய இலக்கியங்கள் போற்றுகின்றன. அத்தகைய சங்கப் பாரம்பரியத்தின் மனத்தோடுதான் இக்கட்டுரை வேலுப்பிள்ளையின் காலத்தை மதிப்பீடு செய்கிறது.

தன் மகனை புகழந்து பேசாத பண்பு தந்தைக்குரிய உயர் தமிழ் பண்பாக இருக்கிறது. வேலுப்பிள்ளை அவர்கள் என்றுமே தனது மகன் பிரபாகரனை புகழ்ந்து யாரிடமும் பேசியதையோ, எழுதியதையோ நீங்கள் எங்குமே காண முடியாது. தான் பெற்ற பிள்ளையின் புகழை மற்றவர் கூறக் கேட்டு பெற்றோர் மகிழ வேண்டுமே அல்லாது, தாமாக அந்தப் புகழைப் பறைதட்டக் கூடாது என்பது திருக்குறள் தரும் உயரிய செய்தியாகும். இந்த உயர் நெறியை பின்பற்றிய தந்தையாகவே வேலுப்பிள்ளை வாழ்ந்து காட்டியிருக்கிறார்.

உயர் தமிழ் வீரத்தின் வடிவமாக போராட்டக்களம் செல்லும் பிள்ளைகளை களத்தில் வீரமரணம் அடைந்த பின்னரே தன் மகன் என்று எடுத்துக் கொஞ்சி பெருமைப்படும் பண்பாடு தமிழ் பண்பாடாகும். அதுபோலவே தன் மகனின் போராட்டத்தின் களத்தில் தானும் நின்று, கொடுஞ்சிறையை சந்தித்து, அந்தச் சிறையிலேயே தன் வாழ்வை முடித்து வீரத்தின் இலக்கணமாக திகழ்ந்துள்ளார் வேலுப்பிள்ளை.

வன்னிக்களமுனையில் இராணுவம் மக்களை கைது செய்தபோது, மக்களோடு மக்களாக இருந்த அவர் நானே பிரபாகரனின் தந்தை என்று எழுந்துநின்று கூறி, பனாகொடை முகாமிற்கு சென்றுள்ளார். வல்வையில் அவர் வாழ்ந்த காலத்தில் பிரபாகரனைத் தேடி இராணுவம் அவர் வீடு சென்றபோதெல்லாம் பயந்து ஓடி மறையாமல் நேரடியாக இராணுவத்தின் துப்பாக்கி முனையை அவர் சந்தித்தார். பல நூறு தடவைகள் இராணுவம் வெறி கொண்டு அவரிடம் போயுள்ளது. ஒவ்வொரு தடவையும் வீரத்துடன் அவர்களை எதிர் கொண்டு, தான் வாழ்ந்த வீட்டிலேயே அச்சமின்றி வாழ்ந்து காட்டிய துணிச்சல் மிக்க தந்தையாக அவர் இருந்தார்.

பிரபாகரனை மகனாக வரித்துக் கொண்டாலும் கூட அவர் தனது மகனுடைய செயற்பாடுகள் எல்லாவற்றையுமே பாராட்டி புகழ்ந்தவரல்ல. எத்தனையோ தடவைகள் பிரபாகரன் மீது அவர் விமர்சனங்களை நேரடியாக முன் வைத்திருக்கிறார். போர்க்களத்தில் உள்ள மகனாக இருந்தாலும், தானே அவனுடைய தந்தை என்ற உயர்வை அவர் என்றும் விட்டுக் கொடுத்தவரல்ல. பிரபாகரன் வேலுப்பிள்ளையின் மகனே அல்லாமல், வேலுப்பிள்ளை பிரபாகரனின் தந்தை என்று பேரெடுக்க விரும்பாத செயல் வீரர். இன்று அவருடைய மரணத்தின் புகழ் பிரபாகரன் தேடிக்கொடுத்த பெருமையல்ல, அவர் தானாகத்தேடிய வீரப்புகழாகும். தந்தைப் பாத்திரத்தை என்றும் இரண்டாவது இடத்திற்கு தள்ளிவிடக் கூடாது என்பதை தன் வாழ்வால் வரைந்துள்ளார்.

மகன் அரசியலில் உயர் நிலையில் இருந்தால், அவன் பெயரைச் சொல்லி பந்தா பண்ணி, ஊழல் பண்ணுவது பெரும்பாலான தந்தைகளின் இயல்பு. ஆனால் இறுதிவரை விடுதலைப் போராட்டத்தில் தனது மகன் பெற்ற உயர்வை அவர் பயன்படுத்தியது கிடையாது.

கடந்த காலங்களில் டென்மார்க்கில் உள்ள வேலுப்பிள்ளையின் மகன் மனோகரன் வேலுப்பிள்ளையை விடுதலைப் போராட்டத்தை நாமே நடாத்துகிறோம் என்று கூறிய டென்மார்க் புலம் பெயர் தமிழர் சிலர் அவதூறு செய்ய முயன்றார்கள். அவருடைய தூய உள்ளத்தை புண்படும்படி தாங்க முடியாத நிந்தனைகளை செய்தார்கள். அதை எல்லாம் அறிந்தும் பிரபாகரனிடம் சொல்லாமலே அமைதியாக இருந்தார் வேலுப்பிள்ளை. பிரபாகரனோ அவர் தந்தையோ அவர் குடும்பமோ இந்தத் தேசிய விடுதலைப் போராட்டத்தை என்றுமே தமது சொந்த நலனுக்காக பாவித்தது கிடையாது என்பதற்கு இந்த நிகழவைவிட வேறென்ன சாட்சியம் வேண்டும்.

ஒரு தந்தை எப்படி தன் மகனைப் பார்க்கிறானோ அதுபோலவே அவன் மகனும் தன் பிள்ளைகளை வளர்ப்பான் என்பது பரம்பரை நெறியாகும். வெளிநாடுகளில் உள்ள எதிரிகளின் ஊடகங்களில் பல பிரபாகரன் தனது பிள்ளைகளை வெளிநாடுகளுக்கு அனுப்பிவிட்டு, மற்றவரின் பிள்ளைகளை போராட்டத்திற்கு கொண்டு செல்கிறார் என்று பிரச்சாரம் செய்தன. அதைப் பலர் நம்பினார்கள்.

ஆனால் நடந்தது என்ன பிரபாகரன் தனது பிள்ளைகள் எல்லோரையுமே போராட்டக்களத்தில்தான் வைத்திருந்தார். பிள்ளைகளை விடுங்கள் இந்தப் போரின்போது தனது பெற்றோரையாவது பாதுகாப்பாக அனுப்ப வேண்டுமென அவர் கருதினாரா இல்லையே.. அவர் கருதாவிட்டாலும் எங்களை அனுப்பிவிடு என்று வேலுப்பிள்ளை அவரிடம் கேட்டாரா அதுவும் இல்லை.

இதுதான் வேலுப்பிள்ளையினதும் பிரபாகரனதும் பெருமை. பிரபாகரன் மீது எவ்வளவோ விமர்சனங்களை வைக்கிறார்கள், ஆனால் மூன்று பிள்ளைகளின் தந்தை என்ற அவருடைய தந்தைப் பார்த்திரத்தை எண்ணி எதிரிகளே பெருமைப்படுகிறார்கள். உலகத்தில் உள்ள எந்தவொரு தந்தையும் எடுக்க முடியாத துணிகரமான முடிவை பிரபாகரன் தன் பிள்ளைகள் குறித்து எடுக்க வழிகாட்டியாக இருந்தவர் வேலுப்பிள்ளையே. இதுதான் வேலுப்பிள்ளையிடமிருந்து பிரபாகரன் கற்ற வீரம் செறிந்த தமிழீழத் தந்தைப் பாத்திரமாகும்.

ஒரு மரம் பட்டைகளாலும், இலைகளாலும், வாசமிக்க பூக்களாலும் தன்னை மூடி மறைத்து நல்ல மரமென பெயர் பெறலாம். ஆனால் எந்த மரமும் தன் உள் இயல்பை வெளித் தோற்றங்களால் மூடி மறைக்க முடியாது. அம்மரத்தின் கனியை சுவைத்தால் மரம் எப்படிப்பட்டது என்பதை எளிதாக உணரலாம். இது இயேசுநாதர் சொன்ன விளக்கமாகும். பிரபாகரன் பிள்ளைகளை வளர்த்த விதம், அவர் தன்னளவில் கடைப்பிடித்த ஒழுக்க நெறி போன்றனவே வேலுப்பிள்ளை என்ற மரத்தின் சுவைமிக்க கனிகளாகும்.

வேலுப்பிள்ளை அவர்கள் அனுராதபுரத்தில் பணியாற்றியபோது எல்லாளன் சமாதிக்கு விளக்கு வைப்பது இயல்பு. அத்தருணம்தான் பிரபாகரன் கருவுற்றார் என்பது குறிப்பிடத்தக்கது. எவரும் செய்யாத இந்தச் செயலை வேலுப்பிள்ளை ஏன் செய்தார்.. அதற்கு அவருடைய பிற்பிலேயே பல காரணங்கள் இருக்கின்றன.. வேலுப்பிள்ளைக்குள் இருந்த போர்க்குணம் எங்கிருந்து வந்தது என்று ஆராய வேண்டும்.

சோழர் காலத்தில் இலங்கையின் வடக்கே ஐந்து பெரும் தளபதிகள் நிர்வாகத்தை நடாத்தினார்கள். ஒருவர் ஐயக்கதேவர்வல்வை, பொலிகண்டி, தொண்டைமானாறு பகுதிக்கும், வீரமாணிக்கதேவர் மயிலிட்டி பகுதிக்கும், சமரபாகுதேவர் உடுப்பிட்டி, வல்வெட்டி பகுதிகளையும், வெள்ளிவண்டிதேவர் துன்னாலைப் பகுதியையும், மாயாண்டிபாகுதேவர் கற்கோவளம் குறிச்சியையும் பாதுகாக்க சோளப் பேரரசனால் அனுப்பப்பட்டனர்.

இந்த ஐவரில் ஐயக்கதேவர் வம்சத்தில் வந்தவரே வேலுப்பிள்ளையும் அவர் மகன் பிரபாகரனுமாகும். ஐயக்கதேவர் பின் கரியதேவர்காராளர்ஐயன்வேலர்ஐயம்பெருமாள்வேலாயுதர்திருமேனியர்வெங்கடாசலம்குழந்தைவேற்பிள்ளைவேலுப்பிள்ளைதிருவேங்கடம்வேலுப்பிள்ளைபிரபாகரன் என்பதே இந்த வம்சத்தின் படிமுறையான வளர்ச்சியாகும்.

தமிழகத்தில் இருந்து வந்து சோழர் காலத்தில் வல்வையில் குடியேறிய போர்த் தளபதிகள் குடும்பமாக இவர்கள் இருந்தார்கள். இதனால் போர்க்குணம், விடுதலை போன்றன இவர்களின் இயல்பாக இருந்தது. வேலுப்பிள்ளை எல்லாளனுக்கு விளக்கு வைத்ததும், பிரபாகரன் பிறந்ததும் தற்செயலான நிகழ்வல்ல. தமிழ் ஈழ மண்ணின் வீரம் செறிந்த வரலாற்றின் தொடர்ச்சியே அது.

தஞ்சைப் பெருங்கோயில்களைக் கட்டிய சோழர்கள் போலவே சிவாலயங்களை கட்டுவதும் இவர்களுடைய குடும்ப இயல்பாக இருந்தது. திருமேனியர் வெங்கடாசலம் பிள்ளை அவர்களே வல்வை சிவன்கோயிலைக் கட்டினார். அவருடைய சகோதரர் குழந்தைவேற்பிள்ளை அவர்களே கொழும்பு செக்கடித் தெருவில் உள்ள கதிரேசன் கோயிலைக் கட்டினார். சோழர்கால வரலாற்றையும், பொன்னியின் செல்வன் போன்ற கல்கியின் வரலாற்று நாவல்களையும் உன்னிப்பாகப் படித்தால் வேலுப்பிள்ளை குடும்பத்தின் வாழ்வியல் நெறியை எளிதாக விளங்க முடியும்.

கல்கி, சாண்டில்யன் போன்ற எழுத்தாளர் கதைகளை பிரபாகரன் விரும்பிப் படித்ததும், கடற்புறா என்ற கடற்படை அரணை வல்வையில் அமைத்ததும் இதற்கான மேலதிக உதாரணங்களாகும். அதனால்தான் ஆழக்கடலெங்கும் சோழ மகராசன் ஆட்சி புரிந்தானே அன்று தமிழ் ஈழக்கடலெங்கும் எங்கள் கரிகாலன் ஏறி நடக்கிறான் இன்று என்று புதுவை இரத்தினதுரை பாடினார்.

மாவட்ட நில வழங்கல் பிரிவு அதிகாரியாக இருந்தபோது வேலுப்பிள்ளை வன்னியில் உள்ள பெருமளவு நிலங்களை படித்த வாலிபருக்கு ஊழலற்று பிரித்து வழங்கினார் . மாங்குளத்தில் உள்ள மணவாளன்பட்டை முறிப்பில் உள்ள கழுத்துமுறிச்சான் குளத்தின் அணையோடு ஐந்து ஏக்கர் நிலத்தை படித்த வாலிபனான எனக்கும் கொடுத்திருக்கிறார். எந்த ஊழலும் இல்லாமல், ஒரு நயா பைசா கொடுக்காமல் வாங்கினேன் என்பதைக் குறிக்கவே இதை எழுதுகிறேன். இப்படி என்போன்ற ஏராளம் இளைஞருக்கு வன்னியில் நிலத்தை வழங்கி, வன்னிக்கு பிரபாகரன் போக முன்னரே ஒரு பாதை போட்டவர் வேலுப்பிள்ளை.

இப்படியாக தமிழீத்தின் தந்தைப் பாத்திரம் என்றால் எத்தகையது என்பதைப் புரிய வேலுப்பிள்ளையையும் அவர் மகன் பிரபாகரனையும் விட வேறென்ன சான்றுகள் வேண்டும். பிரபாகரனைப் பெற்ற குற்றத்திற்காகவே நாம் வேலுப்பிள்ளையைத் தண்டிக்கிறோம் என்று சிங்கள இராணுவம் அறிவித்தது. தமிழீழத்தின் வீரத்தந்தை என்று அவரை நாம் கூறுவதற்கு இதைவிட வேறென்ன ஆதாரம் வேண்டும். பிரபாகரன்களை பெறுவதும், வேலுப்பிள்ளை போல வீரமாக வாழ்வதையும் விட தமிழீழத்தின் தந்தைகளுக்கு வேறென்ன பெருமை இருக்கப்போகிறது..

மீண்டும் அடுத்தவாரம் சந்திப்போம்.

அதுவரை நம்பிக்கைகளுடன்,

கி.செ.துரை 12.01.2010

நன்றி: அலைகள்

0 Responses to தமிழீழத்தின் வீரம் மிக்க தந்தை வேலுப்பிள்ளை (நீங்கள் அறிந்ததும் அறியாததும்)

Post a Comment

Followers