கிளிநொச்சி நகரம் தற்போது இராணுவ முகாம்களினால் நிரம்பிய நகரமாகவே காட்சி தருகின்றது. அங்கு மக்களை காணமுடியவில்லை. சில நூறு மீற்றர் தூரங்களுக்கு ஒரு முகாம் என கிளிநொச்சி இராணுவத்தினரால் நிரம்பியுள்ளது. படையினரின் சுற்றுக்காவல் நடவடிக்கைகளும் அங்கு அதிகம் என த அசோசியற் பிரஸ் செய்தி நிறுவனம் தனது செய்தி ஆய்வில் தெரிவித்துள்ளது.அதன் முழு வடிவம் வருமாறு:
கிளிநொச்சியில் பெருமளவான நெல்வயல்கள் களைகள் மூடி கிடக்கின்றன, ஆடுகளும், மாடுகளும் காணாமல் போயுள்ளன. உளவு இயங்திரங்களையும், உந்துருளிகளையும் அங்கு கணமுடியவில்லை. கட்டடங்களும், வீடுகளும் குண்டு வீச்சுக்களால் நிர்மூலமாகி கற்குவியல்களாக கிடக்கின்றன.
போர் நிறைவுபெற்று எட்டு மாதங்கள் கடந்த நிலையில் முன்னர் விடுதலைப்புலிகளின் கட்டுப்பாட்டில் இருந்த பிரதேசங்களில் வாழந்த மக்கள் தமது இடங்களுக்கு சென்ற போது அங்கு அவர்களின் வாழ்க்கைக்கு தேவையான எவற்றையும் காணமுடியவில்லை.
நாம் மீண்டும் எமது கிராமத்திற்கு வந்தது மகிழ்ச்சி தருகின்றது. ஆனால் அடுத்து நாம் என்ன செய்வது என்பதில் தான் குழப்பம் நிலவுகின்றது என சுப்ரமணியம் முத்துராசு (66) தெரிவித்துள்ளார். நாம் விவசாயத்தை ஆரம்பிக்க வேண்டும் ஆனால் அதற்கான பொருட்கள் இல்லை. நாம் வெறும் கையுடன் நிற்கிறோம் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
முத்துராசு தனது கிராமமான கரைச்சியில் முன்னர் நெற்பயிர் செய்கையில் ஈடுபட்டதுடன், கால்நடை வளர்ப்பிலும் ஈடுபட்டிருந்தார். ஆனால் தற்போது அதனை மீண்டும் ஆரம்பிப்பதற்கு அவரிடம் எதுவும் இல்லை. ஆனால் அவருக்கான பொறுப்புக்கள் தற்போது மேலும் அதிகரித்துள்ளது.
போரில் அவரின் மகளின் கணவர் இறந்துவிட்டார், தனது மகளையும், அவரின் ஐந்து பிள்ளைகளையும் காப்பாற்ற வேண்டிய பெரும் பொறுப்பு அவரின் முன் உள்ளது.
மீள்குடியேற்றப்பட்ட மக்களுக்கு உணவுப்பொருட்களும், பணமும் வழங்கப்பட்டதாக அரசு கூறுகின்றது. ஆனால் அரசினால் வழங்கப்படும் உதவிகள் மக்களுக்கு போதுமானவை அல்ல என தெரிவிக்கப்படுகின்றது.
எமது நாடு வறுமையானது, எனவே எம்மால் மக்களுக்கு தேவையான எல்லாவற்றையும் ஒரே தடவையில் வழங்க முடியாது என இடம்பெயர்ந்த மக்கள் தடுத்து வைக்கப்பட்டிருந்த முகாம்களுக்கு பொறுப்பான இராணுவ அதிகாரி மேஜர் ஜெனரல் கமால் குணரட்னா தெரிவித்துள்ளார்.
எமது ஊடக நிறுவனத்தை சேர்ந்த ஊடகவியலாளர்களுக்கு அங்கு செல்வதற்கான அனுமதிகள் மிகவும் குறைவாகவே வழங்கப்படுவதுண்டு. சிறீலங்காவில் அரச தலைவருக்கான தேர்ததல் நடைபெறவுள்ளது. தற்பேதைய அரச தலைவரான கடும்போக்குடைய மகிந்த ராஜபக்சாவும், அவரை எதிர்த்து முன்னாள் இராணுவ ஜெனரல் சரத் பொன்சேகாவும் போட்டியிடுகின்றனர்.
இருவரையும் தென்னிலங்கை மக்கள் போர் வீரர்களாகவே பார்க்கின்றனர். ஆனால் இருவரும் தற்போது தமிழ் மக்களின் வாக்குகளை குறிவைத்துள்ளனர். அதற்காக அவர்கள் போரினால் சிதைவடைந்த சிறுபான்மை தமிழினத்திற்கு பல சலுகைகளை வழங்க முற்பட்டுள்ளனர்.
கால் நூற்றாண்டுக்கு மேலாக இந்துசமுத்திரத்தில் அமைந்துள்ள இலங்கை தீவில் தமிழ் மக்களும், சிங்கள மக்களும் மோல்களில் ஈடுபட்டு வந்தனர். தமிழ் மக்கள் தமக்கு தனித் தமிழீழம் கேட்டு போராடி வந்தனர்.
விடுதலைப்புலிகள் வசம் பெருமளவான பிரதேசம் கட்டுப்பாட்டில் இருந்து. அங்கு அவர்களின் அரசு இருந்தது. காவல்துறை, நீதிமன்றம், வங்கி என ஒரு நாட்டுக்குரிய கட்டமைப்பை அவர்கள் கொண்டிருந்தனர். அவர்களின் நிர்வாக தலைநகராக கிளிநொச்சி விளங்கியது.
விடுதலைப்புலிகளின் கட்டுப்பாட்டில் இருந்த பகுதிகளின் பொருளாதார நிலமை பலவீனமாகவே இருந்தது. அதற்கு போரும், அரசின் தடைகளுமே காரணம். எரிபொருளில் இருந்து சீமேந்து வரையிலான எல்லா பொருட்களும் தடை செய்யப்பட்டவையாகவே இருந்தன.
எனினும் விவசாயம் மூலம் தமது பொருளாதார வளங்களை கட்டியமைத்த விடுதலைப்புலிகள் தமது பகுதிகளில் சிறிய கடைகள், தொழிற்சாலைகள் என நிறுவியிருந்தனர். அங்கு சவாக்காரம், கொலோன் போன்ற பொருட்களும் உற்பத்தி செய்யப்பட்டன.
ஆனால் கடந்த வருடம் ஜனவரி மாதம் இராணுவம் அந்த பகுதி மீது தாக்குதலை ஆரம்பித்த போது எலலாம் காணாமல் போய்விட்டன. விடுதலைப்புலிகளும், மக்களும் மேலும் ஆழமான பகுதிக்கு தள்ளப்பட்டனர். சிலர் தமது விலை உயர்ந்த பொருட்களை உத்துருளிகளுடன் எடுத்து சென்றனர்.
ஆனால் இறுதிக்கட்டத்தில் அவர்கள் எல்லாவற்றையும் கைவிட்டு விட வேண்டிய நிலையே ஏற்பட்டது. விடுதலைப்புலிகளின் வங்கியில் பணம் வைப்பு செய்தவர்களின் பணமும் காணாமல் போய்விட்டது.
ஐக்கிய நாடுகள் சபையின் தகவல்களின் படி 7,000 இற்கு மேற்பட்ட மக்கள் இறுதிக்கட்ட சமரில் கொல்லப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. 300,000 தமிழ் மக்கள் அரசினால் பலவந்தமாக முகாம்களில் அடைத்து வைக்கப்பட்டனர்.
கிளிநொச்சி தற்போது இராணுவ முகாம்களினால் நிரம்பிய நகரமாகவே காட்சி தருகின்றது. சில நூறு மீற்றர் தூரங்களுக்கு ஒரு முகாம் என கிளிநொச்சி இராணுவத்தினரால் நிரம்பியுள்ளது. படையினரின் சுற்றுக்காவல் நடவடிக்கைகளும் அங்கு அதிகம்.
விடுதலைப்புலிகளின் நினைவு சின்னங்கள் எல்லாம் அழிக்கப்பட்டு, படையினருக்கான நினைவு மண்டபங்கள் அங்கு எழுப்பப்பட்டுள்ளன. சேதமற்ற எந்த கட்டிடத்தையும் அங்கு காணமுடியாது. வீதிகள் வெறிச்சோடிக் கிடக்கின்றன. ஏனெனில் 120,000 மக்கள் வாழந்த பிரதேசத்தில் தற்போது 8,000 மக்களே குடியமர்த்தப்பட்டுள்ளனர்.
முகாம்களில் தங்கியிருந்த மக்களில் 70 விகிதமானவர்கள் மீள்குடியேற்றம் மற்றும் உறவினர்களின் இடங்களுக்கு என சென்றுவிட்டதாக குணரட்னா தெரிவித்துள்ளார். ஏனையவர்கள் இடைத்தங்கல் முகாம்களில் தங்கியுள்தாகவும், அவர்களின் பிரதேசங்கள் சுத்தம் செய்யப்பட்டதும் அவர்கள் குடியமர்த்தப்படுவார்கள் எனவும் குணரட்னா தெரிவித்துள்ளார்.
மீளக்குடியமர்த்தப்பட்ட மக்களுக்கு 250 டொலர் பணத்தை ஐக்கிய நாடுகள் சபையின் அகதிகளுக்கான அமைப்பு வழங்கியுள்ளது. மேலும் ஆறு மாதங்களுக்கு தேவையான உணவுப் பொருட்களும், 12 கூரை தகடுகளும், மறைப்பு விரிப்புக்களும் வழங்கப்பட்டுள்ளன.
கரைச்சி பகுதியில் உள்ள கிராமங்களில் படையினர் சிறு மண் குடிசைகளை அமைத்து கொடுத்துள்ளனர்.
ஆனால் தமது வாழ்க்கையை மீண்டும் ஆரம்பிப்பதற்கு அவை போதுமானவை அல்ல. எமது பழைய வாழக்கையை மீண்டும் ஆரம்பிப்பதற்கு இது போதுமா? என இராமையா இராஜாமணி கேள்வி எழுப்பியுள்ளார். கிளிநொச்சிக்கு தெற்கே உள்ள புளியங்குளம் கிராமத்தில் உள்ள தனது குடிசையின் மறைப்புக்கு அவர் அரசினால் வழங்கப்பட்ட தகரங்களை பயன்படுத்தியுள்ளார்.
தனக்கு வழங்கப்பட்ட 250 டொலர்களில் 150 டொலர்களை தான் சேமித்துள்ளதாகவும், அதனை கொண்டு மீண்டும் விவசாயத்தை ஆரம்பிக்கப்போவதாகவும் அவர் தெரிவித்துள்ளார். எனினும் அவரின் இரண்டு ஏக்கர் நெல்வயலை மீண்டும் பயிரிடுவதற்கு இதனை போல இருமடங்கு தொகை தேவை.
தமிழ் மக்களின் மீள்குடியேற்ற நடவடிக்கை தொடர்பாக அரசிடம் எந்த திட்டமும் இல்லை என தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர் சுரேஸ் பிரேமச்சந்திரன் தெரிவித்துள்ளார். அரசு தனியார்களின் காணிகளை படைத்தளங்களை அமைப்பதற்கு பயன்படுத்தி வருவதுடன், அனைத்துலக உதவி நிறுவனங்களையும் மக்களுக்கு உதவிகளை மேற்கொள்ளவிடாது தடுத்து வருவதாக அவர் குற்றம் சுமத்தியுள்ளார்.
ஆனால் அரசு தனது பாதுகாப்பு நடவடிக்கைகளை குறைக்கப்போவதில்லை என குணரட்னா தெரிவித்துள்ளார். இந்த கிராமங்களில் மீண்டும் விடுதலைப்புலிகள் தலைதூக்குவதற்கு நாம் அனுமதிக்கப்போவதில்லை என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
மீள்குடியேற்றம் மேற்கொள்ளப்பட்ட கிராமங்களுக்கு தாம் உணவுப் பொருட்களையும், சுகாதார பொருட்களையும் வழங்கியுள்ளதாக யுனிசெஃப் அமைப்பின் பேச்சாளர் சுலக்சினி பெரேரா தெரிவித்துள்ளார். எனினும் மக்கள் தமது பழைய வாழ்வை எட்டுவது மிகவும் கடினமானதாக உள்ளதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
சிலர் தமது வாழ்வுக்காக கடுமையாக முயன்று வருகின்றனர். இராமசாமி கந்தசாமி (50) என்ற மூன்று பிள்ளைகளின் தந்தை முன்னர் வீதியோரத்தில் சிறிய உணவகத்தை நடத்தி வந்திருந்தார். அவரிடம் 600 ஆடுகளும், மாடுகளும் இருந்தன.
ஆனால் அவர் அவற்றை எல்லாம் விட்டுவிட்டு ஓடவேண்டிய நிலை ஏற்பட்டது. அதனால் அவருக்கு ஏற்பட்ட இழப்பு 40,000 டொலர்களாகும் என அவர் தெரிவித்துள்ளார். தற்போது அவர் பிஸ்கட்டுகளையும், தேனீரையும், சிகரட்டையும் விற்பனை செய்து வருகின்றார்.
அவருக்கு கிடைத்த உதவி பொருட்களையும், பணத்தையும் கொண்டு சிறிய குடிசையை தனது பழைய கடைக்கு அருகில் அமைத்துள்ளார். நாம் எல்லாவற்றையும் இழந்து விட்டோம், ஆனால் எவ்வாறு வியாபாரம் செய்வது என்பது எனக்கு தெரியும். சிறிய உதவியுடன் நான் முன்னுக்கு வருவேன் என நம்பிக்கையுடன் கூறினார் கந்தசாமி என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.






0 Responses to கிளிநொச்சி நகரமெங்கும் இராணுவ முகாங்கள்: ஏ.பி