பெருமதிப்பிற்கும் பேரன்பிற்குமுரிய சுவிஸ் வாழ் தமிழீழ மக்களே!,எமது தாயகத்திலிருந்து வேரறுக்கப்பட்டு உரிமை இழந்தவர்களாக, ஏதிலிகளாக அவதியுற்ற வாழ்விற்கு இன்றைய ஈழத்தமிழ்ச் சமூகம் பின்தள்ளப்பட்டதானது வேதனையான நிலையை தோற்றுவித்திருக்கின்றது.
எமது பாரம்பரிய பூமியிலிருந்து நாம் அடித்து விரட்டப்பட்டு அந்த மண் சிங்களக் குடியேற்றங்களுக்கு உள்ளாக்கப்பட்டு வருகின்றது. தமிழர் தாயகப் பரப்பனைத்தும் பெரும் வலுக்கொண்ட இராணுவ ஆக்கிரமிப்பிற்கு உள்ளாக்கப்பட்டு எமது வாழ்வாதாரங்கள் சூறையாடப்பட்டு எமது மக்களின் வாழ்வுரிமை அழித்தொழிக்கப்பட்டுள்ளது.
பேச்சுரிமை, ஒன்றுகூடும் உரிமை, காலாச்சார விழுமியங்களை பின்பற்றும் மற்றும் வளர்த்தெடுக்கும் உரிமை என அனைத்து உரிமைகளும் மறுக்கப்பட்டு கீழ்த்தர உயிரினங்களாக எமது மக்கள் நடாத்தப்படுகின்றனர்.
பல்லாயிரக்கணக்கில் எமது இளம் சமூகம் அதிலும் குறிப்பாக பெண்கள் சிறைப்பிடிக்கப்பட்டு மூடப்பட்ட சிறைகளுக்குள் சீரழிக்கப்பட்டு வருகின்றனர்.தமிழர் மீதான ஒரு இனச்சுத்திகரிப்பு நடவடிக்கையை கடந்த 60 ஆண்டுகாலமாக சர்வதேசத்தின் கண்டனத்திற்கும் ஆளாகாமல் சிங்கள அரசுகள் செய்து வருகின்றன.
எம் இனம் தாயகத்தில் எதிர்கொள்ளும் அடக்குமுறைக்கு எதிராக புலம்பெயர் தமிழ் சமூகம் காலம் காலமாக குரல்கொடுத்து வந்துள்ளது. தாயகம், தேசியம், தன்னாட்சி அதிகாரம் ஆகிய கோட்பாடுகளின் அடிப்படையில் எம்மிடமிருந்து ஆங்கிலேயர்களால் பறிக்கப்பட்ட இறைமை மீண்டும் எம்மிடம் ஒப்படைக்கப்படல் வேண்டும் என்று கடந்த பல தசாப்தங்களாக மக்கள் போராட்டங்கள் மூலம் கோரிக்கை விடுத்து வந்துள்ளனர்.
சிங்கள அரசின் இனஅழிப்பு நடவடிக்கையின் சாட்சிகளாக அனைத்துலக மட்டத்தில் அகதிகளாகப் புலம்பெயர்ந்த தமிழர்கள் குரல்கொடுத்து வந்தபோதும், இறுதிப்போரில் இருபத்தையாயிரம் மக்கள் திட்டமிட்டுக் கொல்லப்பட்டுள்ளனர் என்று சர்வதேச ஊடகங்கள் அம்பலப்படுத்தியபோதும் உலகநீதியின் கண்கள் இறுகவே கட்டப்பட்டிருக்கின்றது. இந்நிலையானது தமிழர்களை வேதனைகொள்ளச் செய்துள்ளதை நாம் அறிவோம்.
அண்மையில் ஐ.நா.வின் பேச்சாளர் Gordon Weiss நாற்பதாயிரத்திற்கும் மேற்பட்ட அமக்கள் கொல்லப்பட்டிருக்கலாம் என அறிக்கை விட்டிருப்பது சகலரும் அறிந்ததே. இருந்தும் சர்வதேசத்தின் பாரமுகமானதும் இனஅழிப்பு நடவடிக்கைக்கு மறைமுகமாகவேனும் ஒத்துப்போகும் செயலானது ஈழத்தமிழர்களின் அரசியல் உரிமைக்கான போராட்டத்தில் எம்மை அடுத்த பரிணாம வளர்ச்சி நோக்கிச் சிந்திக்கவும் செயலாற்றவும் வைத்துள்ளது என்பதே உண்மை.
தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பானது ஈழத்தமிழர் உரிமைகளுக்காக சர்வதேச நாடுகளின் பக்கச்சார்பற்ற ஆக்கபூர்வமான செயற்திட்டத்தை என்றுமே வலியுறுத்தியும் ஆதரித்தும் வந்துள்ளனர் என்பது அனைவரும் அறிந்த உண்மை.மனித உரிமைக் காப்பையும் ஜனநாயக வழி அமைப்புக்களையும் ஊக்குவிக்கும் அல்லது ஏற்றுக்கொள்ளும் மேற்குலக நாடுகளிடம் நாம் உரிமை கேட்பவர்களாக உருவாக்கப்பட்டுள்ளோம்.
அவர்தம் அதிகார பீடங்களுடனும் அரசியல் பீடங்களுடனும் தமிழர்கள் தமது தாயக அரசியல் அபிலாசைகள் தொடர்பாக பரிமாறுதல்களைச் செய்வதற்கு தெளிவான கொள்கை கொண்ட மக்கள் அரசியல் அமைப்பு அத்தியாவசியமாகின்றது.
1985ல் இருந்து அகதிகளாக சுவிஸ் நாட்டிற்குள் வந்துசேர்ந்த தமிழர்கள் ஏனைய சமூகங்களோடு ஐக்கியப்பட்டு தமது அரசியல் உரிமைக்கான பணியை முன்னெடுப்பது காலத்தால் உருவான நிலையாகும். எமது தாயக விடுதலையில் எமது மக்களின் அபிலாசைக்கு முரணாக எவரும் செயற்படுவதை மறுத்து தமிழர்களின் அரசியல் உரிமை தொடர்பாக தமிழ் மக்களை ஜனநாயகவழியில் முடிவெடுக்கக்கூடிய தீர்வினை சர்வதேசத்துடன் இணைந்து முன்வைக்கப் பணியாற்றுவது மிகவும் இன்றியமையாத வழிமுறையாகும்.
அந்த வகையில் இன்று சுவிஸ் நாட்டில் அரசியல், மொழி, கல்வி மற்றும் கலாச்சார விழுமியங்கள் போன்றஅனைத்துவிடயங்களையும்வளர்த்தெடுக்கும் பணிக்கென அமைக்கவிருக்கும் சுவிஸ் ஈழத்தமிழர் அவைதனை நாமும் பாராட்டுகின்றோம்.
1977இல் வட்டுக்கோட்டைத் தீர்மானத்தின்மீதான வாக்கெடுப்பிலும் 2010இல் சுவிஸில் இடம்பெற்ற மீள்வாக்கெடுப்பில் கிடைக்கப்பெற்ற ஆணைக்கமையவும் பணியாற்றுவோம் என்ற சுவிஸ் ஈழத்தமிழர் அவையின் உறுதியான, தெளிவான நிலைப்பாடானது இங்கு வாழும் தமிழர்கள் ஒவ்வொருவருக்கும் நம்பிக்கையை அளிக்கின்றது.
சுவிஸ் நாட்டு மக்களுடன் ஐக்கியத்தை வளர்த்து பரஸ்பரம் ஒருவரை ஒருவர் மதிக்கக்கூடிய, வெளிப்படையான கட்டுமானத்தை கொண்டிருக்கும் என்று நம்புகின்றோம். நாம் பறிகொடுத்த எமது தாயகம் சார்ந்த உணர்வுகளை பிறர் ஏற்றுக்கொள்ளும் வகையில் சொல்வதற்கும் அந்த உரிமைகளை மீட்பதற்காக செயலாற்றுவற்கும் சரியான வேட்பாளர்கள் முன்வருவதோடு தமிழ் மக்களின் அதிகபட்ச ஆதரவினை அவர்களுக்கு வழங்கவேண்டும் என்றும் கேட்டுக்கொள்கின்றோம்.
தமிழர் மீதான சிங்கள அரசுகளின் இனஅழிப்பு நடவடிக்கைகளை அம்பலப்படுத்தி சர்வதேசப் போர்க்குற்றவாளிகளாக அவர்களை இனங்காட்டுவதற்கும், சித்திரவதை முகாம்களிலும் திறந்தவெளிச் சிறைகளிலும் தடுத்து வைக்கப்பட்டுள்ள மக்களை விடுவிப்பதற்கும்,பாதுகாப்பான இறைமை கொண்ட தாயக விடுதலைக்கும், சுவிஸ்வாழ் தமிழர்களின் சமூக பொருளாதார அரசியல் மேம்பாட்டிற்கும் ஐக்கியத்திற்கும் காலம் தாழ்த்தாது சுவிஸ் ஈழத்தமிழர் அவை பணியாற்றவேண்டும் என்று வேண்டி அமையவிருக்கும் அச்சபையை இன்றே வாழ்த்துகின்றோம்.
நன்றி'
தமிழரின் தாகம் தமிழீழத் தாயகம்"
வி.ரகுபதி
உலகத்தமிழர் ஒருங்கிணைப்புக்குழு - சுவிஸ் கிளை
0 Responses to ஈழத்தமிழர் அவைக்கான உறுப்பினர் தேர்விற்கு சுவிஸ் வாழ் தமிழ் உறவுகள் வாக்களிப்போம்!