Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

ஏதோ ஒன்றை கலைஞர் செயலில் செய்துள்ளார்…
செம்மொழி மாநாடு மேலும் தமிழுணர்வு தரவேண்டும்..

தமிழக அரசு நடாத்தும் செம்மொழி மாநாடு நாளை ஆரம்பிக்கிறது. உலகம் முழுவதிலும் இருந்து சுமார் 4000 ற்கும் மேற்பட்ட தமிழ் அறிஞர்கள் கோவையை சென்றடைந்திருக்கிறார்கள். ஆய்வமர்வுகளுக்கு தலைமை தாங்குவோரில் முக்கிய ஒருவராக ஈழத்து மூதறிஞர் பேராசிரியர் கா. சிவத்தம்பியும் இடம் பெறுகிறார். நாளை ஜனாதிபதி பிரதிபா பாட்டீல் மாநாட்டை ஆரம்பித்து வைக்கிறார்.

இந்தியாவில் உள்ள மொழிகளில் செம்மைப்பட்ட மொழி என்று தமிழ் அங்கீகரிக்கப்பட்டிருக்கிறது. அந்தச் சிறப்பைப் போற்றி தமிழகத்தில் பல விழாக்கள் நடைபெற்றுவிட்டன. இப்போது முதலமைச்சர் பதவியில் இருந்து கலைஞர் எடுக்கும் அவரது வாழ்வின் கிளைமாக்ஸ் விழாவாக இது இடம் பெறுகிறது. இதற்குப் பிறகு பதவியில் இருந்து ஓய்வு பெறுவார் கலைஞர் என்று நம்பப்படுகிறது. தற்போது 75 திரைப்படங்களுக்கு கதைவசனமெழுதிவிட்ட கலைஞர் எஞ்சியுள்ள காலத்தில் விரைவாக மேலும் 25 திரைப்படங்களுக்கு வசனமெழுதி 100 ஐத் தொட வாய்ப்புண்டு. அவரது நண்பர்களான எம்.ஜி.ஆர், சிவாஜி போன்றவர்கள் 100 திரைப்படங்களை தொட்டது போல கலைஞரின் 100 வது திரைப்படம் வர வாய்ப்புண்டு.


முன்னர் இந்திராகாந்தியை தேர்தலில் தோற்கடித்த வட இந்தியரான ராஜ் நாராயண் தமிழ் என்பது தாசி மொழி என்று பேசியிருந்தார். இப்போது வடஇந்திய அரசொன்று தமிழை செம்மொழியாக ஏற்பதுவரை முன்னேறியிருக்கிறது. தமிழ் என்பது உயர் தனி செம்மொழி என்பது உலகில் உள்ள மற்றய இனங்களுக்கு தெரியுமா தெரியாதா என்பதைவிட தமிழ் நாட்டில் உள்ள தமிழருக்கு தெரியுமா என்பது முக்கிய கேள்வி. தமிழ் செம்மொழி என்பதை அவர்களுக்கே முதலில் விளங்கப்படுத்த வேண்டும். ஆகவே கலைஞரின் முயற்சி பாராட்டப்பட வேண்டியதுதான்.

இதேவேளை தமிழை நீதிமன்ற மொழியாக்க வேண்டுமென்று தமிழகத்தில் போராட்டம் நடைபெறுகிறது. இதை அதிமுக இப்போது அமோகமாக முன்னெடுத்துள்ளது. செம்மொழி மாநாடு முடிவடைய அதிமுகவின் போராட்டமும் அடங்கிவிடும், தமிழ் நீதிமன்ற மொழியாக வேண்டுமென்பது ஜெயலலிதாவின் இதயத்தில் இருந்திருந்தால் அவர் முதல்வராக இருந்த காலத்தில் அதைச் செய்திருக்க வேண்டும். (எனினும் இன்று சென்னை உயர் நீதிமன்றில் தமிழ் மொழியில் இடம் பெற்ற வாதம் ஏற்றுக் கொள்ளப்பட்டது)


தமிழை நீதிமன்ற மொழியாக்குவதைவிட அதை ஆலயங்களில் வழிபாட்டு மொழியாக்க முடியாமல் தடுமாறுகிறது தமிழினம். பார்ப்பனர்களின் எதிர்ப்புக்கு அஞ்சி கோயில்களை கைவிட்டு நீதிமன்றுக்கு வந்துள்ளது அதிமுக என்று மற்றவர்கள் ஜெயலலிதா மீது விமர்சனம் வைக்க இடமிருக்கிறது.

மேலும் நம் புலம் பெயர் நாடுகளில் அவ்வப்போது பகிஷ்கரிப்பிற்கு சங்கங்கங்கள் தோன்றுவதுண்டு. அவை பகிஷ்கரிக்கும்படி இணையம் மூலம் வேண்டுகோள் விடுவது இப்போது வழமையாகிவிட்டது. கலைஞர் தமிழுக்கு செய்ததைவிட செய்யாதது அதிகம் என்று கண்டித்துள்ளது கனடாவில் இருந்து ஒரு சங்கம். கலைஞர் செய்தாரா செய்யவில்லையா என்பதைவிட தமிழுக்கு நாம் என்ன செய்தோம் என்று தம்மைத்தாமே கேட்க வேண்டிய பொறுப்பு புலம் பெயர் சங்கங்களுக்கு இருக்கிறது என்ற விமர்சனம் அவர்கள் மீது இருக்கிறது. இப்படியான பகிஷ்கரிப்பு வேலைகளை புலம் பெயர் தமிழரின் பொதுப்பட்ட கருத்தாக தமிழக மக்கள் பார்ப்பதாக தெரியவில்லை.


செம்மொழி மாநாட்டுக்கு கட்டுரை எழுதி, இப்போது அங்கு போய்ச் சேர்ந்துள்ள புலம் பெயர் அறிஞர்களில் பெருந்தொகையானோர் கடந்த வருடம் இங்கு நடைபெற்ற ஊர்வலங்களில் முழக்கமிட்டவர்கள். இவர்களில் பலர் நாடுகடந்த அரச சிந்தனையாளர்கள். இவர்கள் கலைஞர் ஈழத்திற்காக செய்தது சரியா தவறா என்று கேட்காமலே பம்மி மறுகி அங்கே போயுள்ளார்கள். இவர்களுடன் ஒப்பிடும்போது கலைஞரை எப்படிக் குறைசொல்ல முடியும்.

கலைஞரை நம்பி தமிழீழப் போராட்டம் ஆரம்பிக்கப்படவில்லை. அதை ஆரம்பித்தவர்கள் நாம்தான் அதை போராடிப் பெற வேண்டியதும் நாமே. இந்த விவகாரத்தில் கலைஞரை இழுத்துவந்து குற்றவாளிக் கூண்டில் நிறுத்த யாதொரு முகாந்திரமும் இல்லை என்று பேராசிரியர் கா. சிவத்தம்பி குறிப்பிட்டுள்ளார். புலம் பெயர் நாடுகளில் இருந்து வரும் அம்புகளை முனை மழுங்கச் செய்ய நன்கு திட்டமிட்டு காரணத்தை கண்டு பிடித்துள்ளார். பாம்பின் கால் பாம்பறியும் என்பதற்கு இதைவிட நல்ல உதாரணம் தேவையில்லை.


அன்று தமிழாராய்ச்சி மாநாடு யாழ்ப்பாணத்தில் நடந்தபோது பலர் எதிர்த்தார்கள். இதனால் என்ன பயன் என்றும் கேட்டார்கள். ஆனால் ஒரு விடுதலைத் தீயை அந்த மாநாடு ஏற்றி வைத்தது. இன்றுவரை அது சுடர்விட்டு எரிகிறது. அதுபோல செம்மொழி மாநாடும் ஏதோ ஒரு தாக்கத்தை ஏற்படுத்தும். செம்மொழி மாநாடும் ஈழத் தமிழருக்கு நன்மை தரும் என்று கலைஞர் குறிப்பிட்டுள்ளார். இந்த மாநாட்டில் ஈழத்தின் உணர்வுக் குரல்கள் ஒலிப்பதற்கும், புதிய பதட்டம் உருவாவதற்கும் இடமிருக்கிறது.

தமிழுக்காக ஒன்றையும் செய்யாமல் கூச்சல் போடுவதைவிட ஏதோ ஒன்றை செய்வது நல்லது. இத்தனை கோடி ரூபாய்களை கொட்டி, தமிழுக்காக ஒரு மாநாடு நடைபெறுகிறது. அதை மேலும் செம்மை பெற செய்வதே சாலச்சிறந்தது. செம்மொழி மாநாடு சிறுசிறு அலகுகளாக பிரிக்கப்பட்டு சகல நாடுகளுக்கும் கொண்டு செல்லப்பட வேண்டும். இதில் பல குறைபாடுகள், அதிருப்திகள் வரும். கடும் விமர்சனங்களை பலர் முன் வைப்பார்கள்.


இருந்தாலும் ஒரு செயலை செயல்வடிவில் தமிழுக்காக செய்கிறார்கள். அதை உலகம் முழுதும் பரவி வாழும் 4000 தமிழ் அறிஞர்கள் ஏற்றுக்கொண்டு அங்கு போயுள்ளார்கள். சரியோ தவறோ அவர்கள் பணி வெற்றிபெற வேண்டும். தமிழ் அன்னை தன்னை மேலும் அழகுபடுத்த வேண்டும். செம்மைப்பட்ட ஒரு மொழி செம்மைப்படாத ஓர் இனத்திற்கு வேண்டுமா என்று மற்றவர்கள் கேட்கும்படியாக நாம் நடக்கக் கூடாது. முதலில் செம்மொழி மாநாட்டை செம்மையாக நடைபெற வேண்டுமென வாழ்த்துவோம்.

அலைகள் 22.06.2010

0 Responses to செம்மொழி மாநாடு ஒரு புலம்பெயர் பார்வை..

Post a Comment

Followers