Content feed Comments Feed
  “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

தீப்பற்றி எரிந்த காடுகள் போல் தமிழீழ மண் தீய்ந்துபோய் உள்ளது. மண் மட்டுமல்ல, அந்த மக்களது இதயங்களும் கருகித்தான் போயுள்ளது. நாளும் பொழுதுமாக வன்னி மக்கள் இப்போதும் வதைபட்டுக்கொண்டுதான் உள்ளார்கள்.

மீள் குடியேற்றம் என்ற போர்வையில் மீண்டும், மீண்டும் அவர்கள் அலைக்கழிக்கப்பட்டுக் கொண்டுள்ளார்கள். வாழ்வைத் தொலைத்தவர்களும், வாழும் வகையைத் தொலைத்தவர்களும், ஊனமுற்றவர்களுமாக அந்த மண் சோபை இழந்து சோகமாகக் காட்சி தருகின்றது.

அவர்களது உடலில் உயிரைத் தவிர அவர்களுக்கென்று எதுவுமே மிச்சமாக இல்லை. அவர்களது அவலங்களை அப்படியே வெளிக் கொணர்ந்து உலகின் மனச்சாட்சியைத் தட்டும் பணியை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும் தற்போது ஆரம்பித்துள்ளது.

அழுவதற்கோ, ஆறுதல்படுத்துவதற்கோ, ஆதரவுக் கரம் நீட்டுவதற்கோ கூட அவர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. நாட்டுக்காகப் பிள்ளைகளைப் பெற்றுக் கொடுத்தவர்கள், அவர்களது கல்லறைகளில் கூட கண்விழிக்க அனுமதியின்றித் தவிக்கின்றார்கள்.

இத்தனை அவலங்கள் நிறைந்த இன்றைய தாயக பூமி இங்கிருந்து செல்லும் சில ஈனத் தமிழர்களுக்கு சொர்க்க பூமியாகக் காட்சி தருவதுதான் மிகப் பெரும் கொடுமையாக உள்ளது. விபச்சாரிகள் தப்பு, சரி என்று எதையுமே கணக்கிடுவதில்லை என்பது போலவே, இவர்களுக்கும் அந்த மண்ணின் அவலங்களும், அந்த மக்கள் மீது நடாத்தப்படும் அசிங்கங்களும், அவமானங்களும் துடைத்தெறியக்கூடிய புனிதங்களாகத் தோன்றுகின்றன.

இவர்களுக்காகவென்றே சிங்கள தேசமும், அதன் கூலிக் குழுக்களும் செய்து கொடுக்கும் வசதிகளும், வாய்ப்புக்களும் இவர்களுக்கு தமிழீழம் தற்போது தேன் பாயும் பூமியாகக் காட்சி தருகின்றது. மனிதன் இழக்கக் கூடாதது மானம், இழக்க முடியாதது சுய கௌரவம். இந்த இரண்டையும் இழந்துவிட்ட இரண்டும் கெட்டான்களுக்கு சிங்களம் வரம் தரும் கர்ப்பக்கிருகமாகக் காட்சி தருவதில் வியப்புக் கொள்ள ஒன்றும் இல்லை.

தமிழீழம் சூறையாடப்படுகின்றது. தமிழ் மக்கள் அச்சத்தினுள் வாழ நிர்ப்பந்திக்கப்படுகின்றார்கள். சிங்களக் குடியேற்றங்களால் தமிழீழம் திணறுகின்றது. கிழக்கைப் போல், வவுனியா போல் வன்னியும், யாழ்ப்பாணமும் சிங்கள மயப்படுத்தப்படுவதால், அங்கும் தமிழர்கள் சிறுபான்மை இனமாக அவலப்படும் நிலை படிப்படியாக உருவாக்கப்பட்டு வருகின்றது.

அச்சப்படுத்தப்படும், வாழ்வுரிமை மறுக்கப்படும் தமிழர்கள் கடல் கடந்து தப்பிச் செல்வதைக் கறியாகக் கொண்டிருப்பதால், சிங்களத்தின் 'சிங்கள தீப' கனவு நனவாகும் நிலையை அடைந்து வருகின்றது.

இந்த வருடங்களில் உல்லாசப் பயணமாக அந்தத் தமிழ் மண்ணைத் தரிசித்தவர்கள், இன்னமும் சில வருடங்களில் யாழ்ப்பாணத்தில் 'ஆயி போவன்' சொல்லியே தரை இறங்க வேண்டிய அவலத்தைச் சந்திக்கப் போகின்றோம் என்பதை இப்போதே உணர்ந்து கொள்ள வேண்டும்.

சின்னச் சின்ன ஆசைகளோடு சிறிலங்கா சென்று திரும்பும் எமது உறவுகள், எம் இனத்தின் எதிர்காலத்தையும் சேர்த்தே காவு கொடுக்கிறார்கள் என்பதில் சந்தேகம் இல்லை. முள்ளிவாய்க்காலுடன் எல்லாம் முடிந்துவிட்டது என்று முழுக்குப் போடும் நம்மவர்கள், இன்றும் விடுதலை வேட்கையுடன் தமிழீழ மண்ணும், மக்களும், புலம்பெயர் தமிழர்களும் யாக வேள்வி நடாத்துவதைப் புரிந்து கொள்ள வேண்டும்.

தனி ஒரு மனிதனாகத் தனக்கான சுமையுடன் சிவந்தன் என்ற தமிழீழ விடுதலைத் தீப்பொறி லண்டனிலிருந்து ஜெனிவா நோக்கித் தனது போர்ப் பயணத்தைத் தொடர்ந்த வருகின்றது. பத்து நாட்களாக நடந்து பாரிஸ் நகரின் ஊடாகப் பயணப்பட்டுள்ள இந்த அக்கினிக் குஞ்சு புலம்பெயர் தேசத்தின் தமிழ் மக்களது திறக்காத மனக் கதவுகளை உடைத்துத் தமிழீழக் கனவை விதைக்கப் போகின்றது. அது சிங்கள தேசத்தின் பிடியிலிருந்து தமிழீழத்தை முற்றாக மீட்டெடுக்கும் புதிய போர்க் களத்தைப் புயலாக மாற்றப் போகின்றது.

இந்த யதார்த்தத்தை அனைவரும் புரிந்து கொள்ள வேண்டும். தமிழீழம் தோற்றுப்போகவில்லை. அது தோற்றுப்போக அந்த மண்ணுக்காய்ப் போராடி மாவீரராகிப்போன எங்கள் காவல் தெய்வங்கள் அனுமதிக்க மாட்டாhகள்.

தமிழீழம் கனவல்ல...

எங்கள் தோள்களில் சுமத்தப்பட்டுள்ள தேசியக் கடமைகளை நாங்கள் சிவந்தனைப் போல் தூய மனத்துடன் சுமந்து சென்றால்,

தமிழீழம் கனவல்ல!

ஈழநாடு

மேலும் எமது தளங்கள்:

ஈழத்து காணொளிகள்

ஆய்வுகள், கட்டுரைகள்

1 Response to தமிழீழம் கனவல்ல... அது தோற்றுப்போக எங்கள் காவல் தெய்வங்கள் அனுமதிக்க மாட்டார்கள்!

 1. தமிழீழம் கனவல்ல... அது தோற்றுப்போக எங்கள் காவல் தெய்வங்கள் அனுமதிக்க மாட்டார்கள்! அட்டகாசமான தலையங்கம் அதற்க்கு ஏற்றாற்போல் இளைய நெஞ்சங்களுக்கு நஞ்சைக்கக்கும் அதிரடி வசனங்கள். சும்மா கிடக்கும் பிரச்சனைகளை ஊதி ஊதி பெருசு பண்ணுவதே உங்கள் போன்ற விசமிகள் தான் என்பது கட்டுரையில் பொருள் எமக்கு குறிக்கிறது. மேதகுவின் இனவெறிக்கொலைத் தத்துவமே போதுமென்றிருக்கும் உங்களுக்கும் உங்களைப் போன்றவர்களுக்கும் புராணங்கள் தான் கைகொடுக்குமே தவிர இன்று ஒவ்வொருவராலும் எழுதும் கட்டூரைகள் அல்ல என்பதை கூறிக் கொள்ள விரும்புகிறேன். பிரபாகரனின் பொய் பரப்புரைகளை நம்பி ஒரு ஈழக்கனவை தங்கள் நெஞ்சில் சுமந்து கொண்டு போர்க்களத்தில் உயிர்நீத்த அந்த மாவீரர்களை நான் மதிக்கிறேன் என்று அறிக்கை விட்டதோடல்லாமல் இன்றுவரை சரணடைந்த புலிகள் உறுபினர்களுக்கு மன்னிப்பளித்து அவர்கள் புனர்வாழ்விற்காக குரல் கொடுக்கும் ஒரு மனிதரையும்..அழிந்து கொண்டிருக்கும் தனது பிறந்த பிரதேசத்து இளம் சமுதாயம் ஒன்று வீணாக ஒரு தற்பெருமைக்காரனின் சுயநல எண்ணத்திற்காகவும் பாசிச சிந்தனைத் திட்டங்களுக்காகவும் தங்கள் இன்னுயிரையும் எதிர்காலத்தையும் வீணாக்கிக் கொண்டிருக்கிறார்கள் என்ற உண்மையை உணர்ந்து அவர்களை விட்டு விலகி தனது கடந்தகால செயற்பாடுகளுக்காக மனம் வருந்தி அதற்குப் பிராயச்சித்தமாக அரசாங்கத்துடன் சேர்ந்தியங்கியாவது தனது மக்களுக்கு ஏதாவது செய்ய வேண்டும் என்று விரும்பி இன்று செயல்பட்டுக் கொண்டிருப்பவரையும் நீங்கள் துரோகிகள் என்று கூறுவதை நான் ஏற்றுக்கொள்வதற்கில்லை. ஏனெனில் உங்கள் பாசிசத் தலைவன் ஒருவனே அவன் மரணத்தின் பின்னும் தமிழர்களுக்கு தலைவனாக இருக்கவேண்டும் என்ற எண்ணத்தை நிறைவேற்றுவதற்காகவும் மற்றும் தமிழர்கள் பிறிதொருவரை தங்கள் தலைவராக ஏற்றுக் கொள்வதை வெறுக்கும் ஒருவரான நீங்கள் வழங்கும் இந்தத் துரோகிப் பட்டங்களை நான் மட்டுமல்ல இன்று விழித்தெழுந்து கொண்டிருக்கும் எந்தத் தமிழர்களும் ஏற்றுக் கொள்ளமாட்டார்கள். இதற்காக நான் அரசாங்கத்தையோ வேறு தனி நபர்களையோ ஆதரிப்பதாகவோ நீங்கள் எண்ணினால் அதற்கு நான் பொறுப்பல்ல. என் பரம விரோதியாக இருந்தாலும் நான் நேசிக்கும் இலங்கைத் திரு நாட்டிற்கும் அங்கு வாழும் சகல மக்களின் சமாதானமான சுதந்திர வாழ்க்கைக்காகவும் செயல்படுபவர்களை போற்றுவதற்கு என் பேனா என்றுமே தயங்கியதில்லை அதேபோல எனது இந்த நல்லெண்ணத்திற்கு எதிராக செயல்படுவர்கள் என் உடன்பிறந்த சகோதரனானாலும் ஈன்றெடுத்த பெற்றோரானாலும் அவர்களுக்கு எதிராக எழுத என்றுமே என் பேனா மயங்காது என்பதையும் உங்களுக்கும் உங்களைப் போன்றவர்களுக்கும் கூறிவைக்க விரும்புகிறேன்.

  இறுதியாக என் பணிவான வேண்டுகோள்:..
  வட்ட நிலா காட்டி வட்டிலிலே சோறூட்டி நெற்றியிலே முத்தமிட்டு தம் மழலைகளை தொட்டிலிலே இட்டு தாலாட்டித் தூங்கச் செய்த நம் தாயினங்களை மாலை வந்துவிட்டால் தங்கள் செல்வங்களுடன் மூலை முடுக்குகளில் முடங்கிக் கிடக்க வைத்த முற்றும் அறிந்தவர்களே!! காலையில் கடமைக்குச் சென்று மாலையில் வீடு திரும்பி மனைவி கொடுத்த தேனீரைச் சுவைத்தபடி முற்றத்துத் தென்றலை முற்றிலும் ரசித்தபடி பத்திரிகைச் செய்திகளில் மூழ்கிவிடும் நம் குடும்பத் தலைவர்களை உங்கள் பயங்கரவாதச் செய்கைகளால் நிலைதடுமாறச் செய்து இனித் தன் குடும்பத்தின் எதிர்காலம் எப்படியிருக்குமோ என்று கலங்கச் செய்து அவர்களை வேதனையில் மூழ்கவிட்ட மூதறிஞர்களே!. பரீட்சைக்கு படிக்கும் மாணவர்களை விளக்கை அணைத்து வேளைக்கே படுக்கைக்கு அனுப்பி அவர்கள் கல்வியைச் சீரளித்த சீமான்களே! எவ்வளவு முடியுமோ அவ்வளவுக்கு தமிழர்களின் இயல்பான ஒரு இனிய குடும்ப வாழ்க்கையை சீர்குலைத்து ஈழப்பிறவிகளின் இனங்காக்க புறப்பட்ட ஈனப்பிறவிகளே!

  உங்கள் இழி செயலால்..உங்கள் கொடிய கொள்கைகளால்… கொலைவெறியும், கொன்றொழிப்புகளும், குண்டு வெடிப்புகளும், குழப்பங்களும் கோரதாண்டவம் ஆடியதே.. எங்கள் இலங்கைத் திருநாட்டில் உங்கள் இனவெறிக்கும் உங்கள் பகட்டுக்கும், பதவிகளுக்கும், உங்கள் பணப் பைகளை நிரப்புவதற்கும் எங்கள் தமிழினத்தையே கொன்றொழித்து இனியும் போராட்டம் என்ற பேசி எங்கள் எஞ்சிய தமிழினத்தை அழித்து விடாதீர்கள் என்று உங்களைக் கெஞ்சிக் கேட்கிறேன். பாவம் அவர்களை வாழ விடுங்கள்..!!!

   

Post a Comment

Followers