Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

23 ஆண்டுகளுக்கு முன்பு
பல்லாயிரக் கணக்கான மக்கள்
பரிதவித்துப் பார்த்திருக்க
ஓர் உயிர் தன்னைத்தானே
சிலுவையில் அறைந்து
தன் உடலையும், உயிரையும்
துடிக்கத் துடிக்கத் தற்கொடையாக்கியது
அவன்தான் தியாகதீபம் திலீபன்.

தொடர்ந்து 12 நாட்கள்
265 மணித்தியாலங்கள்
ஒரு சொட்டு நீர்கூட அருந்தாமல்
உண்ணா நோன்பினை மேற்கொண்டு
உடல்துடித்து உயிர்விட்டது
ஒரு உத்தம ஆத்மா
அவன்தான் தியாகதீபம் திலீபன்.

ஒரு இலட்சிய நெருப்பான
எங்கள் போராட்டத்தின் குறியீடான
எங்கள் விடுதலைப் போராட்டத்தில்
வித்தியாசமான வியக்கத்தக்க
புதுமையான தியாகத்தைப் புரிந்தவன்
அவன்தான் தியாகதீபம் திலீபன்.

1987ம் ஆண்டு புரட்டாதித்திங்கள் 26ம் நாளன்று
சாத்வீகப் போராட்டக் களத்திலே
தன் உடலும் உயிரும் துடிதுடிக்க
தன்முன்னே மரணத்தை மண்டியிடவைத்தவன்
அவன்தான் தியாகதீபம் திலீபன்.

எங்கள் தெய்வீகத் துறவியே
தியாக தீபம் திலீபனே
நாங்கள் நெக்குருகி நினைவஞ்சலி செலுத்தி
உன் தியாத்தை எண்ணிப்பார்க்கின்றோம்.

திலீபன் நீ யாருக்காக இறந்தாய் ?
தீலீபன் நீ எதற்காக இறந்தாய் ?
எங்கள் மண்ணுக்காக மரித்தவன் நீ
எங்கள் உரிமைக்காக உயிர்துறந்தவன் நீ
எங்கள் சுதந்திரத்திற்காக - உன்
சுவாசத்தை நிறுத்தியவன் நீ
எங்கள் கௌரவத்திற்காக
காலனை அழைத்தவன் நீ.

தான் சித்த மண்ணுக்காக,மக்களுக்காக
ஓர் உயிரினால் ஆகக் கூடச் செய்யமுடிந்த
அதியுயர் தியாகத்தைப் புரிந்தவன்
தன்னைத் தானே விடுதலைக்காய்
கொஞ்சம் கொஞ்சமாய் எரித்துக்கொண்ட
ஒரு இலட்சிய நெருப்பு
அவன்தான் தியாகதீபம் திலீபன்.

நாம் உறங்கி விழிப்பதற்காய்
தான் உறங்க மறந்துவிட்டான் - அவன்
தான் உறங்க மறந்ததனால்
அவனை மீழா உறக்கம் அணைத்ததுவே
அவன்தான் தியாகதீபம் திலீபன்.

அவன் மரணம் ஒரு மாபெரும் வரலாற்று நிகழ்ச்சி
அவன் மரணம் ஒரு புரட்சிகரமான திருப்பத்தை ஏற்படுத்திய நிகழ்ச்சி
அவன் மரணம் தமிழீழத் தேசிய ஆன்மாவைத் தட்டியெழுப்பிய நிகழ்ச்சி
அவன் மரணம் தமிழீழ மக்களை எழுச்சிகொள்ளச் செய்த நிகழ்ச்சி
அவன் மரணம் பாரதநாட்டைத் தலைகுனியவைத்த நிகழ்ச்சி
அவன் மரணம் உலகின் மனச்சாட்சியை ஒருதரம் சீண்டிவிட்ட நிகழ்ச்சி.

மக்கள் புரட்சி வெடிக்கட்டும் என்றாய் அன்று
சுதந்திரத் தமிழீழம் மலரட்டும் என்றாய் அன்று
மக்கள் புரட்சி எரிமலையாய் வெடித்ததையா இன்று
சுதந்திர தமிழீழமும் எம் கண்முன்னே தெரிந்ததையா
ஐயகோ என் செய்வோம்
திராவிடம் தலையெடுத்து தனிநாடு கண்டுவிட
ஆரியம் அசைவின்றி அயர்ந்துதான் இருந்திடுமா ?
பிராந்திய நலனென்றும்,©கோள அமைப்பென்றும்
பற்பல கதைகூறி,பகைதேசங்கள் ஒன்றாகி
எம் மண்ணை எரித்ததையா
எம் இனத்தை அழித்ததையா.

விண்ணிலிருந்து பார்ப்பேன் விடுதலையை என்றாயே - எம்
கண்ணெதிரே அன்று உன் உடல்உயிர் துடித்ததுவே
தத்துவங்களைத் தலைகீழாக்கிய தெய்வீகத் துறவியே - நீ
மிதிக்கப்பட்ட தமிழினத்தின் வேதனையில்
வெடித்து வெளிவந்த தீப்பிழம்பு
அவன்தான் தியாகதீபம் திலீபன்.

மனித தியாகத்தின் இமயத்தைத் தொட்டவனே
அன்று சாவு உன்னிடம் சரணடைந்தது - நீ
காலப் பெருவெள்ளத்தில் கரைந்திடாத நட்சத்திரம் - உன்
பாதம் பட்டதால் எங்கள் ©மி புனிதம்பெற்றது - நீ
காலத்தால் சாகாத வரலாற்றுப் புரசனாக - நீ
என்றும் உலகெங்கும் வாழ்ந்துகொண்டேயிருப்பாய்.

யேர்மன் திருமலைச்செல்வன்.
யேர்மன் தமிழ் எழுத்தாளர் சங்கம்.


மேலும் எமது தளங்கள்:

ஈழத்து காணொளிகள்

ஆய்வுகள், கட்டுரைகள்

0 Responses to அவன்தான் தியாகதீபம் திலீபன்: கவிதை வடிவம் யேர்மன் திருமலைச்செல்வன்

Post a Comment

Followers