Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

ஊனினை உருக்கி உள்ளொளி பெருக்கிய உத்தமன் ஒருவனின் ஆவணப்படம்

ஜனவரி 29 என்னும் பெயரில் தியாகி முத்துக்குமாரின் வாழ்வையும் எண்ணங்களையும் விளக்கும் ஆவணப்படம் வெளியாகியுள்ளது. சென்ற சனிக்கிழமை இங்கிலாந்தில் இடம் பெற்ற வல்வை நலன்புரிச்சங்க ஒன்றுகூடலில் இந்த ஆவணப்படம் வெளியீடு செய்து வைக்கப்பட்டது.

இன விடுதலைக்கான வியூகம் இதனை வெளியீடு செய்துள்ளது. .நல்லதுரை, செல்வராஜ், முருகையன் ஆகியோர் இணைந்து இதை தயாரித்துள்ளனர். பிரகதீஸ்வரன், ..சிவசுந்தர், மரியா மனோகர், விஜயா சுரேஸ், அபாஸ்ரபீக் ஆகியோர் முக்கிய பணிகளை ஆற்றியுள்ளனர். இந்தக் காணொளி பார்க்கும் ஒவ்வொருவருடைய இதயத்தையும் உருக்கிப் பிழிவாதாக உள்ளது. முத்துக்குமாரின் வாழ்க்கை வரலாறு, அவருடைய உறவினரின் பேட்டி, கற்பித்த ஆசிரியர்கள், அவர் தொடர்பு கொண்டு பணியாற்றிய இயக்குநர்கள், அவர் நடித்த குறும்படங்கள், பணியாற்றிய சஞ்சிகைகள் போன்றன இடம் பெற்றுள்ளன.

படிக்கும் காலத்தில் முத்துக்குமார் எத்துணை சிறப்பு மிக்க மாணவனாக திகழ்ந்தான் என்பது அவன் எடுத்த புள்ளிகளின் மூலம் காண்பிக்கப்படுகிறது. படிப்பு, பேச்சு, எழுத்து, நடிப்பு, சிந்தனை என்று அவன் தன்னைச் சுற்றி உருவாக்கிய பின்புலம் பார்க்கும்போது அதிசயிக்க வைக்கிறது.

அவன் ஈழம் என்ற கனவை தன்னுள் சுமந்த மானமுள்ள தமிழனாக எப்படி வாழ்ந்தான் என்பதை விவரணப்படம் தெளிவாக எடுத்துரைக்கிறது. அதேவேளை முத்துக்குமார் தமிழ் நேசம் மிக்கவனாகவும், மற்றவருக்காக உருகும் மேன்மைக் குணம் கொண்ட மாசற்ற மாணிக்கமாகவும் வாழ்ந்த வாழ்வையும் படம் தெளிவுற விளக்குகிறது.

முத்துக்குமார் வீரமரணமடைவதற்கு முன்னர் விநியோகித்த கடிதம் ஒளிநாடாவோடு சிறிய நூலாக இணைக்கப்பட்டுள்ளமை இன்னொரு சிறப்பம்சமாக உள்ளது. முத்துக்குமார் சாஸ்த்திரிபவனில் தன்மீது தானே தீ மூட்டிக்கொண்ட காட்சியும் ஒரு பாத்திரத்தால் விளக்கப்படுகிறது. அதேவேளை அவன் எழுதிய கடைசி மரணவாக்கு மூலத்தில் சொன்ன செய்திகளை இப்போது மீண்டும் படிக்கும்போது அவனுடைய தீர்க்கதரிசனம் மனதை நெகிழ வைக்கிறது.

தொல் திருமாவளவன், சீமான், வை.கோபாலசாமி, டாக்டர் ராமதாஸ், இயக்குனர் ஜனா, முத்துக்குமாரின் பெற்றோர், நண்பர்கள், வைத்தியக்கல்லூரி மாணவர்கள், சட்டக்கல்லூரி மாணவர்கள், ஆசிரியர்கள் என்று ஏகப்பட்டவர்களின் கருத்துரைகள் இடம் பெற்றுள்ளன.

இங்கிலாந்தில் வெளியீடு நடந்தபோது உண்ணாவிரதமிருந்த செல்வன் பரமேஸ்வரன் அவையில் பிரசன்னமாகியிருந்தார். இதுகுறித்த வெளியீட்டு அறிமுகத்தில் உரையாற்றிய ஆசிரியர் கி.செ.துரை குறிப்பிடும்போது அன்று தியாகி திலீபன் நல்லூரில் உண்ணா விரதமிருந்தபோது உணவும் நீரும் அருந்தாது உடலின் உள்ளே தீயேற்றி பட்டினி நெருப்பால் தன் இன்னுயிரை தமிழின விடுதலைக்காக வழங்கினார். இன்று நமது தம்பி தியாகி முத்துக்குமரன் தமிழின விடிவுக்காக உடலின் வெளியே நெருப்பேற்றி இன்னுயிர் தந்தான் என்று குறிப்பிட்டார். நிகழ்வில் தியாகி முத்துக்குமார் திருவுருவப்படத்திற்கு விளக்கேற்றி அஞ்சலி செலுத்தப்பட்டது.

0 Responses to தியாகச்சுடர் முத்துக்குமார் ஆவணப்படம்

Post a Comment

Followers