Content feed Comments Feed
  “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

கத்தியை கையில் எடுத்தவன் கத்தியாலேயே அழிவான், அந்த பழமொழிக்கான பாடம்தான் ஒசாமா பின்லேடன் வாழ்க்கை என்று முதலமைச்சர் கருணாநிதி கூறியுள்ளார்.

இது குறித்து முதலமைச்சர் கருணாநிதி வெளியிட்டுள்ள அறிக்கையில்:

’’உலக நாடுகளில் அதிர்வையும், அச்சத்தையும் ஏற்படுத்தி - உலக வல்லரசுகளில் ஒன்றான அமெரிக்காவுக்கே பெரும் சவாலாக இருந்துவந்த ஒசாமா பின்லேடன் எனும் உசாமா பின் முகமது பின் அவாத் பின் லாடின் இன்று இல்லை. ஆம்; 40 நிமிடங்களில் அவரது கதை முடிந்து விட்டது. அமெரிக்கப் படையினரால் அவர் நேற்று முன்தினம் சுட்டுக் கொல்லப்பட்டார்.

தொடர்ந்து 10 ஆண்டுகளாக அமெரிக்க நாட்டின் கண்களை மண்ணைத் தூவி மறைத்துவிட்டு, எந்தவித சல்லடைத் தேடலுக்கும் சிக்காமல், உலகத்தின் தலைசிறந்த உளவு அமைப்பு என்று கருதப்படும் அமெரிக்காவின் சி...யையே ஏமாற்றி, அதன் பரந்து விரிந்த வலைகளில் மாட்டிக் கொள்ளாமல், தான் ஏற்றுக்கொண்ட சித்தாந்தத்தையும், அதன் அடிப்படையில் தான் உருவாக்கிய அமைப்பையும் காப்பாற்று வதற்காக, தலைமறைவு வாழ்க்கை வாழ்ந்து வந்த ஒசாமா பின்லேடனின் பயங்கரவாதச் சரித்திரம் முடிவுக்கு வந்துவிட்டது.

சோவியத்திற்கு எதிரான தாக்குதலை தனது கல்லூரிப் பேராசிரியர் தீவிரப்படுத்தி வந்ததைக் கண்ட பின்லேடன், அவருக்கு ஆதரவாக இறங்கினார். 1984-ம் ஆண்டில் அஜாமும், பின்லேடனும் இணைந்து `மக்தாப் அல் கடாமத்' என்ற அமைப்பைத் தொடங்கினர்.

இந்த அமைப்பின் நோக்கம், பணம் படைத்த இஸ்லாமிய நாடுகளிடம் இருந்து பணம், ஆயுதம் பெற்று, புனிதப் போரில் ஈடுபடுபவர்களுக்குக் கொடுப்பதாகும். மதச் சட்டங்கள் கடுமையாகக் கடைப் பிடிக்கப்பட வேண்டும் - அதை மீறுபவர்கள் தண்டிக்கப்பட வேண்டும் என்பதில் மிகுந்த ஈடுபாடு கொண்ட பின்லேடன், தனது நண்பர்களுடன் சேர்ந்து 1988-89-ல் `அல் கய்தா' என்ற அமைப்பைத் தொடங்கினார்.

சவுதி அரேபிய அரசு அவருக்குத் தடை விதிக்கவே, சூடானில் அடைக்கலம் புகுந்தார் பின்லேடன். நைரோபி, கென்யா, தான்சானியா உள்பட பல இடங்களில் உள்ள அமெரிக்கத் தூதரகங்களிலும், அமெரிக்காவிலும் `அல் கய்தா' அமைப்பு குண்டு வெடிப்பை நடத்தியது. சூடானில் இருந்தும் நாடு கடத்தப்பட்ட பின்லேடன், ஆப்கானிஸ்தானில் தஞ்சம் அடைந்து, அமெரிக்காவுக்கு எதிராகப் புனிதப்போர் என அறிவித்தார்.

நியூயார்க் நகரில் உள்ள 111 மாடிகள் கொண்ட இரட்டை கோபுரக் கட்டிடம் பின்லேடனின் சதித்திட்டத்தால் தகர்த்தெறியப்பட்டது. அப்பாவிகளான 3,000 பேர் அதில் பலியானார்கள். இதுதான், அமெரிக்காவின் தீராக் கோபத்திற்கு காரணமானது. பின்லேடனை தங்களிடம் ஒப்படைக்கும்படி அமெரிக்கா கோரியது. இதற்கு ஆப்கானிஸ்தான் மறுக்கவே, அந்த நாட்டின் மீது அமெரிக்கா தொடர்ந்து விமானத் தாக்குதலை நடத்தியது.

இறுதிக் கட்டமாக, ஒசாமா பின்லேடன் பாகிஸ்தானில், அபோதாபாத் நகரில் மறைந்திருந்த இடம் கண்டுபிடிக்கப்பட்டு, அமெரிக்கப் படையினால் அவரது 55-ஆவது வயதில் சுட்டுக் கொல்லப்பட்டார்.

சுட்டுக் கொல்லப்பட்ட பின்லேடனின் உடல், எத்தனையோ சாம்ராஜ்யங்களையும், லட்சக்கணக்கான மனித உயிர்களையும் விழுங்கிவிட்டு, எப்போதும்போல் அலைகளை எழுப்பிக் கொண்டிருக்கும் கடலில் மூழ்கடிக்கப்பட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

பின்லேடனின் முடிவை உலக நாடுகளில் பெரும்பாலானவை மகிழ்ச்சியுடன் வரவேற்றுள்ளன. அமெரிக்க அதிபர் பாரக் ஒபாமா ``ஒசாமாவை சுட்டுக் கொன்றதில் நீதி நிலை நாட்டப்பட்டது. அமெரிக்க மக்கள் நினைப்பதை நிறைவேற்றுபவர்கள் என்பதை, இதன் மூலம் தெரிவிக்க விரும்புகிறேன். இந்தப் போராட்டத்துக்கு அமெரிக்கா அதிக விலை கொடுத்துள்ளது.

இதை அமெரிக்கர்கள் புரிந்து கொள்வர். நம் பாதுகாப்பு, அச்சுறுத்தலுக்கு உள்ளாவதைக் கண்டு நாம் பொறுத்துக் கொள்ள மாட்டோம்; நம் மக்கள் கொல்லப்படும் போது சும்மா இருக்க மாட்டோம். நாம் என்ன நினைக்கிறோமோ, அதைச் செய்து காட்டுவோம் என்பதை, இப்போது மீண்டும் நிரூபித்துக் காட்டியுள்ளோம். அதுதான் நம் வரலாறு'' என்று பெருமிதத்தை வெளியிட்டுள்ளார்.

ஆப்கானிஸ்தானில், சோவியத் படைகளுக்கு எதிராக கலகம் செய்ய வேண்டும் என்பதற்காகவே, தாலிபான்களை அமெரிக்கா ஊக்குவித்தது. இன்றைக்கு அதே தாலிபான்களை ஒடுக்குவதற்காக, ஆப்கானிஸ்தானில் அமெரிக்கப் படைகள் குவிக்கப்பட்டுள்ளன. அமெரிக்காவால் ஊக்குவிக்கப்பட்ட தாலிபான்களுக்கு உதவுவதற்காகவே, பின்லேடன் ஆப்கானிஸ்தான் வந்தார் என்பதை செய்திகள் நமக்குச் சுட்டிக்காட்டுகின்றன.

பயங்கரவாதிகள் என்பதற்கு, ``பயங்கர வாதிகள் சமூகத்திலிருந்து தம்மை தனிமைப்படுத்தி உணர்வார்கள். தமக்கு அநீதி இழைக்கப்பட்டுள்ளதாகக் கருதுவார்கள். பெரும்பாலானோர் நிராதரவாக்கப்பட்டவர்களே. அரசியல் ரீதியான அல்லது மத ரீதியான தங்களுடைய கொள்கைகளுக்காக, தங்களை அர்ப்பணித்துக் கொள்வார்கள். தங்கள் வன்முறைச் செயலை, குற்றச் செயலாக எப்போதும் ஒப்புக் கொள்ள மாட்டார்கள்.

அவர்கள் சிறந்த விசுவாசிகளாகவும், சூழ்ச்சி கொண்டவர்களாகவும், இரக்கத் தன்மையற்ற கொடியவர்களாகவும் இருப்பார்கள்'' என்று பொருள் சொல்லப்படுகிறது. பயங்கரவாதி என்பதற்கான இந்த வரையறைகள் எந்த அளவுக்கு ஒசாமா பின்லேடனுக்குப் பொருந்துகின்றன என்பதை, அவரது வாழ்க்கை நிகழ்ச்சிகளை ஊன்றி, பகுத்து ஆய்பவர்களுக்குத் தெரியும்.

தேசிய பயங்கரவாதம், மத பயங்கரவாதம், இடதுசாரித் தீவிரவாதம், வலதுசாரி பயங்கர வாதம், அரசையே அழிக்கும் பயங்கரவாதம்; அணு பயங்கரவாதம், ரசாயன பயங்கர வாதம், நுண்ணுயிரியல் பயங்கரவாதம், போதை பயங்கரவாதம் என்று பயங்கரவாதம் எந்த உருவெடுக்க முனைந்தாலும்; அதனை முளையிலேயே கிள்ளி எறிவதும், முகிழ்த்து விடாமல் எச்சரிக்கை கடைப்பிடிப்பதும், அறிவுடையோர் கடமையாகும்.

``வரலாறு தனது வரிகளை இரத்தத்தால் தவிர வேறு எதனாலும் எழுதுவதில்லை. புகழ் எனும் உயர்ந்த மாளிகை மண்டை ஓடுகளால் தவிர வேறு எதனாலும் கட்டப்படுவதில்லை.

கவுரவத்திற்கும், மதிப்பிற்கும், உடைந்த எலும்புகளாலும், பிணங்களாலும் தவிர வேறு எதனைக் கொண்டும் அடித்தளம் இடப்படுவதில்லை'' என்று பின்லேடனின் ஆசிரியர் தந்த போதனையை அப்படியே உணர்ச்சிப்பூர்வமாக ஏற்றுக்கொண்டு, அதை நிலைநிறுத்துவதற்கு வாழ்நாள் முழுவதும் முயற்சி செய்த ஒசாமா பின்லேடன், தன் கையில் எடுத்த கருவிதான் ``பயங்கரவாதம்''. ஒசாமா பின்லேடன் பின்பற்றிய பயங்கரவாதத்திற்கு, ``இஸ்லாமிய பயங்கரவாதம்'' என்ற லேபிளை ஒட்ட எத்தனையோ பேர் எத்தனிக்கிறார்கள். அதனை நம்மால் ஏற்றுக்கொள்ள முடியாது. `இஸ்லாம்' என்ற சொல்லுக்கு மற்றொரு பொருளே `சமாதானம்' என்பதாகும். ``இஸ்லாம் ஒரு சமாதான, சகிப்புத் தன்மை கொண்ட மதம் என்றும்; ஒரு முஸ்லிம், இறைவனுடனும், மனிதனுடனும் சமாதானமாக இருத்தல் வேண்டும்'' என்பதும், முகம்மது தோற்றுவித்த 10 அம்சங்களில் ஒன்று என்பதை நாம் மறந்துவிட முடியாது.

எல்லா மதங்களைச் சார்ந்தவர்கள் மத்தியிலிருந்தும் பயங்கரவாதிகள் உருவாவதை சரித்திரம் நமக்குச் சான்றுகளோடு எடுத்துக் காட்டுகிறது. தனி நபர்களையும், அப்பாவி களையும் கொல்லும் பயங்கரவாதம்; கண்டிக்கப்பட வேண்டும் என்பதிலும், தண்டிக்கப்பட வேண்டும் என்பதிலும் யாருக்கும் கருத்து வேறுபாடு இருக்க முடியாது.

எந்தவித நியாயமான குறைகள் அல்லது கோபம் யார் மீது இருந்தபோதிலும், பயங்கரவாதத்தை யாரும் நியாயப்படுத்துவதற்கான அடிப்படை அறவே கிடையாது.

``கத்தியைக் கையில் எடுத்தவன்; கத்தியாலேயே அழிவான்'' என்பது பழமொழி. அந்த பழமொழிக்கான பாடம்தான் ஒசாமா பின்லேடனின் வாழ்க்கை. ``கத்தியைத் தீட்டாதே; புத்தியைத் தீட்டு'' என்ற அண்ணாவின் அன்புமொழியை அனைவரும் நெஞ்சில் நிறுத்திக் கொள்வோமாக’’ என்று கூறியுள்ளார்.

4 Responses to கத்தியை கையில் எடுத்தவன் கத்தியாலேயே அழிவான்: பின்லேடன் வாழ்க்கை பற்றி கலைஞர்

 1. Kannagi Says:
 2. ஐயா கொலைஞரே கத்தியின் எடுத்தவனுக்கு கத்தியால் தான் அழிவெண்டு பின்லேடனுக்கு மட்டுமா சொல்கிறீர்கள். இல்லை வேற யாராவது உங்க மனதில இருக்கினமா. காந்தி என்ன துவக்கு எடுத்தாரா?

  சரி அதை விடுவோம் துரோகம் இழைப்பதை கையில் எடுத்தவனுக்கு எப்பிடி அழிவு வரும். விளங்கேல்லயோ? உங்களப் பற்றித்தான்

   
 3. ttpian Says:
 4. But,Karunanidhi will take KANIMOZHI'S amma:ammammaaa!

   
 5. ttpian Says:
 6. உண்மைதான் !
  கத்தியை எடுத்தவன் கத்தியால்தான் சாவான்,
  பின்லாடனுக்கு உங்கள் அளவுக்கு அறிவு இல்லை....
  பேப்பரும் பேனாவுமாக காசு பார்க்க அறிவு இல்லை:
  மேலாக,அவரும் நீங்களும் ஒரு விழயத்தில்....அகா எத்தனை மனைவிகள்?

   
 7. அமெரிக்கர்கள் புரிந்து கொள்வர். நம் பாதுகாப்பு, அச்சுறுத்தலுக்கு உள்ளாவதைக் கண்டு நாம் பொறுத்துக் கொள்ள மாட்டோம்; நம் மக்கள் கொல்லப்படும் போது சும்மா இருக்க மாட்டோம். நாம் என்ன நினைக்கிறோமோ, அதைச் செய்து காட்டுவோம் என்பதை, இப்போது மீண்டும் நிரூபித்துக் காட்டியுள்ளோம். அதுதான் நம் வரலாறு'' உனக்கு இப்பவெல்லாம் உடனுக்குடன் கருத்து சொல்லத்தெரியும் ஈழத்தமிழன் அழியும் போது பாவாடைகுள்ள முகம் புதைத்த போக்கிலி நீயெல்லாம் அமெரிக்க வரலாறு சொல்லத்தான் லாயக்கு.
  தமிழின வரலாறு உன்னால் தடம்புரண்டது. உன் மனைவியை விட்டு மாற்றான் மனைவியரை ருசிக்கும் உனக்கு உன் இன வீரம் பேசாது அமெரிக்கன் வீரம் பேசவும், பணத்திற்காக உன் குடும்பத்தை விபச்சாரம் செய்யவும் தான் நீ லாயக்கு.

   

Post a Comment

Followers