Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

இனஅழிப்பு மொத்தமாக நடாத்திமுடிக்கப்பட்டு இரண்டுவருடங்களுக்கும் மேலாகின்றது.அதன்பின்னரும் இன்றுவரை வேறுவேறு வடிவங்களில் இனஅழிப்பை சிங்களம் எந்தஒரு தயக்கமம் இல்லாமல் மெதுமெதுவாக நடாத்திக்கொண்டே இருக்கின்றது.

கேட்க நாதியற்ற இனமாக எமது மக்கள் மிருகங்களைப் போன்று நடாத்தப்பட்டு வருகின்றனர். இவை எல்லாவற்றையும் நடாத்திக்கொண்டே சிங்களத்தின் அரச அதிபரும் பரிவாரமும் உலக சபைகளில் உரைகளையும், உலாக்களையும் (இங்கிலாந்து தவிர்ந்த) நடாத்தி வருகின்றனர்.

தகவல்தொழில்நுட்பம் உலகத்தை ஒரு சிறுகிராமம்போல கைக்குள் கொண்டு வந்துள்ளதாக பெருமை பேசினாலும் எமது மக்கள்மீதான படுகொலைகள் மட்டும் வெளிச்சத்துக்கு பெரிதாக தவிர்க்கப்பட்டே வந்துகொண்டிருக்கிறது. உலகம் நிராகரித்த அனாதை இனம்போல சபிக்கப்பட்டு போரிடவும் தடுக்கப்பட்டு வாழவும் மறுக்கப்பட்டு திரியும் ஒரு மக்கள் இனம்போல திரிகின்றோம்.

நடந்துமுடிந்த அநீதிகளுக்கும், இனஅழிப்புக்குமாவது நீதி கிடைக்குமா என்று அங்கலாய்த்து இருந்தோம். உண்மை கண்டறிய நிபுணர் குழு என்றார்கள். நீண்ட இழுத்தடிப்பு. அதன் பின்னர் நிபுணர் குழுவின் அறிக்கை ஐநா செயலாளருக்கு ஓப்படைப்பு என்றும் சொன்னார்கள்.

அறிக்கையில் என்ன இருக்கிறது என்று தெரிவிப்பதே ஒரு தேச பிரசவம்போல அத்தனை இழுபறியாக இருந்தது. அறிக்கையும் வெளியானது.அறிக்கை சொன்ன வரைபுகளை நிறைவேற்றுவதற்கு இப்போது காத்துக் கிடக்கும் பொழுதில் இந்த 8ம்திகதி தமிழ்நாட்டு சட்டசபையில் ஏகமனதாக ஒரு தீர்மானம் நிறைவேற்றப்பட்டு இருக்கின்றது.

ஒரு இனத்தை கருவறுத்த பாதகச் செயலுக்கான நீதிதேடிய கடும் இருள் நிறைந்த பெரும் பாதையில் இந்தத் தீர்மானம் மிகச்சிறு பொறிதான்.சின்ன அரிக்கன் விளக்குத்தான். ஆனாலும் இது தந்திருக்கும் நம்பிக்கைகளும் ஆறுதலும் பெரியது.

போர்க்குற்றவாளிகளாக அறிவிக்க வேண்டும். சிறீலங்கா மீது பொருளாதாரத் தடை விதிக்கவேண்டும் போன்ற கனமான தீர்மானங்கள் ஏகமனதாக நிறைவேற்றப்பட்டு இருக்கின்றன.

இந்த தீர்மானத்துக்கு ஆதரவு தெரிவித்த அனைத்து கட்சிகளுக்கும் நன்றியும் பாராட்டும் தெரிவிக்க வேண்டியது ஈழத்தமிழர்களின் கடமை என்றாலும் இத்தகைய ஒரு தீர்மானத்தை சமர்ப்பிக்கவும் அதனை நிறைவேற்றவும் துணிச்சல் நிரம்பிய தலைமை தேவை. அந்த துணிச்சலுக்காக தமிழ்நாட்டு முதலமைச்சருக்கு நன்றிகளும் பாராட்டுகளும்.

அதிலும் தமிழ்நாட்டு சட்டசபையை துவக்கிவைத்து ஆளுநர்ஆற்றும் உரைக்கு நன்றி தெரிவிக்கும் உரைகளை இடைநிறுத்திவிட்டு ஒரு வரலாற்று சிறப்புமிக்க தீர்மானத்தை தமிழ்நாட்டு முதல்வர் செல்வி.ஜெயலலிதா அவர்கள் நிறைவேற்றி இருக்கிறார்கள்.

இந்த தீர்மானத்தின் வாசகங்கள் சிங்களத்துக்கு மிகுந்த கலக்கத்தை கொடுத்து இருக்கும் என்பதில் எந்தவித ஐயமும் இருக்கமுடியாது. அதிலும் இந்த தீர்மானத்தை சமர்ப்பித்தும்,வரவேற்றும் தமிழ்நாட்டு முதல்வர் ஆற்றிய உரையின் வாசகங்கள் சிங்களத்தின் சமநிலையை குழப்பி இருக்கும்.

இலங்கைத்தீவு பிரித்தானிய ஆட்சியில் இருந்து சுதந்திரம் பெற்ற நாளிலிருந்து ஈழத்தமிழர்கள் இரண்டாம்தரக் குடிமக்களாகவே நடாத்தப்படுவதில் தொடங்கி 2009ல் நிகழ்த்தப்பட்ட இனஅழிப்பு வரை சிங்களம் ஆடும் வெறித்தனங்களை தோலுரித்துள்ளார்.

ஆனாலும் இந்த தீர்மானம் வெளிவந்த சிலமணித்தியாலங்களுக்கு உள்ளாகவே சிறீலங்கா இதனை நிராகரிப்பதாகவும், இது ஒரு மாநிலத்தின் தீர்மானம் என்றும் தேசம் தேசத்துடன்தான் உறவு கொள்ளும் என்றும் சிறீலங்காவுக்கு இந்திய தேசத்துடன்தான் உறவு என்றும் அது ஒருபோதும் ஒரு மாநிலத்துடன் சார்ந்து இருக்காது என்றும் தன்னைத்தானே தேற்றி அறிக்கைவிட்டு இருக்கிறது.

அதனுடன் நின்று விடாமல் “ஒரு நாட்டின் பிரச்சனையில் ஏனைய நாடுகளின் மத்திய அரசே தீர்மானம் மேற்கொள்ள முடியுமே தவிர மாநிலங்கள் தீர்மானங்கள் நிறைவேற்றி பயனில்லை என்பதால் இத் தீர்மானம் குறித்து நாம் அலட்டிக்கொள்ளத் தேவை இல்லை” என்றும் கூறியுள்ளார்கள்.

ஆனால் இந்தியா போன்ற பெரும் நிலப்பரப்பு தேசங்கள் ஒருவகையான கூட்டாட்சி முறையிலேயே இயங்கி வருகின்றன. மத்தியில் ஆட்சி என்பது முழுக்க முழுக்க மாநிலங்களின் அபிலாசைகளுக்கோ, ஆதங்கங்களுக்கோ, எதிர்பார்ப்புகளுக்கோ எதிராக இருக்கமுடியாது.

மாநிலங்கள் கோரும் எல்லாவற்றையும் நிறைவேற்றுவது சாத்தியம் அற்றதாக இருந்தாலும் உணர்வுமயமான கோரிக்கைகளுக்கு மத்திய ஆட்சி தலைசாய்த்தே ஆகவேண்டும்.

இன்றைக்கு தனித்த தேசமாக இறைமை கொண்ட நாடாக ஐநாவில் பட்டொளி வீசி பறந்து கொண்டிருக்கிறதே பங்களாதேஸ் கொடி அதன் சுதந்திரத்துக்கு முதலில் கை கொடுத்ததும், தோள் கொடுத்ததும்,குரல் கொடுத்ததும் இதனைப் போன்ற ஒரு மாநில தீர்மானம்தான்.

அப்போது பாகிஸ்தானின் ஆட்சிக்கு கீழே இருந்த பங்களாதேசில் தேசியக்கட்சியான அவாமிலீக் பெரும்பான்மையான சட்டசபை இடங்களை பெற்றுக்கொண்டதை தொடர்ந்து அதனை அடக்கவும் நசுக்கவும் 1971ம்ஆண்டு மார்ச் 25ம் திகதி பாகிஸ்தான் வெறியாட்டம் ஆட ஆரம்பித்தபோது பங்களாதேசின் சுதந்திர போராட்டம் ஒரு எரிநிலைக்கு உயர்ந்தது.

பாகிஸ்தானிய ஆளுகைக்கு எதிரான போராட்டமும் அதனை முறியடிக்கும் இராணுவ வெறித்தனங்களும் உச்சநிலையை அடைந்தபோது இந்தியாவின் ஒருமாநிலமான மேற்கு வங்காளத்தின் தலைநகரான கொல்கத்தாவில் பங்களாதேசின் நிழல் அரசாங்கம் இயங்க ஆரம்பித்தது.

அப்போதைய மேற்குவங்காள முதல்வர் ஜோதிபாசு அவர்கள் பங்களாதேஸ் நிழல்அரசை அங்கீகரிக்க வேண்டும் என்ற தீர்மானத்தை மேற்குவங்க சட்டசபையில் நிறைவேற்றினார்.

இது மட்டுமல்லாமல் இதனை நிறைவேற்ற இந்திய அரசு தவறினால் மேற்குவங்க காவல்துறையினர் எல்லை கடந்து பங்களாதேசுக்குள் நுழைந்து பாகிஸ்தானிய இராணுவத்துடன் மோதி பங்களாதேஸ் மக்களை காப்பாற்ற நேரிடும் என்றும் சொன்னார்.

மேற்கு வங்காள மாநிலம் இந்தியாவின் மாநிலங்களில் ஒன்றாக இருந்தபோதிலும் பங்களாதேஸ் மக்களுக்காக குரல் கொடுத்தனர். தமது தாய்மொழியும் அவர்களின் தாய்மொழியும் ஒன்றே என்பதால் தொப்புள்கொடி உறவாக துடித்தனர்.

ஆனாலும் இந்திய பிரதமர் இந்திரா காந்தி மேற்குவங்க சட்டசபையின் தீர்மானத்துக்கு பெரிய அளவில் ஆதரவு கொடுக்கவில்லை.மேற்குவங்க சட்டசபை தீர்மானத்தை நிறைவேற்றும்படி பலமுறை அப்போதைய முதல்வர் ஜோதிபாசு இந்திய பிரதமரை சந்தித்து அழுத்தங்களை கொடுத்தார்.

ஆனால் பாகிஸ்தானின் ஓற்றை ஆட்சிக்கு உட்பட்ட மாநிலம் என்ற வட்டத்துக்குள்ளேயே பிரச்சனையை தீர்த்து வைக்க இந்திரா காந்தி விரும்பி இருந்தார். தொடர்ந்து பெரும் மக்கள் திரண்டெழுந்த ஆர்ப்பாட்டங்களையும், ஊர்வலங்களையும் நடாத்தி மேற்குவங்க சட்டசபை தீர்மானத்துக்கு ஆதரவாக மேற்குவங்காள மக்கள் எழுந்தனர்.

இறுதியில் மேற்கு வங்க மாநில சட்டசபை பங்களாதேசை சுதந்திர தேசமாக அங்கீகரிக்க கோரி தீர்மானம் நிறைவேற்றி எட்டு மாதங்களின் பின்னர் இந்தியா 1971ம்ஆண்டு டிசம்பர் மாதம் 4ம்திகதி பங்களாதேஸ் என்பது சுதந்திர தேசம் என்று அங்கீகரித்து பிரகடனப்படுத்தியது.

ஒரு மாநிலத்தின் தீர்மானம் என்று இதை ஒதுக்கிவிட்டு சிங்களம் சுகமாக இன சுத்திகரிப்பை செய்துகொண்டிருக்க முடியாது. இந்த தீர்மானத்தின் பின்னால் இப்போதைய முதல்வரின் துணிவும், அஞ்சாமையும் இருக்கின்றது.

இந்த தீர்மானம் வெறும் வார்த்தைகளுடன் சட்டமன்ற கோப்புகளில் உறங்கி விடாமல் இதனை நடைமுறைப்படுத்தவேண்டிய அனைத்து முனைப்புகளிலும் தமிழ்நாட்டு அரசும், முதல்வரும் இறங்கவேண்டும் என்பதே உரிமைகள் இழந்து நித்தமும் சாவுக்குள் வாழ சபிக்கப்பட்டிருக்கும் ஈழத்தமிழர்களது வேண்டுகோளாகும்.

ச.ச.முத்து

2 Responses to துணிச்சலான தீர்மானம்! நடைமுறைப்படுத்தும் முனைப்புகளில் இறங்கவேண்டும் என்பதே ஈழத் தமிழர்களின் வேண்டுகோள்: ச.ச.முத்து

  1. அனைத்து தமிழரும் நன்றி சொல்ல கடமைப்பட்டுள்ளோம். ஆனால் இது எழுத்தில் மட்டுமி்ல்லாது செயலிலும் நடைமுறைப்படுத்தினால் என்றும் மறவோம். உங்கள் அரசியல் இலாபங்களுக்காக மேலும் மேலும் எம்மை பலிகடாவாக்குவீர்களோ என்ற அச்சம் இன்னும் ஈழத்தமிழரின் மனதில் உள்ளது. அந்த அச்சத்தை போக்க உங்கள் தீர்மானத்தை செயல்முறைப்படுத்துங்கள். புண்பட்ட அநாதரவாய் விடப்பட்ட தமிழ் நெஞ்சங்கள் வாழ்த்தும்.

     
  2. இளமாறன் தமிழ் நாடு‍

    இலங்‌கையில் உள்ள தமிழர்கள் தற்போது‍ ஒன்றும் சமஉரிமையுடன், அனைத்து‍ வித வசதிகளையும் பெற்று‍ வாழ வில்லை, குறிப்பாக வட கிழக்கு‍ மக்கள் சிங்கள அரசுடன் கையேந்தி தான் இருக்க வேண்டியுள்ளது. இவ்வாறு‍ இருக்க, இலங்கை மீது‍ பொருளாதார தடை விதிப்பதால், தமிழர்களுக்கு‍ தனியாக மேலும் எந்த வித பாதிப்பும் ஏற்பட போவதில்லை. தென் ஆப்பிரிக்கா மீது‍ ஐ.நா மற்றும் உலக நாடுகள் இது‍ போன்ற பொருளாதார தடை விதிக்கும் போது‍ அங்கு‍ இருக்கும் தமிழர்கள் (நல்ல வசதியாக வாழ்ந்து‍ வந்த) மற்றும் கறுப்பர்கள் பாதிப்படைவார்கள் என்று‍ எவரும் கூறவில்லை. தென் ஆப்பிரிக்கா மீது‍ அப்படி‍ தடை கொண்டு‍ வந்ததால் தான், தென் ஆப்பிரிக்கா அடி‍ பணிந்தது. அது‍ போல் இலங்கை மீது‍ கொண்டு‍ வரப்படும் பொருளாதார தடை, இலங்கையை அடி‍ பணிய வைக்க வசதி செய்யும். ஆகவே, எவரும் சந்தேகம் கொள்ள தேவை இல்லை. இது‍ போன்ற கருத்துகளை வெளியீட்டு‍ சுப்பரமணி சாமி போன்ற சிங்கள அடிவரு‍டிகளின் கருத்துகளுக்கு‍ துணை சென்றது‍ போல் ஆகி விடும்.

     

Post a Comment

Followers