Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

அளவெட்டி மகாஜன மண்டபம். ஆரம்பம் அமைதியாகவே இருந்தது சுனாமிக்கு முந்திய கடலைப்போல. எதிர் பார்த்ததை விடவும் பெருமளவான ஆதரவாளர்கள் வந்திருந்தார்கள். கூட்டமைப்பு எம்.பிக்களின் முகத்தில் வெற்றியின் ரேகைகள்.கலந்துரையாடலொன்றுக்கே இவ்வளவு ஆர்வமாக ஆதரவாளர்கள் வருகிறார்கள் என்றால் நிச்சயமாக தேர்தலிலும் வழமையைவிட வாக்களிப்பு வீதம் அதிகரிக்கும். கூட்டமைப்பின் வெற்றி வலுவானதாகப் பதிவு செய்யப்படும் என்பதாலேயே கூட்டமைப்பினரின் முகங்களில் அப்படியொரு மகிழ்ச்சி.

"நில்!'' என்றான் ஓராள்
"நிறுத்து!'' என்றான் மற்றோராள்.
"புல்'' என்றான் ஓராள்
"புலை'' என்றான் இன்னோராள்
"கொல்'' என்றான் ஓராள்
"கொளுத்து'' என்றான் வேறோராள்.
"கல்லொன்று வீழ்ந்து
கழுத்தொன்று வெட்டுண்டு
பல்லோடு உதடுபறந்து
சிதறுண்டு சில்லென்று செந்நீர் தெறித்து
நிலம் சிவந்து மல்லொன்று நேர்ந்து .....''

வலி.வடக்கின் புலமையாளர் கவிஞர் மஹாகவி ஒரு கலவரம் பற்றிச் சொன்ன வரிகள் அவரது மண்ணிலேயே அரங் கேறி, நிதர்சனமாகியிருக்கிறது.

அளவெட்டி மகாஜன மண்டபம். ஆரம்பம் அமைதியாகவே இருந்தது சுனாமிக்கு முந்திய கடலைப்போல. எதிர் பார்த்ததை விடவும் பெருமளவான ஆதரவாளர்கள் வந்திருந்தார்கள். கூட்டமைப்பு எம்.பிக்களின் முகத்தில் வெற்றியின் ரேகைகள்.கலந்துரையாடலொன்றுக்கே இவ்வளவு ஆர்வமாக ஆதரவாளர்கள் வருகிறார்கள் என்றால் நிச்சயமாக தேர்தலிலும் வழமையைவிட வாக்களிப்பு வீதம் அதிகரிக்கும்; கூட்டமைப்பின் வெற்றி வலுவானதாகப் பதிவு செய்யப்படும் என்பதாலேயே கூட்டமைப்பினரின் முகங்களில் அப்படியொரு மகிழ்ச்சி.

மாவை.சேனாதிராசா, சுரேஷ் பிரேமச்சந்திரன், சுமந்திரன், சரவணபவன், சிறிதரன், அப்பாத்துரை விநாயகமூர்த்தி ஆகியோரும் கலந்துரையாடலை ஒழுங்கு செய்திருந்த காங்கேசன்துறை தொகுதியின் தமிழரசுக் கட்சியின் செயலாளர் சுகிர்தனும், தமிழர் விடுதலைக் கூட்டணியைச் சேர்ந்த சங்கையாவும் மேடையில் அமர்ந்து கொண்டனர். ஒலிபெருக்கிகளின் அலறல் இல்லை. ஒரு பொக்ஸ் மட்டும் மண்டபத்தின் உள்ளே நிகழ் பவற்றை எல்லோரும் தெளிவாகக் கேட்கக் கூடியவகையில் பொருத்தப்பட்டிருந்தது. ஆடம்பரங்கள், அமர்க்களங்கள் எதுவுமில்லாது அந்தக் கலந்துரையாடல் ஆரம்பமாயிற்று.

நாடாளுமன்ற உறுப்பினர் விநாயக மூர்த்தி உரையாற்றினார். இன்றைய நெருக் கடியான சுழலில் உள்ளூராட்சித்தேர்தலின் முக்கியத்துவம், கூட்டமைப்பின் வியூகங்கள் பற்றியெல்லாம் கூறிவிட்டு அமர்ந்தார்.அதன் பின் பேச வந்தவர் ஈ. சரவணபவன் எம்.பி. அண்மையில் தொலைபேசி மூலம் கொலையச்சுறுத்தல் விடுக்கப்பட்டிருந்த போதும் , துணிச்சலோடு கலந்துரையாடலுக்கு வந்திருந்தார். அவர் உரையாற்றிக் கொண்டிருக்கும் போதுதான் அன்றைய பூகம்பத்தின் முதல் அதிர்வு ஏற்பட்டது.

மண்டபத்தின் வெளிப்புறமாக நின்றிருந்த சுமந்திரன் எம்.பியின் மெய்ப்பாது காவலர் ஒருவர் பதற்றமான முகத்தோடு மேடையில் ஏறி, சுமந்திரனின் காதருகே இராணுவ மேஜர் ஒருவர் படையினர் சகிதம் வந்திருக்கிறார். அனுமதியின்றிக் கூட்டம் நடைபெறுவதாகவும் அதனை தடுத்த நிறுத்துமாறு மேலிடத்திலிருந்து தனக்கு உத்தரவு வந்திருப்பதாகவும் எங்களுக்கு அவர் சொன்னார் என்ற வார்த்தைகளை உதிர்த்தார்.

மேடையில் இருந்தவர்களுக்கு இந்தத் தகவலைத் தெரிவித்துவிட்டு, இராணுவ மேஜருக்கு நிலைமையை விளக்குவதற்காக மேடையை விட்டிறங்கினார் சுமந்திரன். அதற்குள் மேஜர் மண்டபத்துக்குள் வந்துவிட்டார். ஏதோ விபரீதம் நிகழப்போகின்றது என்பதை ஊகித்துக் கொண்டவர்களாக நாடாளுமன்ற உறுப்பினர்களின் மெய்ப் பாதுகாவலர்கள் மேடையைச் சுழ்ந்து கொண்டனர்.

மேஜருக்கும் சுமந்திரனுக்கும் இடையே மண்டபத்தின் ஓரமாக காரசாரமான விவாதங்கள் நடைபெற்றுக் கொண்டிருக்கையில் கைகளில் இரும்புக்கம்பிகள், மண் வெட்டிப்பிடிகளின் சைஸ்களில் கொட்டன்கள், இயங்கியபடியிருக்கும் சி.டி.எம். ஏ தொலைபேசிகள் சகிதம் திபுதிபு வென மேடையை நோக்கி புலிகளின் முகாமொன்றைக் கைப்பற்ற முனைவது போன்ற ஆவேசத்துடன் நூற்றுக்கும் அதிகமான இராணுவத்தினர் பாய்ந்து சென்றனர்.

சரவணபவன் உரையாற்றிக் கொண்டிருப்பதையும் லட்சியம் செய்யாதவர்களாக , அவர் முன்னால் இருந்த மைக்கை பிடுங்கியெடுக்க முனைந்தனர். சரவணபவன் எம்.பியும் விடவில்லை. அவர்களின் பிடுங்குதலில் இருந்து மைக்கை காப்பாற்ற எதிர் நடவடிக்கைகளில் ஈடுபட்டார். வந்ததே சிப்பாய்க்கு கோபம்! சரவணபவன் எம்.பியை நோக்கி, அடிப்பதற்காக கையை ஓங்கினார்.

நல்லவேளையாக அந்தச் சமயத்தில் குறுக்கே புகுந்து கொண்ட அவரது மெய்ப்பதுகாவலர் தரித்தின் நெஞ்சின் மீது வீழ்ந்தது அந்தக்குத்து.மூர்க்கமான அந்த அடியில் நிலைகுலைந்து போனார் தரித். கலந்துரையாடலுக்கு தலைமை வகித்த தமிழரசுக்கட்சியின் காங்கேசன்துறைத் தொகுதிச் செயலாளர் சுகிர்தனின் உடலையும் படையினரின் கொட்டன்கள் பதம் பார்த்தன.

மேடையில் மட்டுமல்லாது கீழே அமர்ந்திருந்தவர்கள் மீதும் கொட்டன்களும், இரும்புக்கம்பிகளும் தாறுமாறாக விளையாடின. எவருமே படையினருடன் நியாயம் கதைக்கவோ, அல்லது அவர்களிடம் கருணை கிடைக்குமென்று எதிர்பார்க்கவோ முற்படவில்லை. சில நாள்களுக்கு முன்னர் சனல்4 வெளியிட்ட இலங்கையின் கொலைக்களம் என்ற ஆவணப்படத்தில் சீருடையினரின் கொடூரங்களைப் பார்த்த பயத்தில் இருந்து இன்னமும் மீளாததால் இங்கும் அப்படியான அசம்பாவிதங்கள் நடந்து விடுமோ என்றும் அஞ்சினர்.

தங்களை நிர்வாணமாக்கி தலையில் சுட்டோ அல்லது கொட்டன்களால் அடித்தோ கொலை செய்து விடுவார்களோ என்று பலர் எண்ணிப்பயந்தனர். எனவே வேறு வழியின்றி உயிரைக் கையில் பிடித்துக் கொண்டு ஓடத்தொடங்கினர். ஓடினாலும் சீருடையினர் விடுவதாயில்லை. பராசக்தி படப்பாணியில் சொல்வதானால் துரத்தினர், துரத்தினர் வாழ்வின் எல்லை வரை படையினர் துரத்தினர்.

உள்ளூராட்சித் தேர்தலில் போட்டியிடும் பெண் வேட்பாளர் ஒருவரை பெண் என்று கூடப்பாராமல் ஆவேசத்தோடு ஒரு சிப்பாய் கொட்டனோடு துரத்திச் சென்றான். மேடையில் நின்றிருந்த நாடாளு மன்ற உறுப்பினர் மாவை.சேனாதிராசாவின் மீதும் தாக்குதல் நடத்த முயற்சிக்கப்பட்டது. அதுவும் மெய்ப்பாதுகாவலர்களால் தடுக்கப்பட்டது.

மாவையின் சகோதரரின் கமெராவைப் பறித்தெடுத்து அதற்குள்ளிருந்த மெமரிசிப்பை பிடுங்கினர். சற்றும் தளராத விக்கிரமாதித்தர்களாக மீண்டும் மாவை மீது தாக்குதலை நடத்த சீருடையினர் முயன்றபோது, அவரது மெய்ப் பாது காவலர் சம்பத் துணிச்சலாக ஒரு காரியம் செய்தார். அதனால் ஓங்கிய சீருடையின் கை அந்தரத்திலேயே நின்றது. ஏனெனில் மெய்ப்பாதுகாவலர் சம்பத்தின் கைகளில் பிஸ்ரல் பளிச்சிட்டது. துப்பாக்கியைக் கண்டதும் சீருடையினருக்கு கொஞ்சம் பயம் வந்தது.

இனி ஒரு அடி விழுந்தால் உங்கள் மீது சுடுவதைத் தவிர வேறு வழியில்லை என்று கர்ச்சித்தவாறு துப்பாக்கியை நீட்டியபடி, மேடையில் நின்றவர்களை சம்பத்தும் ஏனைய மெய்ப்பாதுகாவலர்களும் பத்திரமாக வெளியேற்றினர்.

அதன் பின்னர் தெல்லிப்பழைப் பொலிஸில் இச்சம்பவம் குறித்து கூட்டமைப்பு எம்.பிக்கள் முறைப்பாட்டைச்செய்து கொண்டிருக்கும் போது அங்கு வந்த மேஜர் ஜெனரல் வல்கம நடந்த சம்பவத்துக்கு வெரி சொறி! வெரி சொறி! என மன்னிப்புக் கேட்டதோடு , முறைப்பாட்டைச் செய்யவேண்டாமெனவும் வேண்டினார். அத்துடன் ஊடகங்களிலும் இச்சம்பவம் பற்றிய செய்திகள் வெளி வராமல் பார்த்துக் கொள்ளும்படி கெஞ்சினார்.

ஆனால் அதையெல்லாம் பொருட் டுத்தாது கூட்டமைப்பினர் முறைப் பாட்டைச் செய்து விட்டு மீண்டும் அளவெட்டி மகாஜன மண்டபத்துக்கு வந்த போது , கூட்டமைப்பு எம்.பிக்களுக்கு தங்கள் கண்களையே நம்பமுடியவில்லை. அடிதடியால் திசைக்கொன்றாய் பறந்து, சிதறிக்கிடந்த கதிரைகள் எல்லாம் மிக நேர்த்தியாக அடுக்கப்பட்டு, களேபரம் நடந்த சுவடுகள் மறைக்கப்பட்டிருந்தன.

அதன் பின்னர் கண்டன அறிக்கைகள், ஜனாதிபதிக்கு கடிதம், வழக்குபோடுவதற்கான முயற்சி எனத் தொடர்கின்றன இச்சம்பவத்தின் அதிர்வலைகள். மிக நீண்டகாலத்துக்குப் பின்னர் நடைபெறப்போகும் உள்ளூராட்சித் தேர் ல் என்பதால் பிரசாரங்களை முழுவீச்சில் முன்னெடுக்க கூட்டமைப்பு நினைத்திருந்தது. ஏனெனில் மக்கள் உள்ளூராட்சி அமைப்புகள் இருப்பதைக் கூட மறந்து போய்விட்டார்கள். அதிகாரம் தன்னுடைய கைகளுக்கு வரப்போவதில்லை என்பதை நன்குணர்ந்து கொண்ட பேரினவாத அரசுகள் ஒவ்வொருமுறையும் உள்ளூராட்சித் தேர்தல்களைப் பிற்போடு வதையே தன்னுடைய மரபார்ந்த செயற்பாடாக வரித்திருந்தன.

தற்போதும் உள்ளூராட்சித் தேர்தலில் அரசுத் தரப்பின் வேட்புமனுக்கள் நிரா கரிக்கப்பட்டதால் எந்தவிதக் காரணங்களுமின்றி தேர்தலை அரசு ஒத்திப்போட்டது. பின்னர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்து, தமது வேட்பு மனுக்கள் ஏற்றுக்கொள்ளப்படுகின்றன என்ற தீர்ப்பினை பெற்றுக்கொண்டது. யாழ்.மாவட்ட தேர்தல் உதவி ஆணையாளர் திடீரென கட்டாயத்தின் பேரில் இடமாற்றம் செய்யப்பட்ட கையோடு புதிய தேர்தல் திகதியை அரசு வெளியிட்டது.

இவ்வளவு ரிஸ்க் எடுத்தும் தோல்வியைத் தழுவினால் அதைவிட அவமானம் வேறொன்றும் இருக்கப்போவதில்லை. போதாக்குறைக்கு வவுனியாவில் நடைபெற்ற உள்ளூராட்சி சபைகளுக்கான தேர்தலில் கூட்டமைப்பு அமோக வெற்றியீட்டியிருந்தது. அதே நிலைமையே யாழ்ப்பாணத்திலும் ஏற்படலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது. எனவே தான்கொட்டன்களையும், இரும்புக்கம் பிகளையும் கையிலெடுத்துள்ளது அரசுஇன்னமும் நாங்களே இந்தப் பகுதி யின் முடிசுடா ஆட்சியாளர்கள். எங்களை மிஞ்சி எதுவும் செய்யமுடியாது.

இங்கு நாங்கள் வைத்ததுதான் சட்டம். அடிப்போம், துவைப்போம், யாரும் எங்களை எதுவும் செய்யமுடியாது. இதுவே அளவெட்டித் தாக்குதல் மூலம் சீருடையினர் சொல்லியிருக்கும் செய்தி. மக்களை ஒரு அச்சுறுத்தலான சுழலுக்குள் வீழ்த்துவதன் மூலம் தேர்தலில் அவர்களுக்கிருக்கும் ஆர்வத்தைக் குறைத்து பயத்தை அதிகரிக்கச் செய்வதே இத்தாக்குதலின் உடனடி நோக்கம்.

இதன் மூலம் அவர்கள் நிறைய விளைவுகளை எதிர்பார்க்கிறார்கள். அச்சம் அதி கரித்தால் வாக்களிப்பதற்கு கூட்டமைப்பு ஆதரவாளர்கள் வரமாட்டார்கள். வீட்டுக் குள்ளேயே முடங்கிக் கிடப்பார்கள். இந்தச் சந்தர்ப்பத்தில் தமது பணபலத்தால் விலைக்கு வாங்கியவர்களைக் களத்தில் இறக்கி, அரசுத்தரப்புக்கே வாக்களிக்கச்செய்யலாம். சொற்பமான வாக்குகளைக் கொண்டே எல்லா உள்ளூராட்சிச் சபைகளையும் தமது காலடிக்குள் கொண்டுவரலாம். தமிழ்மக்கள் எங்கள் பக்கம்தான் என்று சர்வதேசத்தின் முன்னால் மார்தட்டலாம்.

அரசின் இத்தகைய எண்ணங்கள் அடாவடித்தாக்குதல்களால் நிறைவேறுமா என்பது கேள்விக்குறியான விடயமே. ஆனாலும் இப்படி நிறைய அச்சுறுத்தல்களையும், வெருட்டல்களையும், அடிகளையும், பலியெடுப்புகளையும், வலிகளையும் தாங்கிய மக்களை அரசு தவறாக எடை போடுகின்றது. தவறான வன்முறை வழியைத் தேர்வு செய்கிறது. இதற்கு ஜனநாயக வழி மூலம் உள்ளூராட்சி தேர்தல்களில் மக்கள் கொடுக்கப்போகும் அடி , அதிகாரத்தின் முகத்தில் விழுகின்ற மரண அடியாக இருக்கப்போவது மட்டும் நிச்சயம்.

ஈழநேசன்

1 Response to அளவெட்டியில் நடந்த அடாவடி! நடந்தவை என்ன? உதயனின் நேரடிப்பதிவு!!

  1. பயங்கரவாத அரசின் அனைத்து அடாவடித்தனங்களுக்கும் பதில் அனைத்து தமிழரும் ஒன்றிணைந்து தமிழீழம் என்ற தாரக மந்திரத்தை உச்சரிப்பது தான். இனியும் சிங்கள கொலைவெறியருடன் வாழ்வதானது பயங்கர காட்டு மிருகங்களுடன் வாழ்வதற்கு ஒப்பானது. த.தே.கூட்டமைப்பு பயங்கரவாத அரசின் நாடகங்ளுக்கு தாளம் போடாது எமது இலட்சியங்கள் நோக்கி பயணிக்கட்டும். உலக பார்வை இன்று தமிழர் மீது. பயங்கரவாத கொலைவெறியரசின் மாயைகளுக்குள் சிக்கி திணராமல் இதை சாதகமாக உபயோகிப்பது இன்றைய காலத்தின் தேவை. ஒன்றினைந்து செவ்வனே செயல்படுத்துவார்களா?

     

Post a Comment

Followers