Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

அடித்துப் படுகொலை செய்யப்பட்டபின்னர் தூக்கிலிடப்பட்டிருக்கலாம் என்று சந்தேகிக்கப்படும் நிலையில் இரு சடலங்கள் மீட்கப்பட்டுள்ளன. யாழ். நல்லூர் - கோப்பாய் இராசவீதியில் தோட்டமொன்றின் பனைமரத்தில் தூக்கில் தொங்கிய நிலையில் ஆண் மற்றும் பெண்ணின் இரண்டு சடலங்களே இன்று காலை கோப்பாய் சிறீலங்கா காவல்துறையினரால் மீட்கப்பட்டுள்ளன.

உரும்பிராய் யோகபுரத்தைச் சேர்ந்த, வாகனச் சாரதியான தனபாலசிங்கம் (வயது 42), அதே இடத்தைச் சேர்ந்த இந்துஷா (வயது 26) ஆகிய இருவரின் சடலங்களே இவ்வாறு தூக்கில் தொங்கிய நிலையில் காணப்பட்டன.

இதேவேளை மேற்படி தனபாலசிங்கம் ஏற்கனவே திருமணமாகி 4 பிள்ளைகளின் தந்தையாவார், அதேபோல் இந்துஷா 2 பிள்ளைகளின் தாயாவார். இவர்கள் இருவருக்கும் இடையில் பல வருடங்களாக இரகசியத் தொடர்பு இருந்து வந்ததாகவும் தெரிவிக்கப்படுகின்றது. இருவரும் முன்னர் ஒருவரையொருவர் காதலித்ததாகவும் பின்னர் வெவ்வேறு நபர்களைத் திருமணம் செய்துள்ளதாகவும் உடனடியான தகவல்கள் வெளியிடப்பட்டுள்ளன.

எனினும், தனபாலசிங்கம் நெஞ்சில் தாக்கப்பட்ட நிலையில் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று நேற்று மாலையே வைத்தியசாலையில் இருந்து வந்துள்ளார். சடலங்கள் காணப்படும் இடத்திலிருந்து 50 மீற்றர் தொலைவில் மிதிவண்டி, பாதணிகள், செல்பேசி, கைமணிக்கூடு ஆகியன ஆங்காங்கே சிதறுண்டு காணப்படுவதுடன், அவரது மருந்துச் சிட்டையும், எக்ஸ்ரே அட்டையும் குறித்த மிதிவண்டியில் தொங்கவிடப்பட்ட நிலையில் காணப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சடலங்களை அதிகாலை தோட்ட வேலைக்குச் சென்ற மக்கள் கண்டு கொடுத்த தகவலின் அடிப்படையில் காவல்துறையினர் மீட்டுள்ளனர். மேலும் கால்கள் நிலத்தில் முட்டும் நிலையில், ஒரே கயிற்றின் இரு முனைகளிலும் தூக்கில் தொங்கவிடப்பட்டுள்ள முறை தொடர்பாக உடனடியாக சந்தேகம் வெளியிடப்பட்டுள்ளது.

சடலங்கள் காணப்படும் இடத்திற்கு மிக அண்மையிலேயே சிறீலங்கா இராணுவத்தினரின் காவலரண் அமைந்துள்ள நிலையில், இராணுவத்தினரே இக்கொலையை புரிந்திருக்கலாம் என சந்தேகம் அப்பகுதியில் பரவலாக வெளியிடப்பட்டுள்ளது.
அண்மையக் காலமாக தமிழர் தாயகப் பகுதிகளில் தூக்கில் தொங்கிய நிலையிலும், கிணறுகளுக்குள் இருந்து சடலங்கள் கண்டெடுக்கப்பட்டு வருகின்றன. பெரும்பாலும் இந்த மரணங்கள் தற்கொலை போன்றே காண்பிக்கப்பட்டுள்ளன. ஆனாலும், ஒரு சில மரணங்கள் கொலை செய்யப்பட்டே தூக்கில் தொங்கவிடப்பட்டும், கிணற்றில் வீசப்பட்டும் இருந்தமை கண்டறியப்பட்டுள்ளது.

இந்நிலையில் இன்றைய இந்த மரணங்கள் பலத்த சந்தேகத்தை தோற்றுவித்துள்ளன. இருவரும் தூக்கில் தொங்கும்முறை இரண்டுபேரும் ஒன்றாக தற்கொலை செய்துகொள்வதற்கான வாய்ப்புக்களை பொய்யாக்கியுள்ளன. இவர்கள் கொலை செய்யப்பட்டே தூக்கில் தொங்கவிடப்பட்டுள்ளார்கள் என்பதற்கு அந்த இடத்திலேயே ஏராளமான ஆதாரங்கள் உள்ளன.
அத்துடன், ஒருவரே இந்தக் கொலையைச் செய்து இருவரையும் தொங்கவிடுவதற்கான சாத்தியங்களும் மிக அரிதாகவே இருப்பதாக அங்கிருந்து கிடைத்த தகவல்கள் தெரிவிக்கின்றன.

இது ஒரு கூட்டுக்கொலை என்பது தெளிவாகின்றது.

இந்தக் கொலையைச் செய்தவர்கள் யார்? சிறீலங்கா போர்க் குற்றங்களில் இருந்து தப்பிப்பதற்கு பல்வேறு முயற்சிகளை எடுத்துவருகின்றது. இந்நிலையில் மேலும் பல இனந்தெரியாத கொலைகள் நடப்பது சிறீலங்காவிற்கு ஆபத்தாகவே இருக்கும். ஏனெனில் இலங்கையில் நடைபெறும் குற்றங்களையும் அதனை சிறீலங்கா எவ்வாறு கையாளுகின்றது என்பதையும் சர்வதேச சமூகம் ஆளமாகக் கவனித்து வருதாக அண்மையில்தான் ஐக்கிய நாடுகள் சபை தனது அறிக்கை ஒன்றில் தெரிவித்திருந்தது. எனவே, கொலைகளை தற்கொலையாக மாற்றுவதன் ஊடாக அவற்றை திசை திருப்பும் நடவடிக்கை தற்போது நடந்துவருகின்றது என்பது உறுதியாகின்றது.

அந்த வகையில் இந்தத் தற்கொலை என்ற கதைக்கான உண்மையான காரணங்கள் கண்டறிப்பட்டாலே இந்த மரணத்திற்கான உண்மையான காரணம் உறுதியாகும். இந்தச் சம்பவம் இடம்பெற்றவுடன் கொழும்பின் சிங்கள ஊடகங்கள் காதல் ஜோடி தற்கொலை என்று செய்திகளை பரவலாக வெளியிட்டதில் இருந்தே, இந்தச் செய்தி எவ்வாறு பரவவேண்டும் என்பது தீர்மானிக்கப்பட்டுள்ளது புரிகின்றது.

எனவே, இவ்வாறான காதல், கள்ளக் காதல் என்ற கதைகள் கட்டப்பட்டு கொலைகளை தற்கொலைகளாகத் திசை திருப்பும் நடவடிக்கைகளில் ஒன்றாக இதுவும் இருக்கலாம் என்றே கூறப்படுகின்றது.

காணொளி - இங்கே அழுத்தவும்.




0 Responses to யாழில் பனை மரத்தில் தூக்கில் தொங்கிய காதல் ஜோடி! (அதிர்ச்சிப் படங்கள், காணொளி இணைப்பு)

Post a Comment

Followers