Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

இன்று முள்ளிவாய்க்காலின் அவலங்கள் இடம்பெற்று ஏறக்குறைய இரண்டரை வருடங்கள் கடந்து விட்டன. ஆனால் ஈழத்தமிழரின் நிம்மதியற்ற வாழ்வு நாட்டிலும், புலம் பெயர் தேசத்திலும் தொடர்கிறது. இதற்கு காரணங்கள் பல!

இப்படியாக நாம் தொடர்ந்து வாழ்வோமேயானால், ஈழத் தமிழினம் இன்னும் இரண்டு, மூன்று சகாப்தங்களில் அடையாளம் தெரியாமல் அழிக்கப்படும் நிலைக்கு தள்ளப்படுவார்கள்.

சிறீலங்கா அரசு திட்டமிட்டு தமிழினத்தை அழிக்கும் வேலையை தொடரும் இந்த நிலையில், மிகவும் அவதானமாக எமது இனத்தை, எமது நிலத்தை காப்பாற்ற வேண்டிய நாங்கள், சிறீலங்கா அரசின் நிகழ்ச்சி திட்டத்துக்கு தெரிந்தோ தெரியாமலோ பலர் துணை போகிறார்கள்.

தமிழீழ விடுதலைப் புலிகளின் போராட்டம் தற்காலிகமாகவோ அன்றி நிரந்தரமாகவோ மௌனித்துள்ள இவ் வேளையில், சிறீலங்கா அரசு ஈழத் தமிழர்களை சிங்களவர்களாகவும், தமிழர் தாயக பிரதேசத்தை சிங்கள தேசமாகவும், சைவ, கிறிஸ்தவ மக்களை பௌத்தர்களாகவும் மாற்றும் வேலையை திறம்பட செயற்படுத்தி வருகின்றனர்.

பிரித்தானியர் இலங்கையைவிட்டு வெளியேறிய போது எவ்வாறு எல்லைப்புறத்தில் வாழ்ந்த தமிழர்களை சிங்களவர்களாக மாற்றினார்களோ அவ்வாறே இப்பொழுதும் நடைபெறுகின்றது.

பாராளுமன்றத்தில் உறுப்பினர்களாக உள்ளவர்கள் தங்களால் இயன்றவற்றை செயல்படுத்திக் கொண்டிருக்கிறார்கள். ஆனால் தேர்தலில் மக்களால் நிராகரிக்கப்பட்டவர்கள் பாராளுமன்ற உறுப்பினர்களை குறைகாண்பதிலேயே குறியாக இருக்கிறார்கள். தினமும் மக்களையும், மண்ணையும் பறிகொடுத்துக் கொண்டிருக்கிறோம் என்பதை குறை கூறுபவர்கள் எப்போதாவது சிந்தித்ததுண்டா?

இப்படிப் பிழைபிடிப்பதிலேயே பலர் காலத்தை கழித்துக் கொண்டிருக்கிறார்கள். ஆனால் சிங்கள பௌத்தவாதிகள் தமக்குள் வேற்றுமைப்பட்டாலும் தமிழருக்கு எதிராக செயல்படுவதில் முழுத்தீவிலும் ஒற்றுமையாக செயல்படுகின்றனர்.

தமிழீழ விடுதலைப் போராட்டத்தின் சுமைகளிலிருந்து தப்பி வந்து வெளிநாடுகளில் தஞ்சம் கோரியுள்ள நாம், முள்ளிவாய்க்கால் அவலம் இடம்பெறுவதற்கு முன் ஓர் குடையின் கீழ் நின்று அயராது உழைத்தோம். ஊர்வலம், முக்கிய தினங்கள், விழிப்புப் போராட்டங்கள், கலை கலாச்சார நிகழ்வுகள் என தாயக விடுதலைப் போராட்டத்திற்கு பலம் சேர்க்கும் வகையில் அயராது வேலை செய்தோம். ஆனல் இன்று நிலத்திலும், புலத்திலும் என்ன செய்வது என அறியாத நிலைக்கு தள்ளப்பட்டுள்ளோம்.

நிலத்திலும் புலத்திலும் வைத்தியசாலையில் சிலரும், சிறைச்சாலைகளில் பலரும், முகாம்களில் ஆயிரக்கணக்கானோரும், இருக்கிறார்களா இல்லையா என்று தெரியாமல் பலருமாக யார் எம்மை அரவணைப்பார்கள் என்ற ஏக்கத்துடன் அலைகின்றோம்.

புலம்பெயர் தேசம்

தற்போதைய ஈழத் தமிழர் வாழ்வில் இவையாவற்றிற்கும் விடை காணக்கூடிய ஒரே ஒரு இடம் புலமே.

ஏனெனில் நாம் வாழும் நாடுகள் ஜனநாயக, மனிதநேய நாடுகள் மட்டுமல்லாது எமது விடுதலைப் போராட்டத்திற்கு பயங்கரவாதப் பெயர் சூட்டி, எமது இனம் அழிய துணைநின்றவர்களும் இவர்களே.

இவ் நாடுகள் எம்மை இனிதே வரவேற்று, உடை, உணவு, கல்வி, வேலைகள் அழித்ததுடன் நாம் சட்டரீதியாக இவ் நாடுகளில் வாழுவதற்கான ஒழுங்குகளையும் செய்து தந்தார்கள்.

ஆனால் நாம் முன்பு உகண்டாவிலும், கென்யாவிலும் இரவோடு இரவாக சந்ததி சந்ததியாக வாழ்ந்த இந்திய மக்களுக்கு நடந்தவற்றை எண்ணும் பொழுது, புலத்தில் இன்னுமொரு இடி அமீன் தோன்ற முடியாது எனக் கூறமுடியாது.

ஆகையால் எமது நிலத்தில், நிரந்தர வாழ்வுரிமைக்கான நமது பங்களிப்பை நாம் தொடர்வது மிக அவசியம்.

முள்ளிவாய்க்கால் பேரவலத்தின் பின்னர், புலம் பெயர் வாழ்வில் புதிது புதிதாக சங்கங்கள் தினமும் உருவாவது தவிர்க்க முடியாமல் உள்ளது. இவ் வேளையில் நாம் தொடர்ந்து ஒற்றுமையாக வாழவேண்டுமாயின,; இவ் புதிதாக தோன்றியுள்ள சங்கங்கள் புதிய வேலைத் திட்டங்களை இனம் கண்டு, அவற்றை செய்வதே சாலச் சிறந்தது.

எப்படியாக வேலை செய்வது?

முள்ளிவாய்க்காலுக்கு முன் (மு.மு.), முள்ளிவாய்க்காலுக்கு பின் (மு.பி.) என சங்கங்களை நாம் இனம் காண முடியும்.

இதன் அடிபடையில் மு.மு. இருந்த சங்கங்கள், முன்பு செய்து வந்த செயல்திட்டங்களுக்குள் யாரும் இடையூறுகள் செய்யாது அவற்றின் செயல்பாடுகளை தொடர அனுமதிக்க வேண்டும்.

இதேவேளை தற்பொழுது, விசேடமாக முள்ளிவாய்க்காலுக்கு பின் பல வேலைத் திட்டங்கள் செயல்படுத்தப்படாமல் உள்ளன. இவற்றை மு.பி சங்கங்கள் பொறுப்பெடுத்து செயல்படுத்தலாம். அதன் மூலம் அவர்கள் தாமும் மக்களின் சேவகர்கள் என்பதை உணர்த்தும் அதேவேளை, மக்களிடையே பிரபல்யமும் பெற முடியும்.

முள்ளிவாய்க்கால் அவலத்தின் பின்னர் சரணடைந்த போராளிகள், இடம் பெயர்ந்த மக்கள், யாரும் அற்ற நிலையில் உள்ள மக்கள், உறவுகளை இழந்த சிறுவர் சிறுமியர்களென தமிழ் மக்கள் மீது சுமத்தப்பட்டுள்ள சுமைகளை முள்ளிவாய்க்காலின் பின் தோன்றிய சங்கங்கள் முன்னெடுத்து செய்ய முடியும்.

அது மட்டுமல்லாது எமது விடுதலையை முன்னெடுத்த தமிழீழ விடுதலைப் புலிகள் மீதான தடையை சட்ட ரீதியாக விலக்குவதற்கும் இச் சங்கங்களில் ஒரு சங்கம் முன்னெடுக்க முடியும்.
இவ்வாறாக புதிய புதிய வேலைத் திட்டங்களை செய்வதன் மூலமே புலம் பெயர் வாழ்வில் சங்கங்களிடையேயான பிரச்சினைகள், சர்ச்சைகளுக்கு தீர்வு காண முடியும்.

மு.பி உருவான சங்கங்கள் மு.மு உள்ள சங்கங்கள் ஏற்கெனவே செய்து கொண்டிருக்கும் வேலைக்குள் நுழைவோம், பிரிப்போம், பிளவு படுத்துவோம் என முயற்சிப்பார்களேயானால், மக்கள் இவர்களுடைய நோக்கம், சிந்தனை, செயற் திட்டங்களை தவறாகவே கருத முடியும், ஏற்கனவே கருதப்படுகிறது.

எமது தேசியத்தை நாம் காப்பாற்ற வேண்டும், சிங்கள அரசின் செயல் திட்டத்திற்கு நாம் ஒரு போதும் துணை போகவில்லை என எண்ணும் ஒவ்வொருவரும் மற்றவர்களுடைய வேலைகளுக்கு இடையூறு செய்யாது வேலை செய்ய வேண்டும்.

இச் சந்தர்ப்பத்தில் சகலரும் ஒன்றை மட்டும் மனதில் நிறுத்த வேண்டும். எம்மிடையே இன்று நேற்று அல்ல மிக நீண்ட காலமாக, தமது சலுகைகளுக்காக, தமது பதவி சுகபோகங்களுக்காக இல்லாத பிரச்சினைகளை உள்ளது போல் உருவாக்கும் பலர் இன்றும் இருக்கிறார்கள். இவர்கள் இவ்விரு மு.மு, மு.பி. சங்கங்களினிடையே எரியும் நெருப்பிற்கு எண்ணெய் ஊற்றுகிறார்கள் என்பதையும் அறிவோம்.

கடந்த இரண்டரை வருடத்தில் நாம் புதிதாக எதையும் சாதிக்கவில்லை. இன்னும் எம்மவரிடம் இருந்து குறைபாடுகளை வெளிப்படையாக இணையத் தளங்களில் பகிர்ந்து கொண்டதனால், சிறீலங்கா அரசும், புலனாய்வு பிரிவுகளும் எமது விடுதலைப் போராட்டத்தை தொடர்ந்து ஒடுக்கவும் நசுக்கவும் நாமே வழிவகுத்தது கொடுத்து வருகிறோம்.

இன்றிலிருந்து நாம் அனைவரும் ஓர் புதிய அணுகுமுறையை மேற்கொள்வோம். புதிதாக உருவாகியுள்ள சங்கங்கள் புதிய வேலைத்திட்டங்களையும், பழைய சங்கங்கள் தமது வழமையான வேலைத் திட்டங்களையும் மேற்கொள்ளும் பொழுது, இடையில் பிரச்சினைகளை உருவாக்கி எண்ணெய் ஊற்றுவோருக்கும் வேலை இல்லாமல் போகிறது. சகல சங்கங்களும் தமிழ் தேசியத்தின் அடிப்படையில் பிரச்சனையில்லாது எதிர்காலத்தில் வேலை செய்ய முடியும்.

இன்றிலிருந்து மற்றைய சங்கங்கள், மற்றைய ஈழத் தமிழரை பற்றி குறை சொல்வோர், உண்மையில் தமிழ் தேசியத்தில் விசுவாசம் அற்றவர்கள் மட்டுமல்லா, இவர்கள் சிறிலங்க அரசின் செயற் திட்டத்திற்கு துணை போவபர்களாகக் கருதிக் கொள்வோம்.

''ஒன்று பட்டால் உண்டு வாழ்வு”

0 Responses to புலம்பெயர் வாழ்வில் புதிய சங்கங்கள் புதிய வேலை திட்டங்களை இனங்காண வேண்டும் ச. வி. கிருபாகரன்

Post a Comment

Followers