Content feed Comments Feed
  “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

தமிழீழத்தின் தளபதிகளில் ஒருவனாகவும், அரசியல் தலைவனாகவும் இருந்து தமிழர்களின் வாழ்வில் விடிவைப்பெற்றுத்தர துடியாய் துடித்து உலகெலாம் ஓடித்திரிந்த எமது அன்புக்குரிய பிரிகேடியர் சுப.தமிழ்ச்செல்வன் வீரச்சாவை அணைத்து மூன்று ஆண்டுகள் கடந்துவிட்டன.

தமிழினத்தின் இருப்புக்காக, அதன் மூச்சுக்காக உழைத்த அந்த உத்தமன் இன்று எம்மத்தியில் இல்லாவிட்டாலும், அனைவரினதும் மனங்களில் குடிகொண்டுள்ளான். இவனது நினைவுடன் நாம் ஒன்றுபட்டு இறுதிவரை விடுதலைக்காக உழைப்போம். அதுவே விடுதலைக்காக போராடி களத்தில் வீழ்ந்த மாவீரர்களுக்கு செய்யும் அஞ்சலியாகும்.மேலும் சு.ப.தமிழ்ச்செல்வன் காணொளிகள்

பிரிகேடியர் சுப.தமிழ்ச்செல்வனின் வீரமரணம் குறித்து தமிழீழ தேசியத்தலைவர் அவர்கள் 03.11.2007 அன்று விடுத்த செய்தியை காலத்தின் தேவை கருதி மீள் பிரசுரம் செய்கின்றோம்.
தலைமைச் செயலகம்,
தமிழீழ விடுதலைப் புலிகள்,
தமிழீழம்.
03-11-2007.

எனது அன்பான மக்களே!

சமாதான வழியில், நீதியான முறையிலே எமது மக்களது தேசியப் பிரச்சினைக்கு அமைதித்தீர்வு காணுமாறு அனைத்துலகம் அடுத்தடுத்து அழைப்புவிடுத்தபோதும், சிங்கள தேசத்திலிருந்து நல்லெண்ணம் வெளிப்படவில்லை. பௌத்தத்தின் காருண்யத்தைக் காணமுடியவில்லை. சிங்கள தேசம் தனது இதயக் கதவுகளைத் திறந்து, சமாதானத் தூதும் அனுப்பவில்லை. மாறாக, போர்க்கழுகுகளை ஏவி, இராட்சதக் குண்டுகளை வீசியிருக்கிறது. எமது அமைதிப்புறாவைக் கொடூரமாக, கோரமாகக் கொன்றழித்திருக்கிறது.

தமிழுலகமே ஆழமாக நேசித்த ஒரு அரசியல் தலைவனைச் சிங்கள தேசம் இன்று சாகடித்திருக்கிறது. தமிழீழ மக்களின் மனங்களை வென்ற ஒரு தன்னிகரற்ற தலைவனைச் சிங்களம் பலிகொண்டிருக்கிறது. எமது சுதந்திர இயக்கத்தின் அரசியற்றுறைப் பொறுப்பாளர் பிரிகேடியர் தமிழ்ச்செல்வனையும் ஏனைய ஐந்து போராளிகளையும் இழந்து இன்று தமிழீழ தேசம் வரலாற்றில் என்றுமில்லாத ஒரு பேரிழப்பைச் சந்தித்திருக்கிறது. இந்த மாபெரும் சோக நிகழ்வு எம்மக்களை அதிர்ச்சியிலும் ஆழ்ந்த துயரத்திலும் ஆழ்த்தியுள்ளது.

தமிழ்ச்செல்வன் எமது சுதந்திர இயக்கத்தில் இணைந்த காலத்திலிருந்தே என்னோடு ஒன்றாக, நெருக்கமாக வாழ்ந்தவன். நான் அவனை ஆழமாக அறிந்து, ஆழமாகவே நேசித்தேன். எனது அன்புத் தம்பியாகவே வளர்த்தேன். அவனது அழகிய சிரிப்பும் அதனுள் புதைந்த ஆயிரம் அர்த்தங்களையும் அவனுள் அடர்ந்து கிடந்த ஆற்றல்களையும் ஆளுமைகளையும் நான் ஆரம்பத்திலிருந்தே கண்டுகொண்டேன். இலட்சியப் போராளியாக, தலைசிறந்த தானைத் தளபதியாக, மாபெரும் அரசியல் பொறுப்பாளனாக, அனைத்துலகோடும் உறவாடிய இராஜதந்திரியாக, பேராற்றல்மிக்க பேச்சுவார்த்தையாளனாக அவனை வளர்த்தெடுத்தேன்.

தான் நேசித்த மண் விடுதலை பெறவேண்டும், தான் நேசித்த மக்கள் சுதந்திரமாக, கௌரவமாக, பாதுகாப்பாக வாழவேண்டுமென்று சதா சிந்தித்தான். தான் நேசித்த அந்த மக்களது விடுதலைக்காக, விடிவிற்காகத் தன்னையே ஊனாக உருக்கி, உறுதியாக உழைத்த ஒரு இலட்சிய நெருப்பு அவன்.

நீண்ட நெருப்பு நதியாக நகரும் எமது விடுதலை வரலாற்றில் அவன் ஒரு புதிய நெருப்பாக இணைந்திருக்கிறான். இந்த இணைவிலே, எமது கனத்த இதயங்களில் ஒரு பெரும் இலட்சிய நெருப்பை மூட்டியிருக்கிறான். எமது இலட்சிய உறுதிக்கு உரமேற்றியிருக்கிறான். இந்த உறுதியில் உரம்பெற்று, நாம் எமது இலட்சியப் பாதையில் தொடர்ந்தும் உறுதியோடு பயணிப்போம்.

‘புலிகளின் தாகம் தமிழீழத் தாயகம்’

வே. பிரபாகரன்
தலைவர்,
தமிழீழ விடுதலைப் புலிகள்.

2 Responses to பிரிகேடியர் சு.ப.தமிழ்ச்செல்வன் நினைவு நாள் (தலைவரின் அறிக்கை, காணொளி இணைப்பு)

 1. kalki Says:
 2. மரணத்தின் வலி -சாதா
  மானிடருக்கே வீரனே !- அரிய
  மாவீரர்க்கல்ல !
  போராளியாக மட்டுமல்லாமல் -ஒரு
  சமாதானப்புறாவாக நீ - சிறகடித்த
  வீதிகளெல்லாம் இன்றும் கண்ணீர் சிந்துகிறது!-தானைத்
  தலைமையின் அன்புக்குப் பாத்திரமானவன்!
  தாரணி புகழ் பாடும் தனயனானவன்!- எதிரியோடு
  பொருத்தி பேரதிர்வைத் தோற்றியவன்!- உன்
  கனவு வசப்படும் ஒரு நாள்!!

  -கல்கி-

   
 3. உங்கள் நினைவுகள் எமை விட்டகலாது. உமது புன்னகை பூத்த முகம் எம் மனக்கண்ணில் எப்போதும். எம் விடியலுக்காய் உமை இழந்தீர் உத்தமரே உம் மூச்சுக்காற்றில் எம் சுவாசம். ஆண்டுகள் கடந்தாலும் உம் நினைவுகள் எம்முடனே. வீர வணக்கம்.

   

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com