Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

இலங்கை விவகாரத்தில் செயற்படும் கனடிய அரசின் செயற்பாடு எங்களின் மக்களிற்கு பெரிய நம்பிக்கையையும் பேரெழுச்சியையும் தருகிறது. வெற்றியோ தோல்வியோ தீர்வுக்கான முயற்சிகளை தொடர்வதே தமிழினத்தின் இன்றைய தேவை என கூட்டமைப்பின் பா.உ சுமந்திரன் தெரிவித்துள்ளார்.

கனடாவில் இடம்பெற்ற பொங்கல் விழாவில் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

மேலும் பா.உ சுமந்திரன் தெரிவிக்கையில்,

ஈழத்தின் இன்றைய யதார்த்தை அப்படியே கனடிய மக்கள் பிரதிநிதிகளின் கண் முன்னே கொண்டு வந்து அழகான உரைநடையில் வேற்றினத்தவரின் கவனத்திற்கு கொண்டு வந்த சுமந்திரன் அவர்கள் தாங்கள் கடந்த அக்டோபர் மாதம் அமெரிக்க கனடா வந்ததிலிருந்து தாயகத்திலிருப்பதை விட மேற்குலகிற்கும் வேறு நாடுகளிற்கும் பயணித்து தமிழ் மக்களின் பிரச்சினையை உலகமயப்படுத்துவதிலேயே தன்னை அர்ப்பணித்துள்ளதாகத் தெரிவித்தார்.

ஈழத்தமிழ் மக்களின் சார்பில் கனடிய அரசிற்கு நன்றியைத் தெரிவித்த சட்டத்தரணி சுமந்திரன் பா.உ. அவர்கள் கனடா இப்படிக் கொள்கை வழி நிற்பது மற்றைய நாடுகளின் இராஜதந்திரிகளுடன் உரையாடும் போது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிற்கு பெரியதொரு பலமாக அமைந்துள்ளதாகவும் குறிப்பிட்டார்.

இளைய வயது இராணுவத்தினர் வடக்கு-கிழக்கு எங்கனும் விதைக்கப்பட்டிருக்கிறார்கள் என்றும் அவர்கள் தமிழ் பால்ய வயது பெண்களுடன் தொடர்புகளை ஏற்படுத்தும் நிலை சாதாரணமாக வந்திருக்கிறது என்றும் இந்தவிடயத்தை தாங்கள் அரசின் உயர்பீடத்தின் கவனத்திற்கு கொண்டு வந்தபோது அப்படியேதும் நடந்தால் அந்த இராணுவத்தினர் மேற்படி பெண்களை திருமணம் செய்ய வேண்டும் என இராணுவத் தளபதி கண்டிப்பாக உத்தரவிட்டுள்ளார் எனத் தெரிவித்தனர் எனவும் தமிழ் இனச்சுத்திகரிப்பிற்கு இதைவிடச் சிறந்த உதாரணம் இருக்கமுடியாது எனத் தெரிவித்தார்.

உலக வரலாற்றில் போரின் முடிவுகளிலெல்லாம் வெற்றிபெறும் தரப்பு முழுவதையுமே அபகரித்து அனுபவிப்பதும் தோற்றுப்போன தரப்பு அனைத்தையுமே இழப்பது தான் வழக்கம் என்றும் அதுபோலவே ஈழத்தில் நடந்தாலும் மற்றைய இடங்களில் போரின் பின்னர் தலைமை மாற்றம் பெற்றது ஆனால் மகிந்தாவும் அவரது சகோரர்களும் தொடர்ந்தும் ஆட்சியில் நிலைப்பது தமிழர்களிற்கான பலவீனமாக அமைந்து விட்டது என்றும் குறிப்பிட்டார்.

இதனால் பெரும்பாண்மையினரிடையே இனப்பிரச்சினை தொடர்பான உண்மையான தரவுகள் தன்மைகள் சென்றுவிடாமல் ஆயுதப்போரும் அதன் பின்னரான அகிம்சைப் போரும் ஒன்றேயென்ற எண்ணமும் தமிழர்களிற்கு ஏன் உரிமைகள் கொடுக்கப்பட வேண்டுமென்ற எண்ணமும் நிலைத்து நிற்கிறது என்றும் இதனை சிங்களவர்களிடையே எடுத்து விளக்குவதற்கு மகிந்த சகோதரர்களின் சாம்ராஜ்யம் தவறிவருகிறது என்றும் தெரிவித்தார்.

இப்போது இடம்பெறும் பேச்சுக்களைப் பற்றி பலரும் பலவாறாகப் பேசுகிறார்கள். ஆனால் யதார்த்தின்படி இந்தப் பேச்சில் தொடர்ந்தும் நிலைத்து நின்றாலேயே தமிழர்கள் வெற்றி பெறுவார்கள் என்பதோடு இன்றுவரையுமான பேச்சுக்களில் அரசு பல தடவைகள் மறுத்துப் பேச்சுக்கள் தடைப்பட்டாலும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வேண்டுகோள்களை மகிந்த தரப்பு ஏற்றதால் மாத்திரமே பேச்சு இழுபட்டபடி தொடர்கிறது என்றும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு இறங்கிப் போகவில்லை என்றும் குறிப்பிட்டார்.

மேற்குலகின் அனுசரணையுடன் தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு இந்தப் பேச்சில் சிறீலங்காவின் நிலைப்பாட்டை வெளிகொணரும் எனவும், தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு வாக்களித்த மக்களிற்கு வேறு தெரிவுகள் இருந்த போதும் அவர்கள் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிற்கு வாக்களித்ததன் மூலம் வழங்கப்பட்ட பொறுப்பை நாங்கள் நிறைவேற்றியேயாக வேண்டும் என்பதில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு உறுதியாகவுள்ளதாகவும் கூறினார்.

புலம்பெயர்ந்த நாடுகளில் மகிந்தவிற்கோ அல்லது அவரது சகோரர்களிற்கோ எதிராக நடவடிக்கை எடுக்க முயற்சிக்கும் போதெல்லாம் அவர்களின் ஆதரவும் மதிப்பும் சிங்களவர்களிடையே ஏறிச்செல்கிறது எனவும், இவர்களை சிங்களவர்கள் ஏதோ வீரபுருசர்களாகவே மதிக்கும் ஒரு கேவலமான துர்ப்பக்கிய நிலையே தென்பகுதியெங்கும் நிலவுகிறது இது தமிழர்களிற்கு எதிரான உணர்வுகளிற்கு மேலும் வித்திடுகிறது என்றும் குறிப்பிட்டார்.

வடக்கு கிழக்கு இணைந்த ஒரு தமிழர் தாயகம் இருப்பதை உறுதிப்படுத்த வேண்டுமெனவும், தாயகத்திலுள்ள மக்களிடமும் உலகப்பந்தில் சரியான முடிவுகளை எட்டும் நாடுகளின் தலைமைகளிடமும் இந்தப் பிரச்சினை தீர்க்கப்படவேண்டும் என்ற நிலை ஏற்பட்டுள்ள இன்றைய நிலையில் இந்த விடயத்தில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிற்கான உங்களின் ஆதரவை நாங்கள் வேண்டி நிற்கிறோம் என்றும் கூறினார்.

புலம்பெயர்ந்த தமிழர்கள் தாயகத் தமிழர்களின் நலன்களைக் கருத்திற் கொண்டு அமைதி பேணி பேச்சுவார்த்தை நடவடிக்கைகளை கவனிக்க வேண்டுமெனவும் இதுவொரு சுலபமான செயற்பாடல்ல என்பது தனக்குத் தெரியுமென்றும் ஆனால் புலம்பெயர்ந்த தமிழர்களின் பலமானது ஒரு அரசியற் பலமாக மாறி எமது தாயக மக்களின் விடிவிற்கு வழிவகுக்க வேண்டுமெனவும் தாயக மக்களின் சார்பில் கேட்டுக் கொண்டார்.

0 Responses to கனடாவின் நிலைப்பாடு தமிழர்களிற்கு மிகவும் நம்பிக்கையைத் தருகிறது!: சுமந்திரன்

Post a Comment

Followers