ஐரோப்பாவிற்குள் நுழைந்துவிட வேண்டுமென படகுகளில் ஏறி வடக்கு ஆபிரிக்க நாடுகளில் இருந்து மத்திய தரைக்கடலைத் தாண்டுவோரின் மரணப்பட்டியலை ஐ.நா வெளியிட்டுள்ளது. சென்ற ஆண்டு மட்டும் ஐ.நாவிற்கு கிடைத்த புள்ளிவிபரங்களின் அடிப்படையில் 1500 பேர் கடலில் மூழ்கி மரணித்துள்ளார்கள் என்று தெரிவிக்கிறது.
கடந்த 2006ம் ஆண்டில் இருந்து அதிகரித்து வந்த மத்தியதரைக்கடல் மரணங்கள் சென்ற ஒரேயொரு ஆண்டில் மட்டும் மிகப்பெரிய தொகையாக அமைந்துவிட்டதாக அந்த அறிக்கை கவலை தெரிவிக்கின்றது. இத்தொகை ஐ.நாவின் பதிவேடுகளுக்கு வந்த மரணத் தொகையாகும் ஆனால் இதைவிட பெரிய தொகை மரணங்கள் நடைபெற்றுள்ளதாக கருதப்படுகிறது.
சிறிய படகுகளில் பெருந்தொகை மக்கள் ஏறி வரும்போது நடுக்கடலில் படகுகள் கவிழ்தல், நீரில் மூழ்குதல் என்று இந்த விபத்து மரணங்கள் இடம் பெறுகின்றன. மேலும் சென்ற ஆண்டு வடக்கு ஆபிரிக்க நாடுகளில் ஏற்பட்ட உள்நாட்டு போர்கள் பெருந்தொகையான மக்களை அங்கிருந்து வெளியேறத் தூண்டியது. இதன் பாதிப்பு காரணமாக மரணித்தோர் தொகை பெரும் எண்ணிக்கையை தொட்டுள்ளது.
உலகக் காலநிலை மாற்றம், புவி வெப்பமடைதல், பட்டினி போன்றவை காரணமாக மிகப் பெருந்தொகையான மக்கள் வரும் வருடங்களில் ஆபிரிக்காவில் இருந்து இக்கடல் பகுதியால் வெளியேறுவார்கள். அத்தருணம் மத்தியதரைக்கடலே அகதிகளின் மரணங்களால் நிறையக்கூடிய ஆபத்திருப்பதாக முன்னரே ஐ.நா சுட்டிக்காட்டியிருக்கிறது. ஆனால் மக்கள் வெளியேற்றத்தை கட்டுப்படுத்தி, அவர்களை காக்கும் வல்லமை ஐ.நாவுக்கு இருப்பதாக தெரியவில்லை.




0 Responses to ஐரோப்பா வரும் வழியில் 1500 பேர் அவலச்சாவு