நேற்று முன் தினம் அமெரிக்க பாதுகாப்பு அமைச்சர் பின்லேடன் மறைத்து வைக்கப்பட்டிருந்த தகவல் பாகிஸ்தானுக்கு தெரியும் என்று குறிப்பிட்டு பரபரப்பை ஏற்படுத்தியிருந்தார். நேற்று வெளியான நேட்டோ அறிக்கை தலபான்களுடன் பாகிஸ்தான் அரசுக்கு நேரடி தொடர்பிருந்ததாக குற்றம் சுமத்தியுள்ளது. நேட்டோ படைகளால் கைது செய்யப்பட்ட தலபான் போராளி ஒருவர் கொடுத்த வாக்குமூலத்தை அடிப்படையாக வைத்து இந்த விவகாரத்தை கசிய விட்டுள்ளது நேட்டோ.
ஆப்கானில் இறங்கியுள்ள மேலை நாட்டு படைகள் தோல்வியுடன் திரும்ப வேண்டும் என்ற நோக்கில் பாகிஸ்தான் உளவுப்பிரிவான ஐ.எஸ்.ஐ தலபான்களுக்கு உதவி வருகிறது. மேலும் தலபானின் முக்கிய தலைவர்களுக்கும் இவர்களுக்கும் இடையே அடிக்கடி சந்திப்புக்கள் நடைபெறும். அத்தருணம் தலபான்களின் தாக்குதல் வியூகங்களையும், அதற்கேற்ற ஆயுதம் வெடிமருந்து போன்றவற்றையும் பாகிஸ்தான் உளவுப்பிரிவே வழங்கியும் வந்துள்ளது. இவ்வளவு பெரிய படையணி களம் இறக்கப்பட்டும், இத்தனை கோடிகள் கொட்டி இறைக்கப்பட்டும் ஆப்கான் போர் வெல்ல முடியாத போராக இருப்பதற்கான காரணம் தலபான்களின் பின்னால் வலுவான கரம் ஒன்று இருப்பதுதான். இப்போது பாகிஸ்தான் மீதான குற்றச்சாட்டுக்கள் மேலை நாடுகளில் இருந்து வெளிப்படையாக முன் வைக்கப்படுகின்றன.
பாகிஸ்தானின் உள்ளக அரசியலில் பாரிய சிக்கல்கள் வரப்போவதையே இந்த நிகழ்வு சுட்டிக்காட்டுகிறது. ஈரான் – ஆப்கான் – தலபான் என்ற அச்சு உடையப் போவதையே இந்த அறிக்கைகள் உணர்த்துகின்றன. ஆனால் பாகிஸ்தான் அதிகாரிகள் இது நேட்டோவின் புசத்தல் என்று கூறியுள்ளார்கள்.




0 Responses to ஆப்கான் போரில் நேட்டோ தோற்க வேண்டும்: பாக் உளவுப்பிரிவு