Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

தமிழ்த்திரையுலகின் இயக்குனர் சிகரம் என அழைக்கப்படும் கே.பாலச்சந்தர் இன்று (23 டிசம்பர்) செவ்வாய்க்கிழமை காலமானார்.

இறக்கும் போது அவருக்கு வயது 84. இருதயக் கோளாறு காரணமாக அண்மையில் பை-பாஸ் அறுவை சிகிச்சை செய்திருந்த பாலச்சந்தருக்கு கடந்த வாரம் திடீரென மூச்சுத் திணறல் ஏற்பட்டிருந்தது. இதையடுத்து சென்னையில் உள்ள காவேரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் சிகிச்சை பலனின்றி இன்று மாலை அவர் காலமானார். அவரது மரணம் திரையுலகத்தினரிடம் பெரும் கவலையை ஏற்படுத்தியுள்ளது.

அவர் இறந்த செய்திக்கேட்டு திரையுலக பிரபலங்கள் வருவதற்குள் திமுக தலைவர் கருணாநிதி மருத்துவமனைக்கு வந்து பார்த்துவிட்டு சென்றுள்ளார். நாளை மறுதினம் பாலச்சந்தரின் உடல் தகனம் செய்யப்படும் என்றும், நாளை கலை இறுதி அஞ்சலிக்காக அவரது இல்லத்தில் உடல் வைக்கப்படும் என்றும் தெரிய வருகிறது.

1965ம் ஆண்டு மக்கள் திலகம் எம் ஜி ஆரின் வற்புறுத்தல் காரணமாக தெய்வத்தாய் என்கிற திரைப்படத்தில் கதை வசன கர்த்தாகவாக திரையுலகில் அறிமுகமானவர் கே.பாலச்சந்தர். நன்னிலத்திலிருந்து நாடக உலகத்தில் சாதிக்க வேண்டும் என்று சென்னைக்கு வந்த கே.பாலச்சந்தர், சினிமா உலகில் முடிசூடா மன்னனாக தனித் தன்மையுடன் வலம் வந்தவர்.

கைலாசம் பாலச்சந்தர் என முழுப்பெயர் கொண்ட இயக்குனர் சிகரம், 1930ம் ஆண்டு ஜூலை 9ம் திகதி தமிழ்நாட்டின் நன்னிலம் அருகேயுள்ள நல்லமாங்குடி எனும் இடத்தில் பிறந்தார். பள்ளிப் பருவத்தில் நாடகங்கள் நடத்துவதில் மிகுந்த ஆர்வம் கொண்டவரான பாலச்சந்தர், அண்ணாமலை பல்கலையில் பட்டப்படிப்பு முடித்து ஆசிரியராக பணியை தொடங்கினார். அப்போது மேடக நாடகத் துறையில் அவரது திறமையை கண்டு தெய்வத் தாய் படத்துக்கு கதை வசனம் எழுதும் படி எம்.ஜி.ஆர் அழைப்பு விடுத்தார். அதன் பின்னர் நீர்க் குமிழி படத்தின் மூலம் திரைப்பட இயக்குனராக பாலச்சந்தர் திரையுலகில் அறிமுகமானார். 1965ம் ஆண்டு வெளிவந்த அத்திரைப்படத்தில் நாகேஷ் கதாநாயகனாக நடித்திருந்தார். இத்திரைப்படம் பாலச்சந்தருக்கு மாத்திரமல்லாது நாகேஷின் புகழையும் உச்சத்திற்கு கொண்டு சென்றது.

தொடர்ந்து கே.பாலச்சந்தரின் இயக்கத்தில் வெளியான இரு கோடுகள், அபூர்வ ராகங்கள், தண்ணீர் தண்ணீர், அச்சமில்லை அச்சமில்லை, ஒரு வீடு இரு வாசல் மற்றும் ருத்ரவீணா ஆகிய திரைப்படங்கள் அவருக்கு தேசிய விருதுகளை பெற்றுத்தந்தன.

இயக்குனர், தயாரிப்பாளர், திரைக்கதை எழுத்தாளர், நடிகர், மேடை நாடக இயக்குனர், தொலைக்காட்சி நாடகத் தயாரிப்பாளர் என பன்முகங்கொண்ட கே.பாலச்சந்தர் சென்னை பல்கலைக் கழகம், அழகப்பா பல்கலைக் கழகம் மற்றும் சத்யபாமா பல்கலைக் கழகம் ஆகியவை கௌரவ முனைவர் பட்டங்களையும் வழங்கியுள்ள.

கே.பாலச்சந்தரின் அறிமுகத்தில் தமது முதல் வாய்ப்பை பயன்படுத்திக் கொண்டவர்களில் 48 நடிகர்கள், 42 நடிகைகள், 10 தொழில்நுட்ப கலைஞர்கள் இன்று சினிமா உலகில் முன்னணிக் கலைஞர்களாக வலம் வந்து கொண்டிருக்கிறார்கள்.

அழுத்தமான திரைக்கதை, நகைச்சுவைக்கான முக்கியத்துவம், குடும்ப சச்சரவுகள், உறவுகளின் உரசல்கள், சமூகப் பிரச்சினைகள் என்பவற்றை திரைக்கதையில் யதார்த்தமாக கொண்டுவந்த விதம் என்பன கே.பாலச்சந்தரை தனித்துவப்படுத்தி காட்டத் தொடங்கின.

மேஜர் சந்திரகாந்த், இரு கோடுகள், பூவா தலையா, பாமா விஜயம், தாமரை நெஞ்சம், நான் அவனில்லை, புன்னகை, சிந்து பைரவி, அபூர்வ ராகங்கள், தண்ணீர் தண்ணீர், அச்சமில்லை அச்சமில்லை, அக்னிசாட்சி, புதுப்புது அர்த்தங்கள், வானமே எல்லை, ஜாதிமல்லி, நூற்றுக்கு நூறு, கல்கி போன்ற வெற்றிப் படங்களை தமிழில் இயக்கிய இவர் மரோசரித்ரா உள்ளிட்ட தெலுங்குப் படங்களையும் ஏக் துஜேகேலியே, ஜரா சி ஜிந்தகி, ஏக் நயீ பஹேலி போன்ற இந்திப்படங்களையும் இயக்கியுள்ளார்.

இயக்குனர் சிறீதரைப் போன்று பல புதுமுகங்களை அறிமுகம் செய்தவர் பாலச்சந்தர். அவர்களுள் மிக முக்கியமானவர்கள் ரஜினிகாந்த் மற்றும் கமல்ஹாசன். ஜெயலட்சுமி, சிறீபிரியா, விஜயகுமார், ஜெய்கணேஷ், டெல்லி கணேஷ், சிவச்சந்திரன், பிரகாஷ் ராஜ், சுஜாதா, ஷீபா, சரத் பாபு, சரிதா, ஒய்.ஜி மகேந்திரன், எஸ்.வி சேகர், மேஜர் சுந்தரராஜன், ராதாரவி என பல நூற்றுக்கணக்கான திரை நடிகர்கள் பாலச்சந்திரன் அறிமுகத்தில் சினிமாவில் அறிமுகமானவர்கள்.

வெற்றி, தோல்வி ஆகிய இரு துருவங்களையும் ஒரே நேரத்தில் தமது திரையுலக வாழ்வில் பாலச்சந்தர் அனுபவித்தது உண்டு. நான்கு சுவர்கள் படுதோல்வி அடைந்து, விமர்சன அளவிலும் ஒதுக்கப்பட்ட அதே கால கட்டத்தில் அவரது நூற்றுக்கு நூறு வெளியாகி பெரும் பாராட்டையும் வெற்றியையும் ஈட்டியது.

ஆனால் எம்.ஜி.ஆரை வைத்து ஒரு படம் கூட பாலச்சந்தர் இயக்கவில்லை. சிவாஜிகணேசன் நடிப்பில் பாலச்சந்தர் இயக்கிய ஒரே படம் எதிரொலி. பாலச்சந்தரின் இயக்கத்தில் சிந்து பைரவி படத்தில் தமது பாத்திரத்திற்காக சுஹாசினி இந்திய அளவில் சிறந்த நடிகை விருது பெற்றார். இளையராஜாவிற்கும் சிறந்த இசையமைப்பாளர் விருதினை ஈட்டித் தந்த திரைப்படம் அது.

பாலச்சந்தரின் வெற்றிப்படங்களில் ஒன்றான நூற்றுக்கு நூறு தற்போது மறுவாக்கத்தில் உள்ளது. பாலச்சந்தர் இறுதியாக பார்த்தாலே பரவசம், பொய் ஆகிய திரைப்படங்களை இயக்கியிருந்தார்.

இவருடைய பெரும்பாலான படங்களில், மனித உறவு முறைகளுக்கு இடையிலான சிக்கல்கள், சமூகப் பிரச்சினைகள் ஆகியவையே கருப்பொருளாய் விளங்கின. 90களுக்குப் பிறகு கையளவு மனசு, ஜன்னல் போன்ற பெரும் வரவேற்பை பெற்ற தொலைக்காட்சித் தொடர்களையும் இயக்கியவர் கே.பாலச்சந்தர். தமிழ்ச் சினிமா உலகில் முழுநீளத் தொலைக்காட்சி தொடர் முறையை முதன்முதலில் உருவாக்கியவரும் இவர் தான்.

0 Responses to இயக்குனர் சிகரம் கே.பாலச்சந்தர் காலமானார்!

Post a Comment

Followers