Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் ஆணையாளர் சையிட் அல் ஹூசைன் நான்கு நாட்கள் கொண்ட உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்டு சற்றுமுன்னர் (இன்று சனிக்கிழமை) இலங்கை வந்தார்.

இலங்கையின் இறுதி மோதல்களில் இடம்பெற்ற மனித உரிமை மீறல்கள் தொடர்பில் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையில், கடந்த செப்டெம்பர் மாதம் இலங்கையின் இணை அனுசரணையுடன் பிரேரணை நிறைவேற்றப்பட்டிருக்கும் சூழ்நிலையில், சையிட் அல் ஹூசைனின் விஜயம் முக்கியத்துவம் பெறுகின்றது.

எதிர்வரும் 10ஆம் திகதி வரை இலங்கையில் தங்கியிருக்கும் சையிட் அல் ஹூசைன், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, பிரதமர் ரணில் விக்ரமசிங்க எதிர்க்கட்சித் தலைவர் இரா.சம்பந்தன், வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர உள்ளிட்ட அமைச்சர்கள், அதிகாரிகள், சிவில் சமூகப் பிரதிநிதிகள், இராஜதந்திர சமூகம் மற்றும் தேசிய மனித உரிமைகள் ஆணைக்குழுவின் அதிகாரிகளைச் சந்தித்து பேச்சுவார்த்தைகளில் ஈடுபடவுள்ளார்.

நாளையும், நாளைமறுதினமும் (ஞாயிற்றுக்கிழமை மற்றும் திங்கட்கிழமை) யாழ்ப்பாணம் மற்றும் திருகோணமலைக்குச் செல்லும் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் ஆணையாளர், மாகாண ஆளுநர்கள், முதலமைச்சர்கள் மற்றும் மாகாணசபை உறுப்பினர்களைச் சந்திக்கவுள்ளார். இதற்கு மேலதிகமாக சிவில் சமூகப் பிரதிநிதிகள், மனித உரிமை மீறல்களால் பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் இடம்பெயர்ந்தவர்களையும் அவர் சந்திப்பதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

யாழ்ப்பாணத்திற்குச் செல்லும் ஹூசைனை சந்தித்து தமது கவலைகளையும் எதிர்பார்ப்புக்களையும் முன்வைப்பதற்கு காணாமற்போனவர்களின் குடும்பங்கள் எதிர்பார்த்துள்ளன.

நேற்றையதினம் யாழ்ப்பாணம் திருமறை கலாமன்ற மண்டபத்தில் கூடிய காணாமற்போனவர்களின் குடும்ப உறுப்பினர்கள் ஹூசைனை நேரடியாகச் சந்தித்து தமது பிரச்சினைகளைத் தெரிவிப்பதற்கு அனுமதி கோரத் தீர்மானித்தனர். தமக்கு அவரை சந்திப்பதற்கான நேரத்தை ஒதுக்கித் தருமாறு மகஜரொன்றையும் அவர்கள் வடக்கு மாகாண முதலமைச்சர் மற்றும் யாழ்ப்பாணத்தில் உள்ள ஐக்கிய நாடுகள் அலுவலகத்தில் கையளித்துள்ளனர்.

அவ்வாறு சந்திப்பதற்கான சந்தர்ப்பம் ஏற்படுத்திக்கொடுக்கப்படாத பட்சத்தில் ஹூசைன் யாழ்ப்பாணம் சென்றிருக்கும் சந்தர்ப்பத்தில் காணாமற்போனவர்களின் உறவுகள் கவனயீர்ப்புப் போராட்டமொன்றை மேற்கொள்வதற்கான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டிருப்பதாகவும் தெரியவருகிறது.

இதனிடையே, முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு ஆதரவான கூட்டு எதிரணி, ஹூசைனின் வருகைக்கு எதிர்ப்புத் தெரிவித்து கொழும்பில் இன்று சனிக்கிழமை ஆர்ப்பாட்டமொன்றை நடத்தவுள்ளது.

0 Responses to ஐ.நா. மனித உரிமைகள் ஆணையாளர் சையிட் அல் ஹூசைன் இலங்கை வருகை; நாளை யாழ் பயணம்!

Post a Comment

Followers