Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

இறுதி மோதல்களின் போது இடம்பெற்ற மனித உரிமை மீறல்கள் மற்றும் குற்றங்கள் தொடர்பில் நீதியான விசாரணை முன்னெடுக்கப்பட வேண்டும் என்று வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் முன்வைக்கும் கோரிக்கையை தான் ஏற்றுக் கொள்வதாக சமூக வலுவூட்டல் மற்றும் நலன்புரி பிரதி அமைச்சர் ரஞ்சன் ராமநாயக்க தெரிவித்துள்ளார்.

“அதற்காக நான் இராணுவ வீரர்களுக்கு எதிரானவன் அல்ல. இராணுவத்தினர் யுத்தம் என்ற பெயரை காரணமாக கொண்டு தவறான செய்கைகளை முன்னெடுப்பது சட்டப்படி குற்றமாகும். இதற்கு உடன்பட முடியாது. இராணுவ வீரர்களுக்கு எவரையும் கடத்துவதற்கோ கொல்வதற்கோ தனது மனைவியை சுடுவதற்கோ கூட அனுமதி இல்லை. இவ்வாறான சம்பவங்கள் முறையாக விசாரிக்கப்பட வேண்டும்.” என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

ஐக்கிய தேசியக் கட்சி தலைமையகமாக சிறிகொத்தாவில் நேற்று திங்கட்கிழமை இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு பேசும் போதே ரஞ்சன் ராமநாயக்க மேற்கண்டவாறு கூறியுள்ளார்.

அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது, “வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனின் செயற்பாடுகள் தேர்தலில் வாக்குகளை சுவீகரிக்கும் நோக்கத்தைக் கொண்டது. இச்செயற்பாடுகளை அடிப்படையாக வைத்து மீண்டுமொரு யுத்தத்தை ஆரம்பிக்கவோ அல்லது ஒட்டுமொத்த தமிழ் சமூகத்தையும் ஒரங்கட்டுவதற்கோ அரசாங்கம் ஒருபோதும் தயாரில்லை.

வடக்கில் சி.வி.விக்னேஸ்வரன் தலைமையில் முன்னெடுக்கப்பட்ட ஆர்ப்பாட்ட பேரணியானது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினதோ அல்லது தமிழ் மக்களினதோ சிந்தனை கருத்துக்கள் அல்ல. இதனால் தெற்கிலுள்ள மக்கள் இப்பேரணியையிட்டு குழப்பமடையத் தேவையில்லை.

இதேவேளை, வடக்கில் புத்த விகாரைகள் மற்றும் உருவச் சிலைகள் அமைக்க கூடாது என்ற கோரிக்கையை தவிர்ந்த முதலமைச்சரின் ஏனைய கோரிக்கைகளுக்கு நான் உடன்படுகிறேன். புத்த விகாரைகளையும் உருவச் சிலைகளையும் வடக்கிலிருந்து அகற்றுவதற்கு நான் ஒருபோதும் இணங்கப் போவதில்லை. வடக்கில் புத்தர் சிலைகளை வைக்க கூடாது விகாரைகளை அமைக்க கூடாதென கூறும் அதிகாரம் எவருக்கும் இல்லை.

கொழும்பிலும் தெற்கிலும் சிங்களவர்களும் தமிழர்களும் நல்லிணக்கத்துடன் வாழ்கிறார்கள். நாம் கோயில்களுக்கு செல்கின்றோம். கிரிக்கெட் விளையாட்டு வீரரான முத்தையா முரளீதரனுடன் ஒன்றாக வேலை செய்கின்றோம். தமிழ் அரசியல்வாதியான முன்னாள் வெளிவிகார அமைச்சர் லக்ஷ்மன் கதிர்காமரை பிரதமராக தெரிவு செய்வதற்கு முன்மொழிந்திருந்தோம்.

தென்னிந்திய தமிழ் படங்களையே நாம் சிங்களத்தில் நடிக்கின்றோம், தமிழ் சினிமா நடிகர்களான ரஜனிகாந்த், கமல்ஹாசன் மற்றும் தயாரிப்பாளர் சங்கர் ஆகியோரை சந்தித்து வருகின்றோம். தமிழ் இனத்தைச் சேர்ந்த கதாநாயகி பூஜா உமாசங்கரே சிங்கள திரையுலகில் தற்போது முன்னணியில் இருக்கிறார்.

தேசிய கீதத்தை தமிழ் மொழியில் இசைக்கிறோம், கதிர்காமத்துக்கு சென்று வருகிறோம். எங்களுக்குள் எந்தப் பிரச்சினையும் இருப்பதாக தெரியவில்லை. ஆனால் முதலமைச்சர் கூறுவதன்படி வடக்கில் சிங்களவர்களோ பௌத்த மதமோ இருக்கக் கூடாது என்றால் தெற்கிலிருக்கும் தமிழர்களையும் வடக்கிற்கே அனுப்ப நேரிடும். ஆனால் கனவிலும் அப்படியானதொரு நிலை உருவாகுவதனை நாம் விரும்பவில்லை. கருத்துக்களை வெளியிடும் சுதந்திரம் எவருக்கும் உண்டு.

கடந்த அரசாங்கத்தில் தமது கருத்துக்களை வெளியிடுவதற்காக ஊர்வலம் சென்றவர்கள் சுட்டுக் கொல்லப்பட்டனர். ஆனால் நல்லாட்சி அரசாங்கத்தில் அவ்வாறான நிலை உருவாகாது.” என்றுள்ளார்.

0 Responses to போர்க்குற்றங்கள் தொடர்பில் நீதி விசாரணை கோரும் சி.வி.விக்னேஸ்வரனின் கோரிக்கையை ஏற்கிறேன்: ரஞ்சன் ராமநாயக்க

Post a Comment

Followers

உலகப்பரப்பில் நடைபெறும் மாவீரர் நாள் விபரங்களை கீழ் உள்ள படத்தில் அழுத்தி காணலாம்.