Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

கடந்த காலங்களில் இடம்பெற்ற வேண்டத்தகாத சம்பவங்களினால் காயப்பட்டுள்ள மக்களின் மனங்களை ஆற்றுப்படுத்தும் நடவடிக்கைகளில் அரசாங்கம் ஈடுபட்டுள்ளதாக பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.

மாகாணங்கள், நகர சபைகள் மற்றும் பிரதேச சபைகளுக்கு மத்தியில் இருந்து அதிகாரங்கள் பகிரப்படும் வகையிலான ஒரு அதிகார பகிர்வு குறித்து கலந்துரையாடி வருவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

அத்தோடு, தமிழ் அரசியல் கைதிகளை விடுதலை செய்வதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்படுவதாகவும், காணாமற்போனவர்களுக்கு என்ன நடந்தது? என்ற உண்மை நிலையை கண்டறிவதற்காகவே காணாமற்போனவர்கள் தொடர்பிலான அலுவலகம் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும், இதில் பழிவாங்கும் எண்ணம் இல்லை என்றும்  பிரதமர் கூறியுள்ளார்.

 யாழ். மாவட்டச் செயலகத்தில் 4 மாடிகளைக் கொண்ட புதிய நிர்வாகக் கட்டடத் தொகுதித் திறப்பு விழாவும், நினைவுக்கல் திரை நீக்கமும் நேற்று சனிக்கிழமை இடம்பெற்றது. அந்நிகழ்வில் கலந்து கொண்டு பேசும் போதே பிரதமர் ரணில் விக்ரமசிங்க மேற்கண்டவாறு குறிட்டுள்ளார்.

அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது, “போர் நிறைவடைந்த பின்னர் 13ஆம் திருத்தச்சட்டம் அரசியல் தீர்வுக்கான அடிப்படையாக அமையும் என நாங்கள் நம்பினோம். ஆனால் அப்போதைய ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ 13 பிளஸ் என்றார்.

ஆனால் ஒன்றுமே நடக்கவில்லை. தமிழர்கள், முஸ்லிம்கள், சிங்களவர்கள் பல பிரச்சினைகளை எதிர்நோக்க வேண்டியிருந்தது.

இந்த நிலையிலேயே ஐ.தே.கட்சியும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியும் இணைந்து தேசிய அரசாங்கத்தை உருவாக்கினோம்.  நாம் பாராளுமன்றத்தை அரசியலமைப்பு சபையாக மாற்றி, வழிகாட்டல் குழு, மற்றும் ஆறு உப குழுக்கள் ஆகியவற்றை உருவக்கி அதன் ஊடாக சகல மக்களிடமிருந்தும் கருத்துக்களை பெற்றிருக்கின்றோம்.

இதன் ஊடாக நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறைமை ஒழிப்பு, அதிகார பகிர்வு தேர்தல் முறைமை மாற்றம் உள்ளிட்ட பல விடயங்கள் தொடர்பாக பேசி வருகின்றோம்.

குறிப்பாக தேர்தல் மறுசீரமைப்பு விடயத்தில் 80வீதமான முன்னேற்றம் காணப்பட்டிருக்கின்றது.

இதேபோல் நிறைவேற்று அதிகாரமுள்ள ஜனாதிபதி முறைமை ஒழிப்பு தொடர்பாகவும் நாம் தொடர்ச்சியாக பேசிக் கொண்டிருக்கின்றோம். அதிகார பகிர்வு விடயத்தில் மத்தியில் இருந்து மாகாணங்களுக்கும், நகரசபைகளுக்கும், பிரதேச சபைகளுக்கும் வரையில் அதிகாரங்கள் பகிரப்பட்டிருக்கும் வகையில் ஒரு அதிகார பகிர்வு குறித்துப் பேசி வருகின்றோம்.

இதேபோல் அரசியலமைப்பு மறுசீரமைப்புக்கான வாக்கெடுப்பு பொதுசன வாக்கெடுப்பாக அமைவும். மேலும் 9 மாகாணங்களுக்கும் செனற் சபை ஒன்றும் உருவாக்கப்படும். அதற்கான அதிகாரங்கள் தொடர்பாகவும் பேசி வருகிறோம்.

மேலும் நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறைமை ஒழிப்பு தொடர்பாக ஆலோசனைகள் பெறப்படுகின்றது.

இந்நிலையில் புதிய அரசியலமைப்பின் உத்தேச யோசனைகள் எதிர்வரும் நவம்பர் மாதத்தில் நிறைவு செய்யப்படும். மாகாணங்களுக்கு சில அதிகாரங்கள் பகிரப்பட்டதன் பின்னர் மத்திய அரசாங்கத்தினால் அவை மீள பெறப்படும் என்ற அச்சமும் உள்ளது. எனவே அவை தொடர்பாகவும் நாங்கள் சரியான முறையில் பேசியிருக்கின்றோம்’

இப்போது சிலர் பௌத்தம், தேசிய கொடி, தேசிய கீதம் பாதுகாக்கப்படவேண்டும்

என்கிறார்கள். பௌத்த சமயம் ஆபத்தான நிலையில் உள்ளதாக கூறி இனவாதம் பேசுகிறார்கள். சரத் பொன்சேகா கைது செய்யப்பட்டபோது தலதா மாளிகையில் பௌத்த பிக்குகள் போராட்டம் ஒன்றை நடத்த இருந்தனர். அப்போது அங்கே சென்று அவர்களை அச்சுறுத்தி புதிய பீடம் ஒன்றை உருவாக்குவோம் என கூறியவர்கள் இப்போது கூச்சலிடுகிறார்கள்.” என்றுள்ளார்.

0 Responses to காயப்பட்டுள்ள மக்களின் மனங்களை ஆற்றுப்படுத்தும் நடவடிக்கைகளில் அரசாங்கம் ஈடுபட்டுள்ளது: ரணில்

Post a Comment

Followers

உலகப்பரப்பில் நடைபெறும் மாவீரர் நாள் விபரங்களை கீழ் உள்ள படத்தில் அழுத்தி காணலாம்.