Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

குறுகிய  இலாபங்களுக்காக அரச மருத்துவர்கள் சங்கம் அராஜகம் பண்ணி, மருத்துவத் துறையின்  கௌரவத்தை சீரழிப்பதாக கல்வி அமைச்சர் அகில விராஜ் காரியவசம் குற்றஞ்சாட்டியுள்ளார்.

ஆயினும், அரச மருத்துவர்கள் சங்கத்தின் பாசிசவாததத்துக்கு ஜனநாயகவாதியான தான் ஒருபோதும் தலைசாய்க்கப் போவதில்லை என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

பாராளுமன்றத்தில் நேற்று செவ்வாய்க்கிழமை கல்வி அமைச்சு தொடர்பில் விசேட அறிவிப்பொன்றை வெளியிட்டு உரையாற்றும் போதே அகில விராஜ் காரியவசம் மேற்கண்டவாறு கூறியுள்ளார்.

அவர் மேலும் குறிப்பிட்டுள்ளதாவது, “கடந்த வாரம் கல்வி அமைச்சுக் கட்டடத்துக்குள் சட்டவிரோதமாக நுழைந்து இரவு முழுவதும் எதிர்ப்புப் போராட்டத்தில் ஈடுபட்டிருந்த அரச மருத்துவர்கள் சங்கத்தினருக்கு, கொழும்பு தேசிய வைத்தியசாலையின் அம்பியூலன்ஸ் வண்டியில் உணவு மற்றும் குடிபானங்கள் கொண்டு சென்றமைக்கான சாட்சிகள் இருக்கின்றன.

இடமாற்றம் பெற்றுச் செல்லும் அரச மருத்துவர்களின் பிள்ளைகளுக்கு அரச பாடசாலைகளில் அனுமதி வழங்கப்பட வேண்டும் எனக் கோரி கடந்தவாரம் கல்வி அமைச்சுக்குள் நுழைந்த அரச மருத்துவர்கள் சங்கத்தின் பிரதிநிதிகள் ஆர்ப்பாட்டம் செய்தனர். அன்றைய தினம் நடைபெறவிருந்த பாடசாலை மாணவர்களுக்கு இடையிலான சித்திரப் போட்டியின் பரிசளிப்பு விழாவையும் நடக்கவிடாது இவர்கள் குழப்பியுள்ளனர்.

இவர்கள் தமது பிள்ளைகளின் பாடசாலைப் பிரச்சினைக்காக ஏனைய மாணவர்களின் உரிமைகளை மீறும் வகையில் நடந்து கொண்டதுடன், தமது சொந்தத் தேவைக்கான போராட்டத்துக்கு கொழும்பு தேசிய வைத்தியசாலைக்குச் சொந்தமான அம்பியூலன்ஸ் வண்டியொன்றையும் பயன்படுத்தியுள்ளனர். நோயாளர்களை காவிச் செல்லும் அம்பியூலன்ஸ் வண்டியில் எதிர்ப்புப் போராட்டத்தில் ஈடுபட்டிருந்த அரசாங்க வைத்திய அதிகாரிகளுக்கு உணவு மற்றும் குடிபானம் கொண்டுவரப்பட்டமைக்கு தெளிவான சாட்சிகள் உள்ளன. இவ்வாறான போராட்டமொன்றை முன்னெடுத்து ஊடகங்களுக்கு நாடகமாடுவதற்கு அவர்கள் முயற்சித்தனர்.

கடந்த மார்ச் மாதம் முதல் இன்றுவரை பிரபல பாடசாலைகளுக்கு உள்வாங்கிய மாணவர்களின் பட்டியலை வெளியிடுமாறு மருத்துவர்கள் சங்கம் சவால் விடுகிறது. நாம் 1ஆம், 5ஆம், 6ஆம் தரங்களுக்கு மாணவர்களை உள்வாங்கவில்லை.  எமக்கு நெருக்கமானவர்களின் பிள்ளைகளை பாடசாலைகளுக்கு சேர்க்கவில்லை. அனைத்து செயற்பாடுகளும் வெளிப்படைத் தன்மையுடனேயே மேற்கொள்ளப்பட்டது. எமக்கு எவரையும் அரசியல் ரீதியில் பழிவாங்கவேண்டிய தேவை கிடையாது. கூட்டு எதிரணி பாராளுமன்ற உறுப்பினர்களின் பிள்ளைகளைக் கூட மேன்முறையீட்டு சபைக்கு முன்வைத்து உகந்த பாடசாலைகளை பெற்றுக் கொடுத்திருக்கிறோம்.

அரச மருத்துவர்கள் சங்கம் வெளியிட்டுள்ள போலி ஆவணத்தின் காரணமாக நியாயமான மருத்துவர்கள் அசௌகரியங்களுக்கு முகங்கொடுக்க நேரிட்டுள்ளது. மருத்துவ சங்கம் எம்மை முட்டாளாக்கி சுவரில் சாய்த்து தங்களுடைய மோசடிகளை நியாயப்படுத்த முயல்கிறது. கடந்த ஆட்சியில் அவற்றை சாதிக்க முடிந்தாலும் எமது ஆட்சியில் அதற்கு இடமில்லை.” என்றுள்ளார்.

0 Responses to அரச மருத்துவர்கள் சங்கம் மருத்துவத் துறையின் கௌரவத்தை சீரழிக்கின்றது: அகில விராஜ் காரியவசம்

Post a Comment

Followers

உலகப்பரப்பில் நடைபெறும் மாவீரர் நாள் விபரங்களை கீழ் உள்ள படத்தில் அழுத்தி காணலாம்.