Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

நாட்டில் பெரும்பான்மையாகவுள்ள சாதாரண மக்களிடம் இனவாதப் பிரிவினையை ஏற்படுத்திவிட்டு, அதன்மூலம் மேல் வர்க்கத்தினர் நன்மையடைகின்றனர் என்று மக்கள் விடுதலை முன்னணியின் (ஜே.வி.பி) தலைவர் அநுரகுமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.

யாழ்ப்பாணம் சங்கானையில் ‘நாட்டின் எதிர்காலமும் இடதுசாரிகளின் கடமையும்’ என்ற தொனிப்பொருளில் நேற்றுமுன்தினம் சனிக்கிழமை நடைபெற்ற  மக்கள் கருத்தரங்கில் கலந்துகொண்டு உரையாற்றிய போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.

அவர் மேலும் கூறியுள்ளதாவது, “நாட்டு மக்களின் பிரதான தேவையாகவுள்ள கல்வி, சுகாதாரம் மற்றும் வாழ்வாதார தேவைகளை வழங்குவதில் இதுவரை வந்த சகல அரசாங்கங்களும் தோல்வியையே கண்டுள்ளன. நாடு இன்று பாரிய பொருளாதார நெருக்கடிக்குள் சிக்குண்டிருப்பதற்கு காரணம், இந்த அரசாங்கங்கள் கடந்த 68 வருட காலமாக கடைப்பிடித்திருந்த மோசமான பொருளாதார கொள்கைகளே.

இவற்றைவிட நாட்டிலுள்ள மக்கள் கஷ்டப்பட்டு உழைத்து அதனூடாக சேர்க்கப்படுகின்ற தேசிய சொத்தானது மேல் வர்க்கம் என்ற ஓர் சிறிய குழுவினால் சூறையாடப்பட்டு செல்கின்றது. குறிப்பாக நாட்டின் சுகாதார அமைச்சர் இந்நாட்டில் மருத்துவம் பெறுவதில்லை. அதே போன்று கல்வியமைச்சரது பிள்ளைகளும் இந்நாட்டில் கற்காது வெளிநாடுகளிலேயே கற்கின்றார்கள். இவ்வாறு நாட்டின் தேசிய சொத்தானது ஓர் குறிப்பிட்ட குழுவினால் சூறையாடப்பட்டு வருகின்றது.

நாட்டிலுள்ள மேல் வர்க்கத்தினர் ஒற்றுமையாக வாழ்ந்துகொண்டு சாதாரண மக்களிடையே பிரிவினையை தோற்றுவிக்கின்றனர். கடந்தகால யுத்தத்தில் பாதிக்கப்பட்டவர்கள் சாதாரண மக்களும் அவர்களது பிள்ளைகளுமே தவிர மேல் வர்க்கத்தினர் அல்லர்.

எனவே மேல் வர்க்கத்திற்கு எதிரான போராட்டமொன்று அவசியம். இப் போராட்டத்தினூடாக வடக்கிலும் தெற்கிலும் ஒடுக்கப்பட்ட மக்களுக்காக அரசாங்கம் ஒன்று உருவாக்கப்பட வேண்டும். வெறுமனே தனித்தனியாக போராடி எதனையும் வெல்ல முடியாது. எனவே அனைத்து மக்களும் ஒன்றுதிரண்டு இதற்காக போராட வேண்டும். இதனூடாக நாட்டில் மேல் வர்க்கத்தினருக்கு மட்டுமாக உள்ள ஆட்சிமுறையை சாதாரண மக்களுக்கும் சென்றைடையக்கூடிய ஓர் ஆட்சிமுறையாக உருவாக்க முடியும்.” என்றுள்ளார்.

0 Responses to சாதாரண மக்களிடம் இனவாத பிரிவினையை ஏற்படுத்தி மேல் வர்க்கத்தினர் நன்மையடைகின்றனர்: அநுரகுமார திஸாநாயக்க

Post a Comment

Followers

உலகப்பரப்பில் நடைபெறும் மாவீரர் நாள் விபரங்களை கீழ் உள்ள படத்தில் அழுத்தி காணலாம்.