Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

கிழக்கு முஸ்லிம் மக்களின் சம்மதத்துடன் வடக்கு- கிழக்கு மாகாணங்கள் ஒரு நிர்வாக அலகாக இணைப்பட வேண்டும் என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினரும், பேச்சாளருமான எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார். 

வழக்கொன்றில் வாதாடுவதற்காக வவுனியா நீதிமன்றத்திற்கு நேற்று புதன்கிழமை வருகை தந்த அவர், வடக்கு- கிழக்கு இணைப்பு தொடர்பில் ஊடகவியலாளர்கள் கேள்வி எழுப்பிய போதே மேற்கண்டவாறு பதிலளித்துள்ளார்.

எம்.ஏ.சுமந்திரன் கூறியுள்ளதாவது, “வடக்கு, - கிழக்கு இணைப்பு என்பது 1957ஆம் ஆண்டு பண்டா- செல்வா ஒப்பந்தத்தில் கூறப்பட்டுள்ள  ஒரு நிலைப்பாடு. அந்த ஒப்பந்தத்தில் கூட மாகாண எல்லைகளுக்கு அப்பால் பிராந்திய சபைகள் ஒன்று சேரலாம் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது. அதற்கு காரணம் வடக்கு- கிழக்கு இணைக்கப்பட முடியும் என்பதன் யதார்த்தமே. இலங்கை - இந்திய ஒப்பந்தத்திலும் தெட்டத் தெளிவாக இது கூறப்பட்டு 13வது திருத்தம், மகாணசபை சட்டத்தில் அதற்கான ஏற்பாடுகளும் செய்யப்பட்டிருந்தன.

வடக்கு- கிழக்கு இணைக்கப்பட்டு ஒரு நிர்வாக அலகாக இருக்க வேண்டும் என்பதில் எந்தவிதமான மாற்றுக் கருத்தும் கிடையாது. 2010ஆம் ஆண்டில் இருந்து நாங்கள் முன்வைத்து வருகின்ற எமது தேர்தல் விஞ்ஞாபனங்களில் வடக்கு - கிழக்கு இணைக்கப்பட வேண்டும் என்று தெட்டத் தெளிவாக கூறப்படுகிறது.

இந்த இணைப்பு கிழக்கில் வாழ்கின்ற முஸ்லிம் மக்களின் பூரண சம்மதத்துடனே இடம்பெற வேண்டும் என்பதும் எமது நிலைப்பாடு. இலங்கை தமிழரசுக் கட்சி 1949.12.19இல் உருவாக்கிய அரசியலமைப்பில்கூட முஸ்லிம் மக்களும் ஒரு தேசத்திற்கு உரியவர்கள், அவர்களுக்கும் சுயநிர்ணய உரித்து உண்டு என்பது எங்களால் ஏற்றுக் கொள்ளப்பட்ட ஒரு விடயம்.

வடக்கு- கிழக்கு தமிழ் பேசும் மக்களின் பிரதேசம் என்கின்ற ரீதியில் இம்மாகாணங்கள் இணைக்கப்பட வேண்டும். இதைச் செய்கின்றபோது தனித்துவ உரிமையுடைய முஸ்லிம்களின் சம்மதமும் பெறப்பட வேண்டும்.” என்றுள்ளார்.

இதனிடையே, வடக்கு - கிழக்கு இணைக்க அனுமதிக்கமாட்டோம் என அமைச்சர் றிசாட் பதியுதீன் கூறியுள்ளாரே என ஊடகவியலாளர் ஒருவர் கேள்வி எழுப்பிய போது,

“முஸ்லிம் மக்களினுடைய நிலைப்பாடு அமைச்சர் றிசாட் பதியுதீனின் கருத்து மட்டுமல்ல. மர்ஹூம் அஷ்ரபின் காலத்திலே வடக்கு- கிழக்கு இணைப்பு தொடர்பில் தமிழர் விடுதலைக் கூட்டனியுடன் எழுத்து மூல ஒப்புதல்கள் கூட வழங்கப்பட்டுள்ளது. அந்த இணக்கப்பாடு இன்றும் செல்லும் என்பதை ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தொடர்ச்சியாக எங்களுக்கு வலியுறுத்தி வருகிறது. அந்த இணக்கப்பாடுகளின் அடிப்படையிலேயே எந்த வகையில் இந்த இணைப்பை முன்கொண்டு செல்லலாம் என்பதை ஆராய்ந்து வருகின்றோம்.

கடந்த 25 வருடமாக ஏற்பட்ட கசப்பான சில சம்பவங்களால் வடக்கு- கிழக்கு இணைப்பு தொடர்பில் முஸ்லிம் மக்கள் குழப்பம் அடைந்துள்ளார்கள். ஆனால் நாங்கள் தமிழ் பேசும் மக்கள் என்ற அடிப்படையில் மீண்டும் ஒன்றாக சேர்ந்து வாழ்வதற்குரிய வேலைகளை செய்து வருகின்றோம். அதற்காக வடக்கு- கிழக்கு இணைப்பு ஒருநாளிலே இரவோடு இரவாக ஏற்படுத்தக் கூடியது அல்ல. எனினும் வடக்கும்- கிழக்கும் இணைக்கப்பட வேண்டும் என்பதில் நாம் உறுதியாக செயற்படுகின்றோம்.” என்று எம்.ஏ.சுமந்திரன் மேலும் தெரிவித்துள்ளார்.

0 Responses to கிழக்கு முஸ்லிம்களின் சம்மதத்துடன் வடக்கு- கிழக்கு இணைக்கப்பட வேண்டும்: எம்.ஏ.சுமந்திரன்

Post a Comment

Followers

அதிகமாக வாசிக்கபட்டவை...