Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

ஜனநாயகம், சுதந்திரம், மனித உரிமைகள் உள்ளிட்ட அனைத்து அம்சங்களையும் போசித்து பாதுகாக்கும் நாடென்ற வகையில் தகவல் அறியும் உரிமையானது நாட்டின் அனைத்து பிரிவினருக்கும் திறந்துவிடப்பட வேண்டும் என்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.

'சர்வதேச தகவல் அறியும் நாள்' தொடர்பில் இன்று புதன்கிழமை கொழும்பில் ஆரம்பமான சர்வதேச மாநாட்டின் ஆரம்ப நிகழ்வில் உரையாற்றியபோதே ஜனாதிபதி மேற்கண்டவாறு கூறியுள்ளார்.

அவர் மேலும் குறிப்பிட்டுள்ளதாவது, “தகவல் அறிந்து கொள்ளும் உரிமையை சமூகத்தின் அடிப்படை உரிமை உறுதிப்படுத்துதல் தொடர்பாக நீண்ட காலமாக அரசியல் மேடைகளிலும், சிவில் அமைப்புக்களாலும், பொதுமக்களிடையேயும் விவாதிக்கப்பட்டிருந்த போதிலும் கடந்தகால அரசுகள் நிறைவேற்றத் தவறிய அச்செயற்பாட்டை தற்போதய அரசினால் நிறைவேற்ற முடிந்திருக்கின்றது.

அரச செலவினங்களுக்காக பொதுமக்களின் நிதியைப் பயன்படுத்தும்போதும், அதனை முகாமைத்துவம் செய்யும்போதும் ஏற்படும் முறைகேடான பயன்பாடுகள் மற்றும் தவறான நிதி முகாமைத்துவம் காரணமாக நாட்டு மக்களுக்கு ஏற்படும் அநீதி மற்றும் நாட்டின் முன்நோக்கிய பயணத்துக்கு ஏற்படும் தடைகளும் தகவல் அறிந்துகொள்ளும் உரிமையை சமூகத்தின் அடிப்படை உரிமையாக உறுதிப்படுத்தப்படுத்துவதால் நீங்கிவிடும்.

ஊடக சுதந்திர சட்டம், அரசியலமைப்பு, உரிமைகள் ஆகியன எவ்வளவுதான் உறுதிப்படுத்தப்பட்டிருந்த போதிலும் இன்று பெரும்பாலன ஊடகங்கள் அவற்றின் உரிமையாளர்களினதும் முகாமைத்துவத்தினதும் விருப்பு வெறுப்புகளுக்கமையவே செயற்படுகின்றன.

ஊடக சுதந்திர உரிமைகளுக்கான வாய்ப்புகளை வழங்குவது அரசியல்வாதிகளின் பொறுப்பாகும். அரச அலுவலர்கள் அதனை முறைமைப்படுத்துவதுடன் நாட்டு மக்களின் நலனுக்காக ஊடக சுதந்தித்தைப் பயன்படுத்துவது அனைத்து இலத்திரனியல் மற்றும் அச்சு ஊடகங்களினதும் பொறுப்பாகும்.

அரசு சாரா நிறுவனங்கள் பற்றிய தகவல் அறியும் உரிமையை உறுதிப்படுத்தவேண்டியதும் அவசியம். பெரும்பாலான அரசு சார்பற்ற நிறுவனங்கள் பதிவு செய்யப்பட்ட விடயங்களுக்கு புறம்பாக செயற்படுவது உலகின் பல அரசாங்கங்களின் இருப்புக்கு சவாலாக அமைந்திருக்கின்றன.” என்றுள்ளார்.

0 Responses to தகவல் அறியும் உரிமையானது நாட்டின் அனைத்து பிரிவினருக்கும் திறந்துவிடப்படும்: மைத்திரிபால சிறிசேன

Post a Comment

Followers