Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

தேசிய அரசாங்கத்தை தோற்கடிப்பதற்கான மக்கள் எழுச்சிக் கூட்டங்களை எதிர்வரும் ஒக்டோபர் 08ஆம் திகதி  முதல் நடத்துவதற்கு கூட்டு எதிரணி (மஹிந்த அணி) தீர்மானித்துள்ளது.

அதன் முதலாவது கூட்டம் இரத்தினபுரியில் எதிர்வரும் 08ஆம் திகதி நடைபெறவுள்ளதாக கூட்டு எதிரணியின் முக்கியஸ்தரும், தேசிய சுதந்திர முன்னணியின் தலைவருமான விமல் வீரசங்ச தெரிவித்துள்ளார்.

அரசாங்கத்தின் இயலாமையை மறைக்கவே அடக்கம் செய்யப்பட்ட உடலங்கள் தோண்டப்படுவதாக கூறிய அவர், நல்லிணக்கம் என்ற பெயரில் நாட்டில் பிரிவினைவாதம் தலைதூக்க அரசாங்கம் இடமளித்திருப்பதாகவும் குற்றஞ்சாட்டியுள்ளார்.

கூட்டு எதிரணி ஏற்பாடு செய்திருந்த ஊடகவியலாளர் மாநாடு நேற்று புதன்கிழமை கொழும்பில் நடைபெற்றது. அங்கு கருத்து வெளியிடும் போதே விமல் வீரவங்ச மேற்கண்டவாறு கூறியுள்ளார்.

அவர் மேலும் குறிப்பிட்டுள்ளதாவது, “மைத்திரி யுகம் உருவானால் புலி மீண்டும் தலைதூக்கும் என ஜனவரி 08 தேர்தலுக்கு முன் நாம் கூறிய போது யாரும் அதனை ஏற்கவில்லை. கடந்த 1 வருட காலத்தில் அது உண்மையாகி வருவது குருடனுக்கு கூட விளங்கியிருக்கும்.

அமெரிக்காவுக்கு சென்ற வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர, சுரேன் சுரேந்திரன் அடங்கலான டயஸ் போரா அங்கத்தவர்களை சந்தித்தார். இவர்களுக்கான முழுச் செலவையும் அரசாங்கமே ஏற்றது.

மறுபக்கம் யுத்தத்தின் பின்னர் சிங்கள, தமிழ், முஸ்லிம் மக்களிடையே ஏற்பட்டு வந்த நல்லுறவை குழப்ப சி.வி.விக்னேஸ்வரன் முயன்றுவருகிறார். சிங்கள மக்களை எதிரியாக பார்க்கும் மனநிலையை ஏற்படுத்த அவர் தயாராகிறார். இதற்கு அரசாங்கம் முழுமையான சுதந்திரத்தை வழங்கியிருக்கிறது.

புலிகளுக்காக உயிர் நீத்த திலீபனுக்கு யாழ்ப்பாணத்தில் சிலை அமைக்கப்படுகிறது. வடக்கில் சிங்கள மக்களை குடியேற்ற வேண்டாம் என ஊர்வலம் நடத்தப்படுகிறது. தெற்கில் தமிழ் மக்களை குடியேற்ற வேண்டாம் என எமக்கு கூற முடியாது. ஏனைய இன அடையாளங்கள் தேவையில்லை என வெளிப்படையாக கூற இந்தக் குழுக்களுக்கு முழுமையான சுதந்திரம் வழங்கப்பட்டிருக்கிறது.

சி.வி.விக்னேஸ்வரன், இரா.சம்பந்தன், எம்.ஏ.சுமந்திரன் எல்லோரும் புலிகளுக்கு சார்பானவர்களே. மீண்டும். பஸ்களிலம் ரயிலும் குண்டுவெடிக்கும் நிலைமையே உருவாக்கப்படுகிறது. வடக்கிலும் தெற்கிலும் உள்ள மக்களிடையே உருவாகி வந்த நல்லிணக்கத்தை புதைத்து நல்லிணக்கம் என்ற பெயரில் பிரிவினைவாதத்திற்கு தலைதூக்க இடமளிக்கப்பட்டுள்ளது.

ஒரு பக்கம் அரசியலமைப்பை மாற்ற பேச்சு நடைபெறுகிறது. மறுபக்கம் இந்தியாவுடன் ஒப்பந்தம் கைச்சாத்திட பேச்சு இடம்பெறுகிறது. இந்தியாவின் கொலனியாக மாற்றும் இந்த ஒப்பந்தம் கைச்சாத்திடுவதை எதிர்க்க பேதங்களை மறந்து சகலரும் ஒன்றுபட வேண்டும்.

இந்த நாட்டை தோல்வி கண்ட ராஜ்யமாக மாற்ற ஐ. தே. க., சு. கூட்டணி அரசு முயல்கிறது. இதற்கு எதிரான எம்மை அடக்க பொய் வழக்கு தொடர்கின்றனர். வீண் விரயம் குறித்து எம்மீது குற்றஞ் சுமத்தப்பட்டது. ஆனால் ஜனாதிபதியுடன் 60ற்கும் அதிகமானவர்கள் அமெரிக்கா சென்று வந்துள்ளனர். இது குறித்து எவரும் வாய்திறப்பதில்லை. இந்த அரசாங்கத்தை தோற்கடிப்பதற்கான மாபெரும் மக்கள் எழுச்சி ஒக்டோபர் 08 ஆம் திகதி இரத்தினபுரியில் ஆரம்பிக்கப்படும்.” என்றுள்ளார்.

0 Responses to தேசிய அரசாங்கத்தை தோற்கடிப்பதற்கான எழுச்சிக் கூட்டங்களை நடத்த கூட்டு எதிரணி தீர்மானம்!

Post a Comment

Followers

உலகப்பரப்பில் நடைபெறும் மாவீரர் நாள் விபரங்களை கீழ் உள்ள படத்தில் அழுத்தி காணலாம்.