Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

எமது பாரம்பரிய துறைமுகமான மயிலிட்டியை முதலில் விடுவியுங்கள் என்று மயிலிட்டி மீள்குடியேற்றக் குழுவின் தலைவரும், வலிகாமம் வடக்கு மீள்குடியேற்றப் புனர்வாழ்வுச் சங்கத்தின் தலைவருமான அ.குணபாலசிங்கம் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

மயிலிட்டி துறைமுகத்தை விடுவிக்குமாறு கோரும் தற்போதைய தலைமுறையினருக்கு ஆரம்பகால மீன்பிடி முறைகள் தெரியாது. மயிலிட்டியை விடுவிப்பதற்காகவே அவர்கள் அவ்வாறு கோருவதாக யாழ். மாவட்ட இராணுவத் தளபதி மகேஸ் சேன நாயக்க தெரிவித்திருந்தார்.

இராணுவத் தளபதியின் கருத்துக்கு மறுப்புத் தெரிவித்து வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே அ.குணபாலசிங்கம் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.

அதில், தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, “வலிகாமம் வடக்கு மக்களை மீள்குடியமர்த்துவதில் அரசும் இராணுவமும் ஏமாற்றுவித்தையையே காண்பித்துக் கொண்டு இருக்கின்றன. ‘விடப் போகின்றோம் வாருங்கள்’ என்று அழைத்துப் படம் போட்டுக் காட்டினார்கள். படத்தில் காட்டியதில் ஒருபகுதியை வாகனத்தை நிறுத்தாது ஊர்வலமாகக் கொண்டு சென்று காட்டினார்கள்.

ஐக்கிய நாடுகள் பொதுச் செயலர் பான் கீ - மூனின் வருகைக்காகவே இராணுவத்தினரும், அரசும் இவ்வாறு படம் போடுவதாக மக்கள் அப்போதே கூறினார்கள். அது உண்மையாகியுள்ளது.

மயிலிட்டி மக்களுடனும் என்னுடனும் இராணுவத் தளபதி இருமுறை உரையாடினார். இப்பொழுது விடப்படும் நிலம் விடுவிக்கப்பட்டதும் அடுத்த கட்டமாக மயிலிட்டி கடற்கரையோரமும் மீன்பிடித் துறைமுகமும் விடுவிக்கப்படும் என்று தெரிவித்திருந்தார்.

உங்கள் இடங்களில் இடையிடையே இராணுவ முகாம்களும் இருக்கும் என்று கூறினார். இடையிடையே இராணுவ முகாம்கள் இருப்பதால் பிரச்சினை இல்லை. எமது நிலத்தில் எம்மைக் குடியமர்த்துங்கள் என்று கூறி சம்மதித்தோம். ஒரு வாரத்தின் பின்பு எமக்கு விடப்படும் இடத்தை வாகனத்தில் கூட்டிச் சென்று காண்பித்தார்.

பொன்னாலை- பருத்தித்துறை வீதிக்கு வடக்கே மயிலிட்டி தொடங்கி ஊறணி வரை காண்பித்தார்கள். வீதிக்கு தெற்கே உடனடியாக விடும் சாத்தியமில்லை என்று தெரிவித்தார்.

யாழ். வந்த தென்னிலங்கை ஊடகவியலாளர்களுக்கு இராணுவத் தளபதி கூறிய செய்தி எம்மைக் கவலைக்கும் விசனத்துக்கும் உள்ளாக்குகின்றது. நாங்கள் எங்கள்  நிலத்தைத்தான் கேட்கின்றோம். வேறு எவரது நிலத்தையும் கேட்கவில்லை. துறைமுகம் என்பது, படகுகளைப் பாதுகாப்பாகக் கட்டுவதற்கும், மீன்களை இறக்குவதற்கும், தொழில் உபகரண ங்களை ஏற்றுவதற்குமாகும்.

மீன்பிடிப்பது ஆழ்கடலில்தான். இந்திய இழுவைப் படகுகளின் ஆக்கிரமிப்பால் நாம் ஆழ்கடல்மீன்பிடியை நிறுத்தியிருக்கின்றோம். இந்திய இழுவைப் படகுகளின் ஆக்கிரமிப்பை நிறுத்த உங்களால் முடியவில்லை. எங்களுக்கு மீன்பிடி முறை தெரியாது என்று கூறுவது எந்த வகையில் நியாயம்.

தென்பகுதியில் இந்திய மீனவர்கள் அத்துமீறியிருந்தால் இவ்வாறு பொறுமையாகப்பார்த்துக் கொண்டிருந்திருப்பீர்களா? தற்போது எதிலும் நவீனம் வந்து கொண்டிருக்கின்றது. நாங்கள் நவீன முறைகளிலும் மீன்பிடிக்கத் தகுதியானவர்கள். எம்மை மயிலிட்டியில் குடியமர்த்தி எமது முயற்சியின் முன்னேற்றத்தைக் கண்டுகளிக்க ஆயத்தமாயிருங்கள்” என்றுள்ளது.

0 Responses to எமது பாரம்பரிய துறைமுகமான மயிலிட்டியை முதலில் விடுவியுங்கள்: வலி. வடக்கு மீள்குடியேற்றப் புனர்வாழ்வுச் சங்கம்

Post a Comment

Followers

உலகப்பரப்பில் நடைபெறும் மாவீரர் நாள் விபரங்களை கீழ் உள்ள படத்தில் அழுத்தி காணலாம்.