Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மாணவர்கள் இருவர் சிறிலங்கா காவல் துறையினரின் துப்பாக்கிச் சூட்டுத் தாக்குதலின் மூலம் கொல்லப்பட்டமை குறித்து நாடு கடந்த தமிழீழ அரசாங்கம் தனது வன்மையான கண்டனத்தைத் தெரிவித்துக் கொள்கிறது. இக்கொலைகளைக் கண்டித்து நடாத்தப்படும் அரசியல் ரீதியான போராட்டங்களுக்கும் நாடு கடந்த தமிழீழ அரசாங்கம் தோழமையுணர்வுடன் கூடிய ஆதரவினைத் தெரிவித்துக் கொள்கிறது.

கடந்த வியாழக்கிழமை(20) இரவு யாழ்ப்பாணம் குளப்பிட்டிச் சந்திப் பகுதியில் சிறிலங்கா காவல் துறையினரது துப்பாக்கிச் சூட்டினால் கொல்லப்பட்ட இளம் தமிழ் உறவுகளான கந்தரோடையைச் சேர்ந்த சுகந்தராஜா சுலக்க்ஷன், கிளிநொச்சியைச் சேர்ந்த நடராஜா கஜன் ஆகிய இருவரதும் பிரிவுத் துயரில் நாடு கடந்த தமிழீழ அரசாங்கமும் பங்கெடுத்துக் கொள்கிறது. அளப்பரிய இந்த இழப்பினால் பெருந்துயரில் மூழ்கியிருக்கும் அவர்களது பெற்றோருக்கும் உறவினருக்கும் மற்றும் சக மாணவர் சமூகத்தினருக்கும் ஆழ்ந்த கவலையையும் அனுதாபத்தையும் நாடு கடந்த தமிழீழ அரசாங்கம் தெரிவித்துக் கொள்கிறது.

யாழ்ப்பாணப் பல்கலைக் கழகக் கலைப் பீடத்தில் தத்தமது படிப்பின் இறுதிக் கட்டத்தை அணுகி விட்ட இவ்விரு மாணவர்களும் எமது இனத்தின் நம்பிக்கைக்குக் பொறுப்பானவர்களாகவும் முன்னோடிகளாகவும் திகழ்ந்தனர் என்னும் செய்தியும் எவ்வித விளக்கமோ காரணமோ கொடுக்கமுடியாத வகையில் இவர்களது உயிர்கள் காவல் துறையினரது நேரடி வன்முறை மூலமே பறிக்கப்பட்டுள்ளது என்பதும் எம்மெல்லோரையும் பெரிதும் வாட்டுகிறது. சிங்கள அரசின் அங்கமாக இயங்கும் காவல் துறையினர் மீது தமிழ் மக்கள் எவ்வித நம்பிக்கையினையும் வைக்க முடியாது என்பதனை இச்சம்பவம் எடுத்துக் காட்டுவதுடன் தமிழ் மக்களின் பாதுகாப்பு தமிழ்

மக்களாலேயே தீர்மானிக்கப்பட வேண்டிய அவசியத்தையும் உணர்த்தி நிற்கிறது.

நல்லாட்சி அரசாங்கத்தின் கட்டுப்பாட்டில் எமது மண்ணெங்கும் பரவி நிற்கும் படையினரும் காவல் துறையினரும் எவ்வகை மனப்பாங்குடன் யாருடைய ஆணைகளின் கீழ் இயங்குகிறார்கள் என்பது மீண்டும் ஒருமுறை கேள்விக்குள்ளாக்கப்படும் இந்த நேரத்தில் மாணவர் சமூகமும் அரசியல் கட்சிகளும் இணைந்து செயற்பட்டு இந்த இளம் உயிர்களின் கொலைக்குக் காரணமானவர்களை நீதியின் கீழ் கொண்டுவர ஆவன செய்ய

வேண்டும். அதே வேளை நேரடியாக இக்கொலைகளுடன் தொடர்புபட்டவர்கள் மட்டும் இதற்குக் காரணமாக இருந்தார்கள் என நாம் பிரச்சினையினை சுருக்கி விடவும் முடியாது. தமிழ் மக்களின் தாயகப் பூமியின் மீதான சிறிலங்கா அரசின் ஆயுதம் தாங்கிய ஆக்கிரமிப்பின் ஒரு விளைவாகவும் இக் கொலைகள் அணுகப்பட வேண்டும். தமிழர் தாயகப் பிரதேசத்தில் காவல் துறைப் பணிகள் தமிழ் மக்களின் கட்டுப்பாட்டில் வரும் வகையிலும் சிறிலங்காவின் இராணுவத்தினர் தமிழர் தாயகத்தில் இருந்து வெளியேறும் வகையிலும் இடைக்கால ஏற்பாடுகள் செய்யப்படுதல் மிகவும் அவசியமானதாகும்.

இம்மாணவர்களது இழப்பினால் நாம் துயருற்றிருக்கும் இந்த வேளையிலும் ஈழத்தமிழ் மக்கள் தமது சொந்த மண்ணில் எதிர்நோக்கும் அடக்குமுறைகளையும் பேரநீதிகளையும் உலகறியச் செய்ய வேண்டியதும் அவசியமானதாகும். இத்தகைய சம்பவங்கள் எதிர்காலத்தில் நடைபெறாது தடுக்கவும் தமிழ் மக்கள் மீது தொடர்ந்து வரும் இன அழிப்புக்கு நீதி கிடைக்கவும் இம்முயற்சி அவசியமாக தெரிகிறது. மக்கள் வீதியில் இறங்கிப் போராடுதலும் இதற்கு வலுச் சேர்க்கும்.

இத்தகைய மக்கள் போராட்டத்துக்கான முன்னெடுப்புக்கள் தொடங்கப்பட்டுள்ளதாக நாம் அறிகிறோம். இந்த முயற்சிகளில் பொறுப்புடனும் வேகத்துடனும் செயற்படவேண்டும் என அனைவரையும் தோழமையுடன் வேண்டிக் கொள்கிறோம். நாமும் இவ்விடயம் அனைத்துலக அரங்கில் கூடுதல் கவனத்தைப் பெறும் வகையில் செயற்படுவோம். அனைத்து மக்களினதும் எழுச்சி கொண்ட உரிமைக் குரல் உலகத்தின் மனச் சாட்சியைத் தட்டி எழுப்பட்டும். சிங்கள பேரினவாதத்தின் பிடியில் இருந்து நமது மக்கள் விடுதலை அடையட்டும்.

0 Responses to பெருந்துயரில் பங்கேற்கிறோம்! படுகொலைக்கு வன்மையான கண்டனம்! போராட்டங்களுக்கு ஆதரவு!

Post a Comment

Followers