Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

எழுக தமிழ் ஆயுத போராட்டத்தை கேட்கவில்லை, நாட்டை பிரித்து கேட்கவில்லை, விக்கினேஸ்வரன் ஆற்றிய உரையின் தொடக்கத்தில் அவர் நாங்கள் யாருக்கும் எதிரல்ல எனக் கூறுகின்றார். யாருக்கும் எதிரல்ல என்றால் எதற்குப் பேரணி? ஆனால், அவர் யாருக்கும் எதிரல்ல என்று கூறிய பின்னரும் கூடத் தென்னிலங்கையில் எழுந்துள்ள எதிர்ப்பு எதனைக் காட்டுகிறது? தமிழ் மக்கள் சிறிதும் மேலெழுந்து விடக் கூடாது அடங்கிப் போக வேண்டும் என அவர்கள் நினைக்கிறார்கள் எனத் தெரிவித்த பிரபல அரசியல் ஆய்வாளர் ம.நிலாந்தன் தமிழர்கள் அடங்கிப் போக மாட்டார்கள்.

2009ஆம் ஆண்டு மே மாதத்திற்குப் பின்னர் கடந்த வாரம் முற்றவெளியில் எழுக தமிழ்! பேரணியில் அதனை அவர்கள் நிரூபித்தார்கள். எழுக தமிழ் பேரணியில் கலந்து கொண்டவர்களின் எண்ணிக்கை பொங்கு தமிழ் பேரணியுடன் ஒப்பிடுகையில் குறைவாகவிருக்கலாம். எழுக தமிழ் பேரணியில் கலந்து கொண்ட மக்களின் தொகை எங்களுக்கு முக்கியமல்ல.

எழுக தமிழுக்குத் தென்னிலங்கையில் காட்டப்படுகின்ற எதிர்வினை தான் அதனுடைய முக்கியத்துவத்தைக் கூட்டுகிறது என பிரபல அரசியல் ஆய்வாளர் ம.நிலாந்தன் தெரிவித்தார்.

மூத்த அரசியல் ஆய்வாளர் மு. திருநாவுக்கரசு எழுதிய "இலங்கை அரசியல் யாப்பு" நூலின் வெளியீடும் புவிசார் அரசியல் கைதிகளாய் உள்ள ஈழத் தமிழர்கள் பற்றிய ஒரு திறந்த கலந்துரையாடலும் நேற்று சனிக்கிழமை முற்பகல் யாழ்ப்பாணம் ராஜா கிறீம் ஹவுஸ் சரஸ்வதி மண்டபத்தில் மூத்த பேராசிரியர் க. சிற்றம்பலம் தலைமையில் இடம்பெற்றது.

இந்த நிகழ்வில் கலந்து கொண்டு சிறப்புரையாற்றுகையிலேயே ம.நிலாந்தன் மேற்கண்டவாறு தெரிவித்தார். அவர் ஆற்றிய நீண்ட உரையின் முக்கிய பகுதிகள் வருமாறு,

ஒரு இனப் படுகொலை மூலம் இரத்தக் கறை இலங்கைத் தீவில் படிந்திருந்தாலும், யுத்தக் கறை அதனைச் சூழ்ந்திருந்தாலும் இப்போதும் அது முத்தாகத் தானிருக்கின்றது. முன்னரும் அது முத்தாகத் தானிருந்தது. சீனா தனது முத்துமாலைக்குள் அதனை இணைத்துக் கொண்ட போதிலும் அது முத்தாகத் தானிருந்தது.

அதற்கு முன்னர் பெருங்குடிப் போர் நடைபெற்ற காலகட்டத்தில் ஜெயவர்த்தன அரசு முழுக்க முழுக்க அமெரிக்கச் சார்பு கோட்பாட்டைக் கடைப்பிடித்த போதும் அது முத்தாகத் தானிருந்தது. மு. திருநாவுக்கரசு கூறியதைப் போல அரசியல் யாப்பைப் பிரித்தானியா உருவாக்கிய போதிலும் அது முத்தாகத் தானிருந்தது. இலங்கை எப்போதும் முத்தாகவேயிருக்கிறது. தன் கவர்ச்சி காரணமாக எப்போதும் பிராந்திய மட்டத்திலும், அனைத்துலக மட்டத்திலும் கெட்டித்தனமாகச் சுழித்தோடக் கூடிய வாய்ப்புக்களைக் கொண்டிருக்கிறது.

2009ஆம் ஆண்டு மே மாதத்திற்குப் பின்னரும் இலங்கை தன்னுடைய கவர்ச்சியைத் தக்க வைத்துக் கொண்டிருக்கிறது. ராஜபக்சவின் ஆட்சிக் காலத்தில் அது தன்னுடைய கவர்ச்சியை இழந்தது. ஆனால், மறுபடியும் ஆட்சி மாற்றத்தின் பின் அது தன்னுடைய கவர்ச்சியைப் பெற்றுக் கொண்டு விட்டது.

செப்டம்பர்-01 ஆம் திகதி பிரதமர் ரணில் விக்கிரமசிங்க சிங்கப்பூரில் நடைபெற்றதொரு கருத்தரங்கில் பங்குபற்றியிருந்தார். "பூகோள சக்தி மைய மாற்றமும் இந்து மகா சமூத்திரமும்" எனும் தொனிப் பொருளிலான அந்தக் கருத்தரங்கில் ஒரு இந்திய நிறுவனத்தால் அழைக்கப்பட்டு அவர் அங்கு ஆற்றிய உரையைத் தமிழர்கள் கண்டிப்பாகப் படிக்க வேண்டும்.

ஒரு முக்கிய அரசியல் வாதி சர்வதேச அரங்கில் பேச வரும் போது எவ்வாறான தயாரிப்புக்களுடன் வருகிறார் என்பதையும், எவ்வாறு தன் சமூகத்தைச் சேர்ந்த புத்தி ஜீவிகளையும், சிந்திக்கும் தரப்புக்களையும் தன்னுடன் இணைத்துக் கொள்கிறார் என்பதையும், ஒரு அரங்கில் பேசும் போது தன்னுடைய மக்களின் நலன்களை விட்டுக் கொடுக்காமலும் அதேநேரம் வெளிநாட்டவர்கள் வியக்குமளவுக்கு அழுத்தமாக அவர் பேசுகிறார் என்பதையும் நாங்கள் நோக்க வேண்டும்.

இந்து மகா சமுத்திரத்தையும், பசுபிக் மகா சமுத்திரத்தையும் அவுஸ்ரேலியாவின் தரைப் பகுதியூடாக இணைக்கும் ஒரு உலகளாவிய மிகப் பெரிய கடல் வழிப் பாதுகாப்பு மூலோபாயத் திட்டம். இந்தத் திட்டமானது தென் சீனக் கடலுக்குள்ளால் செல்கின்றது. இரண்டு மகா சமுத்திரங்களை அது இணைக்கின்றது. ஏற்கனவே, இது ஆசிய பசுபிக் பிராந்தியம் என்று தான் அழைக்கப்பட்டது. 2013 ஆம் ஆண்டுக்குப் பின்னர் இன்டோ பசுபிக் என்ற வார்த்தைப் பிரயோகம் அரங்கிற்குள் வந்திருக்கிறது. தற்போது அமெரிக்கத் தேர்தலில் போட்டியிடும் திருமதி-கிளின்டன் போன்றவர்கள்

அதனை ஆதரிக்கிறார்கள்.

இன்டோ பசுபிக் மூலோபாயத் திட்டம் எனப்படுவது இரு மகா சமூத்திரங்களையும் இணைக்குமொரு மிகப் பெரிய கடல் வழிப் பாதுகாப்புத் திட்டமாகும். இந்தத் திட்டத்தின் படி அமெரிக்கா எதிர்காலத்தில் தனது நீர்மூழ்கிக் கப்பல்கள் அல்லாத கப்பல்களில் 60 வீதமானவற்றை இந்தப் பிராந்தியத்தில் நிறுத்தவுள்ளது. சர்ச்சைக்குரிய தென் சீனக் கடல் இதற்குள் தானிருக்கின்றது. அது

மாத்திரமல்லாமல் உலக வர்த்தகத்தில் ஏறக் குறைய 30 வீதம் இந்தக் கடல் வழியூடாகத் தான் நடக்கிறது.

உலக எரிபொருள் வாணிபத்தில் ஏறக்குறைய மூன்றில் இரண்டு பகுதி இந்து சமுத்திரத்தின் ஊடாகப் பசுபிக் பிராந்தியத்திற்குள் செல்கின்றது. உலகின் மிகவும் கவனிப்புக்குரிய வரைபடமாக இது கருதப்படுகிறது. அரசியல் ஆய்வாளரான கப்லால் இந்த மாதிரியான வரைபடங்கள் சக்தி மிக்கவர்கள் இந்த உலகத்தை எப்படி விளங்கிக் கொள்கிறார்கள் எனக் குறிப்பிடுகிறார். என்பதை எமக்குக் காட்டுகின்றது.

இதேபோன்று தென் சீனக் கடலை மையமாகக் கொண்டு சீனாவும் கல்வியமைச்சின் ஊடாக ஒரு வரைபடத்தை வெளியிட்டது. சீனா தென் சீனக் கடலில் ஏற்கனவே தீவுகளுக்கு உரிமை கோருகிறது. அது மாத்திரமன்றி தென் சீனக் கடலில் செயற்கைத் தீவுகளை உருவாக்கி அந்தச் செயற்கைத் தீவுகளில் கடற்படைத் தளங்களை நிறுவி வருகிறது.

இன்டோ பசுபிக் மூலோபாயம் எனப்படுவது பிராந்தியத்தில் ஏற்கனவே சீனாவிற்கு இருந்த ஒருபகுதி முக்கியத்துவத்தைக் குறைத்து அமெரிக்காவும், இந்தியாவும் கூட்டுச் சேருவதன் மூலம் இந்தப் பிராந்தியத்தின் வலுச் சமநிலை மாற்றப்படுகிறது. அதாவது, இந்தியா இந்தப் பிராந்தியத்தில் யாருடைய பக்கம் செல்கிறதோ அவருடைய பக்கமே வலுச் சமநிலை மாறும். அந்த அடிப்படையில் இந்தியாவும் அமெரிக்காவும் இணைவதன் மூலம் இந்தப் பிராந்தியத்தில் வலுச் சமநிலையை மாற்றும் ஒரு வழிவகை தான் இன்டோ பசுபிக் மூலோபாயத் திட்டம்.

இந்தளவுக்கு முக்கியத்துவம் வாய்ந்ததொரு மூலோபாயத்தை ரணில் சிங்கப்பூரில் வைத்து எவ்வாறு அணுகுகிறார்?, இது ஒரு கருத்துருவம் மட்டுமே யதார்த்தமாக இருக்க முடியாது என அவர் கூறுகிறார். இன்டோ பசுபிக் பிராந்தியம் எனப்படுவது மொட்டையானது அல்ல பல்வேறு இனக் குழுக்களையும், சிக்கல்களையும், முரண்பாடுகளையும் கொண்ட பிராந்தியம் எனக் கூறி அதற்கு மேற்கத்தைய அறிஞர்களை மேற்கோள் காட்டுகிறார். அதுமட்டுமல்ல இந்தப் பிராந்தியத்தில் இவ்வாறானதொரு பெரிய வலயத்தை உருவாக்குவது சாத்தியமற்றது எனவும் அவர் கூறுகிறார்.

ரணில் விக்கிரமசிங்க ஒரு 'அமெரிக்க விசுவாசி' . அமெரிக்கா இல்லையென்றால் அவருக்கு இன்று கிடைத்திருக்கும் உயர்வு கிடைத்திருக்காது. ஆட்சி மாற்றமும் நிகழ்ந்திருக்காது. அவர் தன்னை அமெரிக்காவிற்கு விசுவாசமற்றவன் எனக் காட்டிக் கொண்டாலும் கூட உலகம் அதனை நம்பாது. அவருடைய தோற்றம், நடை உடை பாவனை, வாழ்க்கை முறை, மொழி, குரல் எல்லாமே அவரை ஒரு மேற்கின் காவலனாகவே அடையாளப் படுத்துகிறது.

அவரை ஒரு சிங்கள பெளத்தக் கடும் போக்கு வாதத்தின் காவலனாக யாருமே ஏற்றுக் கொள்ளப் போவதில்லை. இப்படிப்பட்ட ரணில் விக்கிரமசிங்க இன்டோ பசுபிக் மூலோபாயத் திட்டம் தொடர்பாக சிங்கப்பூரில் வைத்துக் கேள்வியெழுப்புகிறார். ஒரு அமெரிக்காவிற்குப் பிடித்த தலைவர் சிங்கப்பூரில் வைத்து அமெரிக்காவிற்கு அனுகூலமானதொரு மூலோபாயத்தைக் கேள்விக்கு உள்ளாக்கிறார் என்று சொன்னால் அதற்கு என்ன காரணம்? சிறீலங்கா இறந்த காலத்தில் இரண்டு திருப்பங்களிலிருந்து பாடங்களைக் கற்றிருக்கிறது.

ஜெயவர்த்தனவின் காலம் பின்னர் மகிந்த ராஜபக்சவின் காலம். ஜெயவர்த்தனவின் காலத்தில் அதிக பட்சம் நிபந்தனையின்றி அமெரிக்காவை நோக்கிச் சாய்ந்ததன் விளைவாகத் தமிழர்களுடைய ஆயுதப் போராட்டம் தூண்டி வளர்க்கப்பட்டது. ராஜபக்ச சீனாவை நோக்கி நிபந்தனையின்றிச் சாய்ந்து சென்ற காரணத்தால் சிறீலங்கா ஐ.நாவில் குற்றவாளிக் கூண்டில் நிறுத்தப்பட்டது. இந்த இரண்டிலிருந்தும் சிங்களத் தலைவர்கள் கற்றுக் கொண்டிருக்கிறார்கள். அதன் பிரகாரம் அதிக பட்சம் வல்லரசுகளைக் குறுக்குத்தனமாக ஆதரிப்பதை விடவும் சுதாகரித்துக் கொண்டு வெட்டிக் கொண்டு ஓடுவோம் எனச் சிந்திக்கிறார்கள்.

சுழித்துக் கொண்டு ஓடுவோம் எனச் சிந்திக்கிறார்கள். இந்தப் பிராந்தியத்தின் சீனா, அமெரிக்கா, இந்தியா ஆகிய முப்பெரும் சக்திகளுக்கிடையே சுழித்துக் கொண்டு ஓட வேண்டும் என அவர்கள்

சிந்திக்கிறார்கள். சுழித்துக் கொண்டு ஓடுகிறார்கள். அவர்கள் தங்களுடைய இறந்த காலத்திலிருந்து பாடங்களைக் கற்றிருக்கிறார்கள். இந்த அடிப்படையில் தான் அமெரிக்க விசுவாசியான ரணில் இந்திய பசுபிக் மூலோபாயம் எனப்படுவது ஒரு கருத்துருவம் மட்டுமே என்கிறார்.

சிங்களத் தலைவர்கள் இறந்த காலத்திலிருந்து பாடங்களைக் கற்றிருக்கிறார்கள். நாங்கள் இறந்த காலத்திலிருந்து பாடங்களைக் கற்றிருக்கிறோமா? சிங்களத் தலைவர்கள் கற்ற பாடம் கூட முழுமையானதல்ல. ரணிலும், அவரைப் போன்ற தலைவர்களும் சிங்கள ஆட்சியாளர்கள் ஏதோ ஒரு வல்லரசை நோக்கி அதிக பட்சம் சாய்வது என்பது இந்தச் சிறிய தீவை நெருக்கடிக்குள்ளாக்கும்.

எனவே, எந்தவொரு பக்கமும் சாயாமல், வல்லரசுகளைச் சுழித்துக் கொண்டு ஓட வேண்டுமென அவர் சிந்திக்கிறார்கள். ஆனால், அவர்கள் ஒரு பகுதி உண்மையை மாத்திரம் தான் கற்றிருக்கிறார்கள். ஆனால். இன்னுமொரு பகுதி உண்மையுமுண்டு. சிங்கள ஆட்சியாளர்கள் பேரரசுகளை நோக்கிச் சாய்ந்த போதெல்லாம் அவர்களைக் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வருவதற்கும் வெளித் தரப்புக்கள் தமிழர்களையே பயன்படுத்தியுள்ளனர்.

தமிழர்களை வைத்துத் தான் சிங்கள ஆட்சியாளர்கள் தங்களுடைய வழிக்குக் கொண்டு வந்திருக்கிறார்கள். இந்தியா தமிழர்களுக்கு ஆயுதத்தையும் கொடுத்து, ஆயுதப் போராட்டத்தையும் ஊக்குவித்து இறுதியில் இலங்கை - இந்திய ஒப்பந்தத்தைச் செய்து கொண்டது.

அமெரிக்கா போர்க் குற்றச் சாட்டுக்களை ஐ. நா முன்பாக முன்வைத்து ராஜபக்ச அரசைத் தன் வழிக்குள் கொண்டு வந்தது. எனவே, தமிழர்களைப் பயன்படுத்தித் தான் இறுதியில் அவர்கள் சிறீலங்காவைத் தங்கள் வழிக்குள் கொண்டு வருகிறார்கள். எனவே, தமிழர்களை எப்போதும் பயன்படுத்தக் கூடிய அரசியல் சூழல் இந்தச் சிறிய தீவிலுண்டு. சிங்களத் தலைவர்கள் அதிலிருந்து பாடம் கற்றுக் கொள்கிறார்களா?

சிங்களத்த தலைவர்கள் ஒரு பக்கம் சாய்வதால் மட்டும் வெளிநாடுகள் தலையிடுவதில்லை. தமிழ்மக்களை அவர்கள் கையாளக் கூடிய அரசியல் சூழல் இலங்கைக்குள் உண்டு. எனவே, தமிழ்மக்களை வெளித்தரப்புக்கள் கையாள முடியாதளவிற்குத் தமிழ் மக்களுக்கான திருப்திகரமானதொரு அரசியல் தீர்வை வழங்க வேண்டும் என்ற முடிவுக்குச் சிங்களத் தலைவர்கள் முன்வருவார்களேயானால் அவர்கள் இறந்த காலத்திலிருந்து முழுமையான பாடத்தைக் கற்றிருக்கிறார்கள் என்ற முடிவுக்கு நாம் வரலாம்.

இல்லாவிடில் அது அரைகுறைப் பாடம் தான். ஏனெனில், தமிழர்கள் தொடர்ந்தும் கையாளப்படக் கூடியதொரு தரப்பாக அதிருப்தியோடு இருப்பார்களேயானால் சிங்களத் தலைவர்கள் ஏதோவொரு பேரரசை நோக்கிச் சாய்ந்து செல்லும் போதெல்லாம் தமிழ்மக்களையே வெளித்தரப்புக்கள் கையாளும். தமிழ்மக்கள் கையாளப்படக் கூடியதொரு தரப்பாகவே இருப்பார்கள். ஆனால்,தமிழர்கள் அடங்கிப் போக மாட்டார்கள்.

கடந்த ஒரு மாதத்திற்கு முன்னர் ரணில் விக்கிரமசிங்க சிங்கப்பூரில் உரையாற்றிய அதேநாளில் மைத்திரிபால சிறிசேன கொழும்பில் பாதுகாப்புத் துறை ஆய்வரங்கத்தில் கலந்து கொண்டு உரையாற்றினார். மகிந்த ராஜபக்சவின் ஆட்சிக் காலத்தில் முழுக்க முழுக்க ஒரு படைத் துறை அரங்காகவே இருந்தது. ஆனால், ஆட்சி மாற்றத்தின் பின் அவர்கள் அதனை மென்சக்தி அலகாக மாற்றினார்கள்.

படைத் துறை ஆய்வரங்கு எனப்படுவது மென் சக்தியை எவ்வாறு சிறீலங்கா அரசாங்கம் கையாளலாம் எனும் தொனிப் பொருளின் கீழ் கடந்த-01 ஆம் திகதி நடாத்தப்பட்டது. இந்த ஆய்வரங்கில் பேசிய மைத்திரிபால சிறிசேன என்ன சொன்னார் தெரியுமா? இலங்கைக்குத் தற்போது எதிரிகளே இல்லை என்றார். இது உண்மையா?

இரண்டாவதாக அவர் கூறிய விடயம், நாங்கள் தமிழர் தரப்பிலிருந்து வந்த புலிகளையும், சிங்களத் தரப்பிலிருந்து வந்த தீவிரவாதத் தரப்பாகிய ராஜபக்சவையும் தோற்கடித்து விட்டோம். எனவே, தற்போது மிதவாதிகள் எங்களுடன் ஒரு இணக்கத்திற்கு வரலாம் என்றார். புலிகள் இயக்கமும், ராஜபக்சவும் தான் பிரச்சினைக்குரிய தரப்புக்கள் என அவர் கூறியிருக்கிறார். எனவே அவர்களைத் தோற்கடித்த காரணத்தால் சிறீலங்காவிற்கு எதிரிகளே இல்லை என அவர் குறிப்பிடுகிறார்.

இது தான் நிலைமை. சிங்கள அரசுத் தலைவர்கள், தென்னிலங்கைத் தலைவர்கள் இறந்த காலத்திலிருந்து கற்ற பாடம் கூட முழுமையானதல்ல. இத்தகையதொரு பின்னணியில் அவர்கள் முழுமையானதொரு பாடத்தைக் கற்றிருப்பார்களேயானால் வரப் போகும் அரசியல் யாப்பில் அது பிரதிபலிக்கும். தமிழ் மக்கள் தங்களை விட்டு விலகிப் போகாதவாறு அவர்கள் தமிழ்மக்களின் சுதந்திரத்தை உறுதிப்படுத்த வேண்டும். தமிழ் மக்களின் தேசிய இருப்பை, சுயநிர்ணய உரிமையை உறுதிப் படுத்த வேண்டும். அவ்வாறு உறுதிப்படுத்தினால் தான் வெளித் தரப்புக்கள் தமிழ்மக்களைக் கையாள முடியாததொரு நிலைமை இலங்கைத் தீவிற்குள் உருவாகும் எனவும் அவர் மேலும் தெரிவித்தார்.

0 Responses to எழுக தமிழின் பின் தென்னிலங்கையில் எழுந்துள்ள எதிர்ப்பு தமிழ் மக்கள் அடங்கிப் போக வேண்டும் என்ற விளைவே!

Post a Comment

Followers

உலகப்பரப்பில் நடைபெறும் மாவீரர் நாள் விபரங்களை கீழ் உள்ள படத்தில் அழுத்தி காணலாம்.