Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

கடந்த வருடப் பொதுத் தேர்தலில் தமிழ்த் தேசிய அரசியல் வெளியில் தமிழருக்கு முன்னால் தெளிவான, பிரத்தியேகத் தெரிவுகள் இரண்டு இருந்தன. ஒரு புறம் இலங்கைத் தமிழரசுக் கட்சியின் தலைமையில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும், மறு புறத்தில் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியும் தமிழ் அரசியல் எதிர்காலம் தொடர்பில் ஒன்றுக்கொன்று முரணான தரிசனங்களை முன்வைத்துத் தேர்தலைச் சந்தித்தன. இரு கட்சிகள் முன்வைத்த இலக்குகளிலும், இலக்குகளை அடைவதற்காக இக் கட்சிகள் தெரிந்தெடுத்த பாதைகளிலும் பாரிய வேறுபாடுகள் இருந்தது. பொதுத் தேர்தற் கால அரசியல் உரையாடல்களில் இம் முரண்பாடுகள் ‘வன் வலு’எதிர் ‘மென் வலு’வாகச் சித்தரிக்கப்பட்டது வாசகர்களுக்கு நினைவிருக்கும்.

அப் பொதுத் தேர்தலில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிற்குத் தமிழ் மக்கள் வழங்கிய மகத்தான ஆணை பலரது அரசியல் எதிர்காலங்களுக்குச் சாவு மணி அடித்தது. இதில் குறிப்பாக தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம், கூட்டமைப்பினுள்ளிருந்த வண்ணமே கட்சியின் அரசியல் பயணத்திற்குக் கெடுதலுண்டாக்கிக் கொண்டிருந்த ஈ.பி.ஆர்.எல்.எப் அமைப்பின் தலைவர் சுரேஷ் பிரேமச்சந்திரன், தேர்தல் காலத்தில் மிகத் தெளிவாகவே தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியினரை ஆதரித்து, அவர்களுக்காக நேரடியாகவும், மறைமுகமாகவும் வாக்கு வேட்டை நடத்திய வட மாகாண முதலமைச்சர் சி. வி. விக்னேஸ்வரன் என்போர் முதன்மையானோர்.

கடந்த ஆண்டின் முடிவில் இவர்கள் தம்மோடொத்த நபர்கள் சிலரைக் கூட்டுச் சேர்த்துக் கொண்டு தமிழ் மக்கள் பேரவையை ஆரம்பித்தனர். பேரவை தன்னைக் கட்சி அரசியலுக்கப்பால் தமிழரை ஒருங்கிணைக்கும் தளமாக அறிவித்துக் கொண்ட போதும், பொதுத் தேர்தலில் தோல்வியடைந்த, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைமைத்துவத்தையும் அரசியல் நிரலையும் தொடர்ச்சியாக எதிர்த்து வந்த, வாழ்-நாள் அரசியல்வாதிகளுக்கு பேரவையில் கொடுக்கப்பட்ட முன்னுரிமை அதன் உள்நோக்கங்களை பல மட்டங்களில் கேள்விக்குள்ளாக்கியிருந்தது.

இன்று தமிழ் மக்கள் பேரவை எழுக தமிழ்ப் பேரணியை நடாத்தி முடித்து மாதம் ஒன்று கடந்தாயிற்று. இந்தப் பேரணியை ஒழுங்குபடுத்தியவர்களின் அரசியல் என்ன? எழுக தமிழ்ப் பேரணியூடாக தமிழ் மக்கள் பேரவை எதைச் செய்யத் தலைப்பட்டது? இவற்றிலிருந்து நாம் கற்றுக் கொள்ள வேண்டிய படிப்பினைகள் எவை?

இக் கேள்விகளுக்கு பேரணிக்கான முன்னாயத்தங்கள், பேரணி நடந்து முடிந்த பின் அதன் மீதான அரசியல் உரையாடல்கள், கடந்த நான்கு வாரங்களாகத் தேசிய மற்றும் தமிழ்த் தேசிய அரசியல் மட்டங்களில் நடந்த சம்பவங்களிலிருந்து விடை தேடுவதற்கான முயற்சியே இந்தக் கட்டுரை.

பின்புலம்: பேரவைப் பெருந்தலைகளும் கொள்கைப் பற்றுதியும்

எழுக தமிழின் அரசியலைப் புரிந்து கொள்ள தமிழ் மக்கள் பேரவையை உருவாக்கியவர்களின் கடந்தகால அரசியலை அலசுவது பொருத்தம். பேரவைப் பெருந்தலைகள் தமிழ்த் தேசியத்திற்கான தளராத அர்ப்பணிப்பும், கொள்கை உறுதியும் கொண்டவர்களாக விளம்பரம் செய்து கொள்வதில் உண்மைகளேதுமுண்டா?

கஜேந்திரகுமார் பொன்னம்பலத்தின் குத்துக்கரணம்

2014 ஆம் ஆண்டில் சர்வதேச விசாரணையை உள்ளடக்கிய ஜெனீவாத் தீர்மானம் நிறைவேற்றப்படவிருந்த நாட்களில் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணித் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலத்தின் வழிகாட்டலில் உள்நாட்டிலும், வெளிநாட்டிலும் குறித்த தீர்மானத்தில் சர்வதேச விசாரணைக் கூறு இல்லை, இதனால் இத் தீர்மானத்தைத் தமிழர் நிராகரிப்பதாகக் கூறி பலத்த கூச்சல் எழுப்பப்பட்டது. ஆனால் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நிதானமான ஒத்துழைப்புடன் பூரணமான சர்வதேச விசாரணையை இத் தீர்மானம் ஏற்படுத்தியது. ஆனால் பொன்னம்பலத்தின் குழப்பங்களோ நின்றபாடில்லை; தொடர்ந்து போரினாற் பாதிக்கப்பட்டோரிடம், குறித்த விசாரணையைப் பற்றிப் புரளிகளைக் கிளப்பி வந்தார். கடந்த 2015 செப்டம்பர் மாதம் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு போர்க்காலக் குற்றங்களுக்கான நீதி வேண்டிக் கலப்புப் பொறிமுறையொன்றை நிறுவ ஜெனீவா ஐநா மனித உரிமைகள் சபையில் முயற்சியெடுத்த போது, சர்வதேச குற்றவியல் பொறிமுறை ஒன்றே வேண்டும் எனக் கோரி கஜேந்திரகுமார் இலங்கையில் கையெழுத்து வேட்டையில் ஈடுபட்டார். தமிழ் சிவில் சமூகமென்ற பெயரில் மனித உரிமைகள் உயர் ஸ்தானிகருக்கு ‘பாதிக்கப்பட்ட தமிழர் கலப்பு நீதிமன்றத்தினை நிராகரிப்பதாகக்’ குறிப்பிட்டுக் கடிதமொன்று எழுதப்பட்டது. இன்று கஜேந்திரகுமாரும் அவரது தொண்டர்களும் தாங்களே போராடி கலப்புப் பொறிமுறைக்கான தீர்மானத்தைக் கொண்டு வந்ததைப் போலும், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு அரசோடு சேர்ந்து நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தைக் கிடப்பில் போட முயல்வது போலும் ஒலி வாங்கிகளைப் பொருத்தி குற்றச்சாட்டுக்களை ஏவும் போது சிரிப்பதா, அழுவதா எனச் சில கணம் திண்டாட வேண்டியுள்ளது.

நீண்ட காலமாக நாட்டின் இனப்பிரச்சினைக்குத் தீர்வாக தொடர்ச்சியாகவே சமஷ்டித் தீர்வை முன்மொழிந்து வந்திருக்கின்ற அரசியல் இயக்கங்களில் தமிழரசுக் கட்சி முதன்மையானது. கடந்த பொதுத் தேர்தலிலும் தமிழரசுக் கட்சி தனது விஞ்ஞாபனத்தில் தெளிவாகவே ஒன்றுபட்ட இலங்கைக்குள், ஒருங்கிணைந்த வட-கிழக்கில் சமஷ்டியாட்சியைத் (federation) தீர்வாக முன்வைத்து மக்கள் ஆணையைக் கோரியது. இத் தேர்தலின் போது பொன்னம்பலத்தின் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியோ ‘ஒரு நாடு, இரு தேசம்’ என்ற சுலோகத்தில் இணைந்த தேசங்கள் (confederation) என்ற ஆட்சி முறைமையைத் தீர்வாக முன்மொழிந்திருந்தது. இன்றோ பொன்னம்பலம் சமஷ்டியே தீர்வென்று முதலமைச்சரோடு கை கோர்த்து பட்டையைக் கிளப்புகின்றார். இது போதாதென்று தனது கட்சி தேசங்களின் இணைப்பைத் தீர்வாக முன்மொழிந்த வரலாற்றை முற்றாக மறுதலித்து வருகின்றார். ஆனால், தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி தீர்வாக எதை முன்மொழிந்து வந்ததென்பது தமிழ் அரசியலை அறிந்தவரெவர்க்கும் தெரியும். கட்சித் தலைவர் இப்படியிருக்க, கட்சிப் பிரமுகர் விஸ்வலிங்கம் மணிவண்ணனோ தனது முகநூலில் ‘சுதந்திர ஈழக் கனவை நனவாக்க’ எழுக தமிழ் நிகழ்வில் மக்கள் இணைய வேண்டுமென்று கோரிக்கை விடுத்திருந்தார். இவர்களில் யாரை நம்புவது? எது கட்சியின் உத்தியோக பூர்வ நிலைப்பாடு? நேற்று இணைந்த தேசங்கள், இன்று சமஷ்டி. அப்போ நாளை ஒற்றையாட்சியா? கஜேந்திரகுமாரும், அவரது சிவில் சமூக நண்பர்களும் தமிழரது அரசியல் எதிர்காலம் தொடர்பில் சர்வதேச உதவியுடன் உள்நாட்டு மற்றும் புலம்பெயர் தமிழரிடம் நடாத்தவிருந்த பொதுவாக்கெடுப்புப் பேச்செல்லாம் இன்றென்னானது?

மக்கள் இந்த நாடகங்களால் மசிந்துவிடவில்லை. கஜேந்திரகுமாரின் அரசியல்  ஞானத்திற்கும், அவரதும் அவரது கட்சிக்காரரது கொள்கையுறுதிக்கும் கடந்த ஆண்டு பொதுத் தேர்தல் பேறுகளே சான்று.

சுரேஷ் பிரேமச்சந்திரனின் சுய முரண்நிலை அரசியல்

பேரவையின் மற்றுமொரு பெருந்தலை சுரேஷ் பிரேமச்சந்திரன் பொதுத் தேர்தலில் தோல்வியடைந்த கையோடு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தேசியப்பட்டியலில் ஆசனம் கேட்டு அலைந்தார், நாள் தோறும் அறிக்கைகள் விடுத்தார். தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் அரசியல் நிலைப்பாடுகளோடு உடன்படாதவர், கூட்டமைப்பு தமிழ் மக்களை ஏமாற்றிச் செல்வதாகக் கருதுபவர் ஏன் அதே கட்சியில் ஆசனம் கேட்டு அலைய வேண்டும்? இதுவா பிரேமச்சந்திரனின் கொள்கைப் பற்றின் இலட்சணம்? கட்சித் தலைமை பாரளுமன்றத்தில் இவருக்கொரு இடம் கொடுத்திருந்தால் அவர் இன்று பேரவையில் இல்லை, பேரவையும் இல்லை.

விக்னேஸ்வரனின் தடுமாற்றம்

பாராளுமன்றில் இலங்கைத் தமிழரசுக் கட்சிப் பேணி வந்த மிதவாத அரசியல் நிரலின் மாகாண மட்ட நீட்சியாக சம்பந்தனால் கொண்டு வரப்பட்டவரே முதலமைச்சர் விக்னேஸ்வரன். தெற்கில் நீண்ட காலம் வாழ்ந்தவரும், சிங்களவரோடு நெருங்கிய தொடர்புகளைக் கொண்டவருமான இவர் வடக்கிற்கும் தெற்கிற்குமிடையில் பாலமாக இருப்பார் என்ற நம்பிக்கையில் முதலமைச்சர் வேட்பாளராக்கப்பட்டார். இவரை முதலமைச்சர் வேட்பாளராக்கியதற்கு இன்று இவரைச் சூழ்ந்திருப்பவர்கள் பலரிடமிருந்து பலத்த எதிர்ப்பு வந்தது. இந்தச் சக்திகள் அன்று அவரை மேட்டுக்குடியாளராகவும், தேசியப் பற்றற்றவராகவும் சித்தரித்தன. பலத்த எதிர்ப்புக்களின் மத்தியில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைமையினதும், உறுப்பினர்களினதும் உழைப்பின் வழியாக 2013 மாகாண சபைத் தேர்தலில் வெற்றி பெற்று முதலமைச்சராகினார். சம்பந்தனது அரசியல் நிரலோடொத்து அரசியல் செய்யவென அழைத்து வரப்பட்ட இவர் அடுத்து வந்த பொதுத் தேர்தலில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை எதிர்த்தார். தேர்தலுக்கு ஒரு கிழமை மிஞ்சியிருந்த நிலையில் எந்தச் சந்தேகங்களுக்கும் இடமின்றி தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர்கள் சரணாகதி அரசியலைச் செய்வதாகச் சாடினார். தமிழர் தமது தனித்துவத்தையும், சுயநிர்ணய உரிமையையும் உறுதி செய்யும் பொருட்டு தேர்தல் நாளன்று ‘வீட்டுக்குள்’ (தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு) முடங்கிக் கிடக்காமல் விடியுமுன்பே எழுந்தடித்து தம் ‘பொன்னான’ (கஜேந்திரகுமார் பொன்னம்பலம்) வாக்குகளை வழங்க வேண்டுமெனச் சொல்லி வைத்தார். அத் தேர்தலில் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியினர் மக்களால் நிராகரிக்கப்பட்டனர். விஜயகலா மகேஸ்வரனுக்கும், ஏன் அங்கஜன் ராமநாதனுக்குக் கிடைத்த வாக்குகளைக் கூட பொன்னம்பலத்தால் சுவீகரிக்க முடியவில்லை. ஆனால், விக்னேஸ்வரனுக்கு ஏனோ இச் செய்தி உறைக்கவில்லை.

கூட்டமைப்பை துரோகிகளாக்க நினைப்போரோடு இணைந்து இன்றும் அவர் மேடையில் நிற்க, அவர் சொல்வதைப் போலவே ‘மக்களோடு மக்களாக வடக்கில் வாழ்ந்து, அவர்களது இன்னல்களைக் கண்டு நெஞ்சம் கலங்கிப்’ பிறந்த ஞானமா காரணம்? மக்களே கூட்டமைப்பைத் தொடர்ச்சியாகத் தெரிந்து வரும் போது, அந்த ஜனநாயக ஆணையை மதித்துக் கூட்டமைப்பின் அரசியற் பயணத்திற்கு உறுதுணையாக நிற்காமல் மாறாக கூட்டமைப்பை எதிர்க்கின்றாரெனின் மக்களை விடத் தனக்கு மக்களின் நிலைமை தெரியுமென்கிறாரா? மேலும், மக்களின் பதைபதைப்பைப் பார்த்து உண்மையிலேயே துடிக்கும் நெஞ்சம் கையிலிருக்கும் அதிகாரங்களைக் கொண்டு செய்ய முடிந்தவற்றைச் செய்திருக்க வேண்டாமா? வடக்கு மீனவர்களின் வாழ்வாதாரத்தைக் கேள்விக்குறியாக்கும், தென்னிந்திய மீனவர்களின் அத்துமீறல்களுக்கெதிராக இவர் முன்னெடுத்த உருப்படியான நடவடிக்கை தான் என்ன? வட மாகாண சபை தான் இயற்றிய ஒவ்வொரு சட்டத்திற்கும் ஒரு நூறு தீர்மானங்களை நிறைவேற்றியிருக்கின்றது. மாகாண சபையின் பணிகளுக்காக ஒதுக்கப்பட்ட நிதி பயன்படாமல் மத்திக்குத் திரும்பியிருக்கின்றது. வட மாகாண முதலமைச்சராகவிருந்து வெற்றுத் தீர்மானங்களை நிறைவேற்றியதையும், தென்னிந்திய மீனவர்களின் அரஜாகமான அத்துமீறல்களுக்கு நெம்பு கொடுத்து வந்த ஜெயலலிதாவின் தமிழக சட்டமன்றத் தீர்மானங்களை வாழ்த்தி மடல் வரைந்ததையும் விடுத்து, இவர் செய்தது வேறேதுமுண்டா?

ராஜபக்ச காலத்திலாவது ஒரு கெடுபிடி இராணுவ ஆளுநர் இருந்தார். ஆட்சி மாற்றத்தின் பின்னர் வட மாகாணத்திற்கு சிவில் நிர்வாக பின்னணியைக் கொண்ட, ஒத்திசையும் ஆளுநர் நியமிக்கப்பட்டார். அதன் பின்னரும் கூட மாகாண சபை இயக்கத்தில் எதுவித மாற்றமும் ஏற்படவில்லை. மாகாண சபையால் மக்களுக்குப் பயனில்லை என்பது முதலமைச்சரது நிலைப்பாடாகவிருந்தால் இன்று வரை முதலமைச்சர் பதவியைக் கட்டிப் பிடித்துக் கொண்டிருக்க வேண்டியதன் அவசியம் என்ன? தமிழ் மக்கள் பேரவையைத் தொடக்கும் போது இதிலேதும் கூட்டமைப்புக்கெதிரான அரசியல் கிடையாது, தமிழர் அரசியலில் மக்கள் இயக்கமொன்றின் தேவையை உணர்ந்தே இதைத் தொடங்கினோமென்று முதலமைச்சர் தன் வாயாலேயே படித்துச் சொன்னதில் உண்மையேதுமிருந்தால், ஏன் மக்களால் தெரிந்தெடுக்கப்பட்ட தன் வட மாகாண சபை உறுப்பினர்களோடும், கூட்டமைப்புப் பாராளுமன்ற உறுப்பினர்களோடும் இணைந்திந்த மக்கள் இயக்கத்தை ஆரம்பித்திருக்கக் கூடாது?

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் அரசியற் போக்கை எதிர்க்கக் கூடாதென்பதில்லை, எதிர்ப்பவர்கள் ஆகக் குறைந்த பட்சம் அதைத் தெளிவாகவே மக்களிடம் சொல்லி விட்டுச் செய்ய வேண்டும். தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் - குறிப்பாக, தமிழரசுக் கட்சியின் - உழைப்பின் வினையாகக் கிடைத்த தலைமைத்துவத்திலிருந்து இறங்கி விட்டு, தன் தனித்துவமான அரசியற் திட்டத்தை மக்களிடம் முன்வைத்து மக்கள் ஆதரவைப் பெறவேண்டும். அதை விடுத்து கடந்த பொதுத்தேர்தலில் செய்த நடுநிலைப் பூச்சாண்டி வேலைகளைத் தொடர வேண்டிய அவசியமில்லை. இங்குமிருந்து அங்குமிருந்து, இன்றொரு கருத்து, நாளையொரு கருத்தென விக்னேஸ்வரன் தொடச்சியாகச் செய்தும், சொல்லியும் வருபவை மக்கள் கரிசனையையும், கொள்கை உறுதியையுமா பிரதிபலித்து நிற்கின்றது?

உள்நோக்கம்: ஏன் இந்த எழுச்சி?

2009ஆம் ஆண்டில் ஆயுதப் போராட்டம் முள்ளிவாய்க்காலில் முற்றுப் பெற்ற போது தமிழ் மக்கள் தமது அரசியற் போராட்ட வரலாற்றில் மிகத் தாழ்ந்த வலுவிலிருந்தார்கள். பல்லாயிரக்கணக்கான உயிர்களைக் காவு கொடுத்து, மேலும் பலரை அகதிகளாக்கி எதிர்காலம் குறித்த அச்சத்துடன் தமிழினமிருந்தது. இந்த நெருக்கலான நிலைமையிலிருந்து பன் மடங்கு ஸ்திரமான நிலையில் 2015-ஆகஸ்ட் பொதுத் தேர்தலை சந்தித்தார்கள்.

இந்தப் பரிணாம மாற்றத்தின் பின்னால் இருந்த நிகழ்வுகளான 2012, 2013, மற்றும் 2014 ஆண்டுகளில் நிறைவேற்றப்பட்ட ஜெனீவாத் தீர்மானங்களாகவிருக்கட்டும், 2015இல் நடந்த வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த ஜனாதிபதித் தேர்தலாகவிருக்கட்டும் தமிழரின் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசியற் தலைமையாக தமிழினத்தை வழி நடத்தியது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பே. இந்த நிலை மாற்றங்களின் பின்னால் கூட்டமைப்பிற்கிருந்த பங்களிப்பை உணர்ந்தே கடந்த ஆகஸ்ட் மாதம் தமிழர் மீண்டுமொரு முறை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பைப் ஆதரித்தார்கள். போரின் பின்னரான இடைவெளியில் தமிழர் தாம் பல்வேறுமுனைகளிலடைந்த வெற்றிகளை இயன்றளவு விரைவாக உறுதிப்படுத்தவும், ஆக்கபூர்வமாக்கவும் தமிழ் மக்கள் ஆர்வம் கொண்டிருந்தனர். அடைந்த வெற்றிகளுள் தாம் இழந்திருந்த சர்வதேச சமூகத்தின் ஆதரவை மீளப்பெற்றமை, மகிந்த ராஜபக்சவை பதவியிறக்கித் தெற்கில் ஓரளவு சாதகமான அரசாங்கத்தை நிலைப்படுத்தியமை, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை நாட்டின் எதிர்க்கட்சி நிலைக்கு உயர்த்தியமை என்பன முதன்மையானவை.

இந்த வெற்றி நிலைப்படுத்தற் (consolidation) செயன்முறையில் உச்ச பட்ச அதிகாரப்பகிர்வுடன் கூடிய புதிய அரசியலமைப்பின் தோற்றமும், அமுலாக்கலும் அதிமுக்கியமானது. எழுக தமிழ்ப் பேரணியில் பேசியவர்களும் அரசியலமைப்பு உருவாக்கம் பற்றியே அதிகம் பேசியிருந்தார்கள். இவர்கள் தங்கள் உரைகளில் அரசாங்கம் இப் புதிய அரசியலமைப்பைத் தமிழரது பங்களிப்போ, அறிவோ இன்றி உருவாக்கி அனுமதியின்றித் தமிழர் மீது தீர்வாகத் திணிக்க முயல்வதான படத்தைப் புனைய முற்பட்டிருந்தார்கள்.

ஆனால், தமிழரது கனமான உள்ளீடோடு தான் இந்த அரசியலமைப்பு உருவாகி வருகின்றது. இவ் அரசியலமைப்பு வரைபில் தமிழரது ஜனநாயக பிரதிநிதிகளாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு முக்கிய பங்காற்றியிருக்கின்றது. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நிலைப்பாடுகளை அக் கட்சியின் தலைமை தெளிவாகவே தமது தேர்தல் விஞ்ஞாபனங்களிற் சொல்லி வந்திருக்கின்றது. இது வரை கூறி வந்தவற்றிலிருந்து நழுவி விட்டு தன் மக்களிடம் சாட்டுப் போக்குச் சொல்லிப் பிழைத்துக் கொள்ள முடியாதென்பதை கூட்டமைப்புத் தலைமை நன்கேயறியும். மேலும், அரசாங்கம் இவ் வருடத் துவக்கத்திலிருந்து மாவட்டங்கள் தோறும் அரசியலமைப்புத் தொடர்பான மக்களது கருத்துக்களைக் கேட்டு வந்திருக்கின்றது. இவ் அமர்வுகளில் வடக்கிலும், கிழக்கிலும் பல்வேறு மக்கள் அமைப்புக்கள் தமது யோசனைகளை முன்வைத்திருக்கின்றன.

அரசியலமைப்புத் தொடர்பான முக்கியமான பேச்சுவார்த்தைகள் இது வரை மூடிய கதவுகளின் பின்னாலேயே நடந்து வந்திருக்கின்றது என்பது உண்மை. இருப்பினும், இன்னும் சொற்ப நாட்களில் இது வரை பூட்டிய கதவுகளின் பின்னால் நடந்த பேச்சுக்களின் பேறுகள் பொது வெளிக்கு வரவிருக்கின்றது. இப் பேச்சுக்களில் எட்டப்பட்டுள்ள இணக்கப்பாடுகள் தொடர்பில் எதிர்வரும் நவம்பர் மாதம் வெளிவரவிருக்கும் இடைக்கால அறிக்கை தெளிவுபடுத்தும். இது வரை அரசியலமைப்பு வரைபுப் பணிகளை முன்னெடுத்த 21 பேர் கொண்ட வழிகாட்டும் குழு தமது முன்மொழிவுகளை அரசியலமைப்பு சபையிடம் பிரேரித்து அவற்றைச் சபை ஏற்றுக்கொண்ட பின்னர், இம் முன்மொழிவுகள் மீதான பொது சன வாக்கெடுப்புடன் புதிய அரசியலமைப்பிற்கு செயல் வடிவம் கொடுக்கப்படும். இறுதியில், நடைபெறவிருக்கும் பொதுசன வாக்கெடுப்பில் புதிய அரசியலமைப்பினை ஏற்றுக்கொள்ளும் அல்லது நிராகரிக்கும் தெரிவு - நாட்டின் ஏனைய மக்களோடு சேர்ந்து - தமிழர் அனைவருக்குமே கிடைக்கவிருக்கின்றது. ஆகவே, எழுக தமிழ் பேரணி ஒழுங்கமைப்பாளர்கள் அரசியலமைப்பு உருவாக்கம் தொடர்பில் புனைந்த படத்தில் உண்மையேதுமில்லை.

மேலும், தமிழர் எதைத் தீர்வாக எதிர்பார்க்கிறார்கள் என்பதைச்  சிங்கள மக்களுக்கு எடுத்துச் சொல்லவே இந்தப் பேரணியென்றால், பேரணி கொழும்பிலோ, கண்டியிலோ, அல்லது காலியிலோ செய்யப்பட்டிருக்க வேண்டியது. மேலும், இது தான் நோக்கமாக இருந்திருந்தால் யாழ்ப்பாணத்திலே நடாத்தியிருந்தாலும் பேரணியின் நிறச்சாயம் வேறாகவிருந்திருக்கும். தமிழரது உரிமைக் குரலின் நியாயத்தை சிங்களவர்கள் ஏற்றுக் கொள்ள வேண்டுமாயின் அவர்களிடம் அதை எப்படிக் கொண்டு சேர்க்க வேண்டுமென்பதை நீண்ட நாட்கள் தெற்கில் வாழ்ந்து, கற்று, பணியாற்றியவரும் தனிப்பட்ட ரீதியில் சிங்களவருடன் நெருங்கிய தொடர்புகளைக் கொண்டவருமான முதலமைச்சருக்குத் தெரியாமலிருக்கச் சாத்தியமில்லை.

சிங்களவரிடம் எடுத்துச் சொல்லிப் பயனில்லை, அழுத்திச் சொல்லவே எழுக தமிழ் என்கின்றார்கள் சிலர். ஆனால், பேரணிகளும், ஊர்வலங்களும், பிரகடனங்களும் தமிழ் அரசியலில் விந்தை மிகு நிகழ்வுகள் அல்ல. போரின் பின் கடுமையான இராணுவ நெருக்கடிகளிருந்த காலத்திற் கூட பேரணிகளும், ஊர்வலங்களும் நடந்தன. கூட்டமாகப் பெருக்கெடுத்து வந்து கண்டனம் தெரிவிப்பதெல்லாம் எமக்குக் கன்டோஸ் சாப்பிடுவதைப் போன்றது. இதைவிடப் பெரிய போராட்டங்களைத் தமிழினம் இத் தீவின் கரைகளைத் தாண்டி ஐநா முன்றல் வரை செய்திருக்கின்றது. இவையேதும் தெற்கை அதட்டியதாகவோ, சர்வதேசத்தை உலுப்பியதாகவோ தெரியவில்லை.  அப்படியானால், இன்றும் அரசியற் தீர்வு குறித்தும், காணி விடுவிப்புத் தொடர்பிலும் பேசிக் கொண்டிருக்கத் தேவை இருந்திராது. ஆகவே, பேரணி அரசாங்கத்தை அதிர வைத்தது, சிங்களத் தேசியவாதத்தை வெருள வைத்தது, சர்வதேச சமூகத்திடம் தமிழரது கருத்துக்களை ஓங்கி ஒலிக்கச் செய்தது என்ற ஏற்பாட்டாளர்களின் கதைகள் யாவும் கையெழுத்து வேட்டை மூலம் சர்வதேச குற்றவியல் பொறிமுறையைத் தருவித்திட முடியும் என்று நாம் கடந்த ஆண்டில் கேட்ட புளுகுச் சங்கதிகளுக்கு ஒப்பானவை.

சில பேரவைப் புதல்வர்கள் இந்தப் பேரணி வழி தவறும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைமையை வெருட்டி வைக்கவென முன்னெடுக்கப்பட்டதாகச் சொல்கின்றனர். ஆனால், சம்பந்தனுக்கு செய்தி சொல்வதற்கு இந்தச் சலசலப்பு அவசியமற்றது. மேலும், தமிழர் சமஷ்டி அடிப்படையிலான தீர்வையே விரும்புவதை நேற்றுவரை தேசங்களின் இணைப்பு, ஒரு நாடு இரு தேசம் என்றெல்லாம் கதைவிட்டு மக்களைக் குழப்பி வந்தவர்கள் சொல்லித் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்குத் தெரிய வேண்டியதில்லை. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் முகத்திரையைக் கிழிக்கவே இந்த எழுச்சி என்ற கோஷங்களும் வலுவற்றவை. கூட்டமைப்புத் தன் அரசியல் நிலைப்பாடுகளை தெளிவாகவே முன்வைத்து வந்திருக்கின்றது. இந்த நிலைப்பாடுகளிலிருந்து விலகி தமிழருக்குக் கேடுண்டாக்கும் அரசியலமைப்பொன்றை அரசோடு சேர்ந்து தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு முன்வைக்குமானால் தமிழ் மக்கள் கஜேந்திரகுமாருக்கும், பிரேமச்சந்திரனுக்கும் செய்ததை தமக்குச் செய்யத் தயங்கமாட்டார்கள் என்பதைக் கூட்டமைப்புத் தலைமை நன்கறியும்.

ஆகவே, உண்மையில் தமிழ் மக்கள் பேரவை பேரணிச் சூத்திரத்தை கையிலெடுக்கக் காரணம் தான் என்ன? எழுக தமிழ் ஏற்பாட்டாளர்களிடம், தமிழரசுக் கட்சி தயவு செய்து எமக்கு இரு மாத அவகாசம் தாருங்கள், அதன் பின்னர் மக்களை வீதிக்கிறக்குங்கள் எனக் கேட்டும் அவசர அவசரமாக ஏன் இந்தக் கிளர்ச்சி? எந்தவொரு காத்திரமான  அரசியல்த் திட்டமோ, மாற்று யோசனையோ இன்றி மக்களை உசுப்பேற்றும் வீரப் பிதற்றல்களுக்கு அவசியம் தான் என்ன?

எழுக தமிழ்ப் பேரணியின் பின்னால்(i) சிங்களப் பேரினவாதிகளைத் தூண்டி விட்டு நடைபெற்று வரும் அரசியலமைப்பு உருவாக்கல் முயற்சிகளை முற்றாகக் குலைப்பது; (ii) தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினைச் சிதைத்து அதற்கெதிராகப் புதுக் கட்சி ஒன்றை அடுத்த தேர்தல்களின் முன்னர் உருவாக்குவதற்கான முஸ்தீபுகளை முடுக்கி விடுவது என்ற இரண்டே நோக்கங்களே இருந்தன.

அதிகபட்ச அதிகாரப் பகிர்வுடன் கூடிய அரசியல் யாப்பு பொதுசன வாக்கெடுப்பு வரை வருமாகவிருந்தால் அது பொன்னம்பலம் மற்றும் பிரேமச்சந்திரன் என்போரது அரசியல் வாழ்க்கைக்குச் சாவுமணியாகவே இருக்கும். இவர்கள் தமிழர் பிரச்சினைகள் தீர்க்கப்பட வேண்டுமென்பதை விரும்பாதவர்கள். தமிழ் மக்களின் ஓயாத அலைக்கழிப்பிலேயே இவர்களது அரசியல் தங்கியிருக்கின்றது. 2015 ஜனாதிபதித் தேர்தலைத் தமிழ் மக்களைப் புறக்கணிக்கக் கோரியதே இதன் ஆகப் பெரிய உதாரணம். மேலும், 2012, 2013, 2014, 2015 ஆம் ஆண்டுகளில் ஜெனீவாவில் இவர்கள் மேற்கொண்ட நடவடிக்கைகளும், சர்வதேச விசாரணை, உள்ளகப் பொறிமுறை, கலப்புப் பொறிமுறை முதலியன பற்றித்  தொடர்ச்சியான பொய்களைக் கூறி வந்ததும் கூட இதையே காட்டி நிற்கின்றது. என்று தமிழர் சுயமரியாதையுடன் கூடிய சமாதானத்தையும், திருப்தியளிக்கும் சுயாட்சியையும் எய்துகின்றார்களோ, அன்று இவர்களது வெற்றுக் கோஷங்களும், அட்டைக் கத்தி வீச்சுக்களும் முற்றாகவே பயனற்றுப் போகும்.

தமிழ் மக்கள் ஏற்றுக் கொள்ளத்தக்கதோர் அரசியலமைப்பு பொதுசன வாக்கெடுப்பிற்கு வரும் போது அதை எதிர்த்து நேரடியாகப் பிரச்சாரம் செய்தால் தோல்வி நிச்சயம் என்பதும், அந்தச் செயலை வரலாறு எப்படி நினைவு கூரும் என்பதும் இவர்களுக்குத் தெரிந்திருக்கின்றது. பொதுசன வாக்கெடுப்பிற்கு முன்னால் அரசியலமைப்பு உருவாக்கத்தைத் தடுப்பதற்கோ, முற்றாகக் குலைப்பதற்கோ தனியாக இவர்களால் இயலாது. அதைச் செய்ய சிங்கள இனவாதிகளின் துணை வேண்டும். இதனாற் தான் எழுக தமிழ்ப் பேரணிக்கு தெற்கில் பயங்களைக் கிளறி விடும் வகையில்  வடிவமைக்க வேண்டி வந்தது. இதனாற் தான் நியாயபூர்வமான தமிழர் கோரிக்கைகளை சிங்கள இனவாதிகளுக்குத் தீனி போடும் வகையில் எழுதித் தாங்கி பவனியெடுக்க நேர்ந்தது. உதாரணமாக, ‘தமிழர் தாயகத்தைச் சிங்கள மயமாக்குவதை நிறுத்து’ என்று கொட்டை எழுத்தில் வீரியமாகக் குறித்ததை, எழுக தமிழ்ப் பேரணி முடிந்த சில நாட்களுக்குள்ளேயே முதலமைச்சர் தேசிய விளையாட்டு விழாவில் வைத்து ‘அனுமதி பெற்றுவிட்டு அமைக்காததே தவறு’ என்ற தொனிப்பட சிங்களத்தில் பவ்வியமாக எடுத்தியம்பியிருந்தார். மேலும், வட தமிழ் மீனவர்கள் தென்னிலங்கை மீனவர்களால் எவ்வளவு பாதிக்கப்பட்டிருக்கின்றார்களோ, அதேயளவு அல்லது அதற்கதிகமாக தென்னிந்திய மீனவர்களால் பாதிக்கப்பட்டிருக்கின்றார்கள். ஆனால் ஆங்கிலத்திலும், சிங்களத்திலுமிருந்த எழுக தமிழ்ப் பிரகடனத்தில் ‘தென்னிலைங்கைச் சிங்கள மீனவர்களின் அத்துமீறல்களை நிறுத்து’ என்பது மாத்திரமே குறிக்கப்பட்டிருந்தது.

தெற்கில் இப் பேரணிக்கெதிராகக் கிளர்ந்திருக்கும் எதிர்ப்பலை அரசியலமைப்பு உருவாக்கத்தில் ஈடுபட்டு வரும் அரச தரப்புப் பிரதிநிதிகளை ஆட்டங்கொள்ள வைக்கும். அதிகாரப் பரவலாக்கத்திற்கெதிரான பீதியை சிங்கள மக்களுக்குள் எழ வைக்கும். ஏலவே ஏற்பட்டிருக்கும் இணக்கப்பாடுகளில் பிணக்குகளை உருவாக்கும். இது அரசியலமைப்பு உருவாக்கத்தை முற்றாக உருக்குலைக்கும் அல்லது இழிவுநிலை அதிகாரப் பகிர்வைக் கொண்ட அரசியலமைப்பை அறிமுகப்படுத்த அரசாங்கத்தை  நிர்ப்பந்திக்கும்.

இத் தடைகளனைத்தையும் தாண்டி தமிழருக்குத் திருப்தியளிக்கக் கூடியதோர் அரசியலமைப்பு வருமாகவிருந்தால், அதையும் சிங்களப் பேரினவாதிகளின் துணையோடு சிங்கள மக்களை போதியளவு குழப்பி பொதுசன வாக்கெடுப்பில் அவ் அரசியலமைப்பைத் தோற்கடிக்கும் நிகழ்ச்சி நிரலின் முதலாவது அத்தியாயமே அன்று யாழ் முற்றவெளியில் அரங்கேறியது.

மேலும், என்னதான் விக்னேஸ்வரன் தன் எழுக தமிழ்ப் பேரணி உரையில் ‘நாம் தமிழரசுக் கட்சிக்கு எதிரானவர்களல்ல’ என்று கூறித் தன் நடுநிலைப் பூச்சாண்டி வித்தையை விஸ்தரித்திருந்தாலும், எழுக தமிழ்ப் பேரணியின் பின்னர் நிகழ்வின் ஏற்பாட்டாளர்களின் பேச்சுக்களில் தமிழர் ஒற்றுமையின், எமது அரசியற் பலத்தின் அடையாளமான தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை முற்றாகச் சிதைத்துப் போடும் நய வஞ்சக நிரல் வெளிச்சத்துக்கு வரத் தொடங்கியிருக்கின்றது. எழுக தமிழ்ப் பேரணியின் பின்னர் முன்னணித் தமிழ் நாளேடொன்றில் வெளியான ‘தமிழ்த் தேசியத்திற்குத் தலைமை தாங்க விக்னேஸ்வரன் தயாரா?’ என்ற கட்டுரையை வெகு விமரிசையாக கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தன் சமூக வலைத்தளத்தில் பகிர்ந்திருந்தார். எழுக தமிழுக்கு ஆதரவு வழங்கிய தமிழ் அரசியல் கருத்துருவாக்கிகள், ஆய்வாளர்கள் விக்னேஸ்வரனை அடுத்த பிரபாகரனாகப் முன்னிறுத்த ஆரம்பித்து விட்டார்கள். அதாவது, எவ்வாறு அ.அமிர்தலிங்கத்தின் தலைமையிலான இலங்கைத் தமிழரசுக் கட்சியின் போக்கை எதிர்த்துப் பிரபாகரன் தமிழ்த் தேசிய அரசியலைத் திசை திருப்பினாரோ, அதைப் போலவே இன்று சம்பந்தன்- சுமந்திரன் என்போரின் கட்டிலிருந்து தமிழ்த் தேசிய அரசியலை விக்னேஸ்வரன் மீட்டெடுக்கப் போகிறாராம். இதே அரசியற் போராளிகள் கஜேந்திரகுமார் பொன்னம்பலமே தமிழரின் அடுத்த அன்ரன் பாலசிங்கம் என்றும் பிரசங்கித்து வருகின்றனர். இனியும் எம்மிடையே பேரவை கட்சி நடுநிலையான மக்கள் இயக்கமா? அது அரசியல் உள்நோக்கங்கள் அற்றதா? என்ற அர்த்தமற்ற விவாதங்களும், விடைதேடல்களும் வேண்டாமே. விடை தேடி வேறெங்கும் அலைய வேண்டியதில்லை: பேரணி மேடையில் வைத்தே சுரேஷ் பிரேமச்சந்திரன் சம்பந்தனை வலிந்து இழுத்துப் பேசி பேரவை எதற்கும், எவர்க்கும் எதிரானது என்பதை எதுவித ஐயத்திற்கும் அப்பால் நிரூபித்திருந்தார். 

நிதானமாக ஆராய்ந்தால் தமிழ் மக்கள் பேரவையின் தலைவர்களின் அரசியலுக்கு இரண்டே அம்சங்கள் தான்: (i) காலத்திற்கேற்ப ஆனதைச் செய்து - அது ‘சர்வதேச குற்றவியல் பொறிமுறை’ எதிர் ‘கலப்புப் பொறிமுறை’ மற்றும் ‘தேசங்களின் இணைப்பு’ எதிர் ‘சமஷ்டி’ போன்ற கொள்கை முடிவுகளாகவிருக்கட்டும், ‘கையெழுத்து வேட்டை’ எதிர் ‘பயன் தரு பேச்சுவார்த்தைகள்’  போன்ற செயற்பாட்டு நிரற் தெரிவுகளாகவிருக்கட்டும் - தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைமைகளின் எடுக்கும் நிலைப்பாட்டினை எதிர்ப்பதன் மூலம் தம்மை தீவிரத் தேசியவாதிகளாக காட்டிக் கொள்வது; (ii) தமது சுயநலங்களுக்காகவும், அரசியலிருப்பிற்காகவும் - ஜெனீவாத் தீர்மானங்களின் முன்னரும் பின்னரும், 2015 ஜனாதிபதித் தேர்தலின் போதும் செய்ததைப் போன்று - மக்களிடையே பொய்களையும், புரளிகளையும், உணர்ச்சிப் பெருவெள்ளத்தையும் கிளறிவிட்டு தமிழரின் தொடர்ந்த உத்தரிப்பின் மூலம் தம் அரசியல் இருப்பை உறுதி செய்து கொள்வது.

இவர்களின் இச் சுயநல அரசியல் நெறியின் புதிய வடிவமே தமிழ் மக்கள் பேரவையும், எழுக தமிழும். இவை இந்த அட்டைக் கத்தி வீரர்களின் அரசியல் இருப்பிற்கானதேயன்றி தமிழ் மக்களது விடியலுக்கானதோ, விமோசனத்திற்கானதோ அல்ல.

எழுக தமிழ்ச் சத்தியங்கள்

நடப்பவற்றின் சரி, பிழைகளைத் தாண்டி, அவற்றிலிருந்து பாடம் கொள்ள வேண்டியது அவசியம். அவ் வகையில், எழுக தமிழ்ப் பேரணி தமிழ் மக்களுக்கும், தமிழ் மக்களால் நிராகரிக்கப்பட்ட அரசியல்வாதிகளுக்கும், அதே மக்களால் தெரிவு செய்யப்பட்ட அரசியற் தலைமைகளுக்கும் சில முக்கியமான செய்திகளைச் சொல்லிச் சென்றிருக்கின்றது.

முதலாவதாக, மக்களாகிய எமக்கு, நாம் எங்கிருக்கின்றோம் எங்கு செல்லப் போகின்றோம் என்பதில் தெளிவு வேண்டும். திலீபன் மரணித்து மூன்று தசாப்தங்களாகியும் இன்றும் நாம் திலீபன் முன்வைத்த அதே கோரிக்கைகளையே கேட்டுக்  கொண்டிருக்கின்றோம். இது தான் எம் மூன்று தசாப்த காலப் பொங்குதல்களினதும், எழுச்சிக் கோஷங்களினதும் இறுதிப் பேறு. இன்று நாமிருக்கும் நிலையில், மீண்டுமொரு அழிவிற்கிட்டுச் செல்லக் கூடாதென்ற அர்ப்பணிப்பே, அக் கொள்கையின் மீதான பற்றுதியே இன்றைய தமிழ்த் தலைமைகளிடமிருக்க வேண்டிய அடிப்படைப் பண்பு. கஜேந்திரகுமார் பொன்னம்பலத்தைப் போன்று ‘தாம் எவ்வித அர்ப்பணிப்புக்கும் தயார்’ என்றும் ‘தமிழினம் வீதிக்கிறங்கித் தன் வீரத்தை நிரூபித்தால் விடிவு நிச்சயம்’ என்றும் சில்லறைக்கும் பயனற்ற வீர வசனங்களைப் பேசி மக்களை உணர்ச்சி வெள்ளத்தில் ஆழ்த்தும் தலைமைகளைத் தொடர்வது எம்மை மீண்டும் அழிவிற்கும், அபத்தத்திற்குமே இட்டுச் செல்லும். இவர்களின் சுய-அர்ப்பணிப்புக்களின் இலட்சணத்தை நாமறிவோம். இவர்களை இனங்கண்டு இவரது வெற்று அரசியலைநாம் வேரறுக்க வேண்டும்.

கடந்த காலத்தை நிதானமாக இரை மீட்டு, அதிலிருந்து பாடங்களைக் கற்கும் மக்கள் இயக்கமே எமது தற்காலத் தேவை. இம் மக்கள் இயக்கம் சிங்கள மக்களிடமும், முஸ்லிம்களிடமும் சமஷ்டி ஆட்சிமுறை, சமயச்சார்பிலா அரச கட்டமைப்பு, மற்றும் வட கிழக்கு மீள்-இணைப்புத் தொடபில் நம்பிக்கையூட்டும் விதத்தில் பேசி இணக்கம் காண முயற்சிக்க வேண்டும். சிங்களவர்களையும், முஸ்லிம்களையும் மேலும் விரோதிகளாக்கும் முயற்சிகள் எந்த நன்மையையும் தரப் போவதில்லை. தேவைப்படுவது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை மேலும் முற்போக்காக்கும், ஜனநாயகமயப்படுத்தும் மக்கள் இயக்கமேயன்றி வெற்றுக் கோஷங்களாலும், வெறுந் தேசியவாதத்தாலும் எமது அரசியல் தலைமைகளை மேலும் தீவிரப்போக்காக்கும் தமிழ் மக்கள் பேரவை போன்ற இயக்கங்களால் எமக்கு விடிவில்லை.

இரண்டாவதாக, எழுக தமிழில் திரண்ட கூட்டத்தையும், விக்னேஸ்வரனையும் வைத்துக் கொண்டு மீண்டும் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் மற்றும் சுரேஷ் பிரேமச்சந்திரன் என்போர் அரசியல் மீள்பிரவேசம் செய்ய முயல்வார்களானால் மூக்குடை படவே நேரும். எழுக தமிழில் கலந்து கொண்டோர் தொகை 8,000-10,000 பேர் வரை. ஆனால், பேரணி முடிந்த கையோடு தமிழ்த் தேசிய மக்கள் முன்னணிச் செயலாளர் செல்வராஜா கஜேந்திரன் 30,000 பேர் இந்த நிகழ்வில் கலந்து கொண்டதாக அறிவித்திருந்தார்; யாழைத் தளமாகக் கொண்டியங்கும் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி ஆதரவுப் பத்திரிகையான வலம்புரி இன்று வரை இத் தொகையை 50,000 எனத் தொடர்ந்து அறிவித்து வருகின்றது. இதுவெல்லாம் எழுக தமிழ்ப் பேரணியின் உள்நோக்கங்களையும், ஏற்பாட்டாளர்களின் வங்குரோத்து அரசியலையும் வெளிச்சம் போட்டுக் காட்டுகின்றது. அத்தோடு, ஏதோ தமிழரசுக் கட்சியைத் துரோகிகளாகக் காட்டி அரசியல் செய்து விடலாம் என்கிற எண்ணப்பாடும் தப்புக் கணக்கே: தமிழரசுக் கட்சிக்கு அடுத்து, கூட்டமைப்பின் அடுத்த தனிப் பெரும் கட்சியான ரெலோ அமைப்பும் பேரணியில் கலந்து கொள்ளவில்லை. ஒட்டுமொத்தமாகக் கூட்டமைப்புப் பாராளுமன்ற உறுப்பினர்களில் இருவர் மாத்திரமே எழுக தமிழ்ப் பேரணியில் கலந்து கொண்டிருந்தார்கள்.

மேலும், 2010-இல் கூட்டமைப்பைப் பிரிந்த பின் தொடர்ந்த ஆறாண்டு காலத்தில் கஜேந்திரகுமார் சாதித்தது கடந்த பொதுத் தேர்தலில் விஜயகலா அம்மையாரிடம், கூட்டமைப்பிற்குச் சேர வேண்டிய ஆசனத்தைத் தாரை வார்த்தது மாத்திரமே. எங்கும், எதிலும், என்றும் கூட்டமைப்பை எதிர்ப்பதை வாழ்க்கையாக்கி விட்டு இன்று கூட்டமைப்பின் உழைப்பின் வினையாகக் கிட்டிய வட மாகாண முதலமைச்சர் என்கிற தலைமைப் பீடத்தின் பின்னால் தன் அரசியல் எதிர்காலத்தைக் காக்கத் தஞ்சம் புகுந்திருப்பதே இவரது ஆளுமையின் இலட்சணம். உள்ளேயிருந்து கொண்டு சம்பந்தனையும்-சுமந்திரனையும் விரட்டிக் குழப்பிச் சாதிக்க முயன்று தோற்று, தொடர்ந்து வந்த தேர்தலிலும் தோற்று, பின்னர் அதே தலைமைகளிடம் தேசியப் பட்டியலில் ஆசனத்திற்கலைந்து தவித்துத் தரித்த பின்னர், கடைசியாக வழியேதுமின்றி யார் வட மாகாண சபைத் தேர்தலில் முதலமைச்சர் வேட்பாளராகக் கூடாதென்று கூவி வந்தாரோ அதே நபருக்குப் பின்னால் தன் இருப்பைத் தக்கவைக்கப் வரிசை கட்டியிருப்பதே சுரேஷ் பிரேமச்சந்திரனின் நகைப்பிற்குரிய, அருவருக்கத்தக்க அரசியல்.

பேரவையின் சேனைத் தளபதிகள் இப்படி, சக்கரவர்த்தி எப்படி? விக்கினேஸ்வரன் தனது அரசியல் நிலைப்பாடுகளில் எதுவிதத் தெளிவோ, உறுதியோ இன்றித் தள்ளாடிக் கொண்டிருக்கிறார். 2013 வட மாகாண முதலமைச்சர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டவுடன் தெரண தொலைக்காட்சிக்கு வழங்கிய செவ்வியொன்றில் ‘நீங்கள் இனிக் கூட்டமைப்பின் கையில் பொம்மையாகி (தீவிரவாதியாகி) விடுவீர்களா?’ என்ற தொனியில் விடுக்கப்பட்ட கேள்விக்கு ‘கூட்டமைப்பு அரசியல்வாதிகள் தாம் நினைத்ததைச் சொல்லும், செய்யும் சூழ்நிலை போருக்கு முன்னர் இருக்கவில்லை. அன்று பேசியது விடுதலைப் புலிகளின் துப்பாக்கி ரவைகளே; கூட்டமைப்பு அரசியல்வாதிகளல்ல. இன்று போரோய்ந்து விட்டது. அவர்கள் என் போன்றவர்களே (மிதவாதிகளே)’ எனப் பதில் சொல்லியிருந்தார்.

மாகாண சபைத் தேர்தலுக்கு மிகச் சொற்ப நாட்களே எஞ்சியிருந்த நிலையில் வல்வெட்டித்துறைப் பிரச்சார மேடையில் வைத்து யார் கூட்டமைப்பை அடக்கித், தீவிரப் போக்காக்கி வைத்திருந்தவர்(கள்) என்று தெற்கில் அறிவித்திருந்தாரோ, அதை முற்றாக மறந்து, மறைத்து, தேர்தல் வாக்குகளைக் குறி வைத்துப் பிரபாகரன் ஒரு மாவீரன் என முழங்கினார். 2015 பொதுத் தேர்தலில் முற்றாகக் கூட்டமைப்பிற்கு எதிராகச் செயற்பட்டு அதில் தோல்வியடைந்த பின்னர், கிளம்பியிருந்த சூட்டைத் தணிக்கவென நல்லிணக்கத் தூதுவராக மாறி நாக விகாரையின் பிரதான பிக்குவைச் சந்தித்து வணக்கம் செலுத்தினார். கடந்த வருட நாக விகாரைச் சுற்றுலாவை மறந்து, எழுக தமிழிப் பேரணியில் சிங்கள-பௌத்த மயமாக்கலை நிறுத்து என வீரப் பிரகடனம் செய்தார். எழுக தமிழில் எழுந்தவர்கள் முற்றாக அமர்ந்து முடியவில்லை, பிரகடனத்திற்கெதிராகத் தெற்கில் கிளம்பிய எதிர்ப்பலையை சமாளிக்க ஜனாதிபதி சிறிசேன முன்னிலையில் சட்ட பூர்வமாக விகாரைகளைக் கட்டுவதற்குச் சம்மதம் என்ற கருத்துப்பட சிங்களத்தில் பதுமையாகப் பேசி வைத்தார். போதாதென்று, புற்றுநோய் வைத்தியசாலைக்கு நிதி திரட்டும் பாத யாத்திரையை சிங்கக் கொடி அசைத்து துவக்கியும் வைத்தார். கஜேந்திரகுமார் பொன்னம்பலத்தின் முன்னை நாள் கருத்துக்களின் படி, சிங்கக் கொடியை அசைப்பதென்பது தமிழ் அரசியலை ‘தமிழ்த் தேசிய நீக்கம் செய்யும்’  மாபெரும் குற்றச் செயல். ஆக, இறுதியில் பேரணிக்குத் தலைமை தாங்கியவராலேயே எழுக தமிழ் ஏற்பாட்டாளர்களின் வீறு கொண்ட வெளிப்பாடுகள் யாவும் சொற்ப நாட்களுக்குள்ளேயே பெட்டிப் பாம்பாகச் சுருள நேர்ந்தது.

இந்தக் கூட்டணி தான் தமிழினத்தின் புதிய மீட்பர்களா? இவர்களை நம்பித்தான் நாம் வீதிக்கிறங்கி, வீரத்தை வெளிக்காட்டி, விடியல் தேடப் போகின்றோமா? புளுகுக் கதைகளையும், போலித் தீர்க்கதரிசனங்களையும் தவிர்த்து இவர்களிடமிருந்து பிறிதொன்றும் பிறக்காது. நிதர்சனம் இதுவே: என்று தன் கட்சி நடுநிலை மற்றும் மக்களியக்கப் போக்காட்டல்களை விலக்கி, பேரவை தேர்தல் அரசியலிற்குள் தாவுகின்றதோ, அன்று பேரவையையும், அதன் தலைமைகளையும் (மீண்டும்) தமிழ் மக்கள் தீர்க்கமாக நிராகரிப்பார்கள்.

இறுதியாக, இப் பேரணி தமிழ் மக்களின் அரசியற் தலைவர்களிடம் ஜெனீவாவிலும், இலங்கைப் பாராளுமன்றத்திலும், புதிய அரசியல் யாப்புத் தொடர்பான கலந்துரையாடல்களிலும் அவர்கள் எவற்றையெல்லாம் சாதித்தாலும் இறுதியில் தாம் பிரதிநிதித்துவப்படுத்தும் மக்களை இழந்தால் அது தம் செயற்பாடுகளை அர்த்தமற்றதாக்கும் என்ற சத்தியத்தை வலியுறுத்திச் சொல்லியிருக்கின்றது. தாம் பிரதிநிதித்துவம் செய்யும் மக்களோடு நெருக்கமான உறவுகளைப் பேணுவதே தமிழ்த் தலைமைகளின் தலையாய கடன். என்று இவ் உறவினில் இடைவெளி விழுகின்றதோ வீட்டிற்குள் புகுந்து சூறையாட பல சக்திகள் காத்திருக்கின்றன. தேர்தல் காலங்களில் மக்களோடிருக்கும் தொடர்ச்சியான இடைப்படுதல், உரையாடல் என்பன பின்னரும் தொடர வேண்டும். கடந்த கிழமை வவுனியாவில் நடந்தது போன்ற காட்டசாட்டமான கட்சிக் கூட்டங்கள் வட-கிழக்கெங்கும் நடக்க வேண்டும். தொடர்ச்சியான உரையாடலிருக்கும் போது மக்கள் மனம் தளர்ந்து போக மாட்டார்கள். மக்களே பலம். மக்களே மகுடம்.

0 Responses to ‘எழுந்த பின்’ எழுக தமிழ்ப் பேரணி மீதான மறுபார்வை! (இலைஜா ஹூல்)

Post a Comment

Followers