Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

யார் புலிக்கதை சொல்லி இனவாதம் பேசினாலும், யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட தமிழ் மக்களின் காணிகள் அவர்களிடமே மீளவும் கையளிக்கப்படும் என்று பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் ருவான் விஜயவர்த்தன தெரிவித்துள்ளார். 

நாட்டில் நல்லிணக்கத்தை ஏற்படுத்துவதில் அரசாங்கம் பின்நிற்கப்போவதில்லை.  தமிழ் மக்களின் காணிகளை மீளவும் அவர்களுக்கு வழங்குவதை எந்த இனவாதிகளினாலும், பிரிவினைவாதிகளினாலும் தடுக்க இயலாது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

பாதுகாப்பு அமைச்சில் நேற்று வெள்ளிக்கிழமை நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்டு பேசிய போதே இராஜாங்க அமைச்சர் ருவான் விஜயவர்த்தன மேற்கண்டவாறு கூறியுள்ளார்.

வடக்கில் இராணுவ முகாம்களை அகற்றி புலிகளுக்கு சாதகமான சூழலை உருவாக்கிக்கொடுக்கும் செயலை அரசாங்கம் மேற்கொண்டு வருவதாக குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டு வருகின்றது. இது தொடர்பில் கேள்வியெழுப்பப்பட்ட போதே, அவர் மேற்கண்டவாறு பதிலளித்துள்ளார்.

அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது, “விடுதலைப் புலிகளை பலப்படுத்தவோ அல்லது வடக்கில் மீண்டும் பயங்கரவாத சூழலை உருவாக்கி நாட்டில் குழப்பங்களை ஏற்படுத்தவோ எமக்கு எந்த தேவையும் இல்லை. அரசாங்கமாக நாம் தேசிய பாதுகாப்பு விடயத்திலும் மக்களின் பாதுகாப்பிலும் மிகவும் கவனமாக  செயற்பட்டு வருகின்றோம்.

எனினும், வடக்கில் மேற்கொண்டுவரும் ஜனநாயக செயற்பாடுகள் அனைத்தையும் இனவாதமாக சித்தரிக்க ஒருசிலர் செயற்படுகின்றனர். கூட்டு எதிரணியினர் (மஹிந்த அணி) என கூறிக்கொண்டு வடக்கில் நடப்பவற்றை இனவாதமாக  காட்ட வருகின்றனர். இராணுவ முகாம்களை அகற்றி மீண்டும் புலிகளுக்கு காணிகளை ஒப்படைத்து வருவதாக கூறுவவதையோ  அல்லது புலிகளை பலப்படுத்தும் நடவடிக்கை எடுப்பதாக கூறுவதையோ  ஏற்றுக்கொள்ள முடியாத காரணிகளாகவே  நாம் கருதுகின்றோம்.

யுத்தத்தில் பாதிக்கப்பட்ட தமிழ் மக்களின், காணிகளை இழந்த தமிழ் மக்களின் நியாயம் நிறைவேற்றப்பட வேண்டும். அவர்களின் காணிகள் மீளவுயம் அவர்களுக்கு வழங்கப்பட வேண்டும். அதில் அரசாங்கம் தெளிவாக உள்ளது. ஆகவே வெகுவிரைவில் வடக்கில் காணிகளை  இழந்த தமிழ் மக்களுக்கு காணிகளை அரசாங்கம் பெற்றுக்கொடுக்கும்.

யார் இனவாதம் பேசினாலும், புலிக்கதைகளை கூறினாலும் நாட்டில் நல்லிணக்கத்தை ஏற்படுத்துவதில் நாம் பின்நிற்கப்போவதில்லை.  தமிழ் மக்களின் காணிகளை மீளவும் அவர்களுக்கு வழங்குவதை எந்த இனவாதிகளினாலும், பிரிவினைவாதிகளினாலும் தடுக்க இயலாது.

அதேபோல் புலிகளுக்கு நாட்டில் ஒரு சந்தர்ப்பத்திலும் இடமளிக்க முடியாது. தேசிய பாதுகாப்பை பலவீனப்படுத்தவும் முடியாது. வடக்கில் தமிழ் மக்களின் நலன்களை கவனத்தில் கொண்டு செயற்படும் அதே சந்தர்ப்பத்தில் தேசிய பாதுகாப்பு விடயத்தில் மிகவும் பலமாக நகர்கின்றோம்.” என்றுள்ளார்.

0 Responses to யார் புலிக்கதை கூறினாலும், தமிழ் மக்களின் காணிகள் அவர்களிடமே வழங்கப்படும்: ருவான் விஜயவர்த்தன

Post a Comment

Followers