Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

“மாகாணங்களுக்கு 13வது திருத்தச் சட்டத்துக்கு அப்பால் சென்று அதிகாரங்களை வழங்குவதாக முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தன்னுடைய ஆட்சிக் காலத்தில் கூறி வந்தார். அதனையே இப்போது வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் கோரி வருகின்றார். அதில் என்ன தவறு இருக்கின்றது.” என்று அமைச்சர் லக்ஷ்மன் கிரியெல்ல கேள்வியெழுப்பியுள்ளார்.

அநுராதபுரத்தில் நடைபெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு பேசும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

லக்ஷ்மன் கிரியெல்ல கூறியுள்ளதாவது, “போர் நடைபெற்ற காலத்தில் அரசியலமைப்பின் 13வது திருத்தச் சட்டத்துக்கு அப்பால் சென்று அரசியல் தீர்வை வழங்குவதாக மஹிந்த ராஜபக்ஷ கூறியிருந்தார். 13 பிளஸ் என அதற்கு கூறினார்.

இந்தியாவிற்கு சென்றும் 13 பிளஸ் வழங்குவதாக  மஹிந்த ராஜபக்ஷ கூறினார். ஐக்கிய நாடுகள் செயலாளர் நாயகம் இலங்கைக்கு வந்திருந்த போதும் அவர் இதனையே குறிப்பிட்டிருந்தார்.

மஹிந்த ராஜபக்ஷ ஜனாதிபதி பதவியில் இருந்த போது மாகாணங்களுக்கு அதிகளவான அதிகாரங்கள் இருக்கும் முறைமையை வழங்குவதாக தெரிவித்தார். மஹிந்த வழங்குவதாக உறுதியளித்தவற்றையே விக்னேஸ்வரன் தற்போது கோருகிறார்.

தெற்கில் உள்ளவர்களே வடக்கில் உள்ள தலைவர்களுக்கு எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்களை கற்றுக்கொடுத்தனர். கண்டியில் இருந்து கொழும்புக்கு பாத யாத்திரை வந்தனர். மக்கள் விடுதலை முன்னணி ஆர்ப்பாட்டங்களை நடத்தியது. முன்னிலை சோசலிசக் கட்சி ஆர்ப்பாட்டங்களை நடத்தியது. இவர்களே வடக்கு தலைவர்களுக்கு ஆர்ப்பாட்டங்களை நடத்துவதை கற்றுக்கொடுத்தனர் வேறு எவருமில்லை.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தற்போது பாராளுமன்றத்தில் பேச்சுவார்த்தைகளை நடத்தி வருகிறது. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தற்போது நடு நிலையான அரசியல் நிலைப்பாட்டுக்கு வந்துள்ளது. அவர்களிடம் தற்போது அடிப்படைவாத கொள்கைகள் இல்லை. எனினும் சகல இனங்களிலும் அடிப்படைவாத கொள்கைகளை கொண்டவர்கள் இருக்கின்றனர். அடிப்படைவாதிகளை மறந்து விட்டு, நடுநிலையான கொள்கைகளுடன் பிரச்சினை தீர்க்க நடவடிக்கை எடுப்போம்.” என்றுள்ளார்.

0 Responses to மஹிந்த வழங்குவதாகக் கூறியதையே விக்னேஸ்வரன் கேட்கிறார்; அதில் என்ன தவறு இருக்கிறது?: லக்ஷ்மன் கிரியெல்ல கேள்வி!

Post a Comment

Followers