Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் இனவாதியல்ல. அவர், அரசியல் இலாபத்தினைக் கருத்தில் கொண்டு பாரதூரமான கருத்துக்களை வெளியிடுகின்றார் என்று முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். 

வடக்கு மாகாண மக்களின் வாழ்க்கைப் பிரச்சினைகளுக்கு தீர்வு வழங்க முடியாத நிலையில், அந்த மக்களின் கவனத்தை திசை திருப்புவதற்கான சி.வி.விக்னேஸ்வரன் இவ்வாறு நடந்து கொள்வதாகவும் முன்னாள் ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார்.

சி.வி.விக்னேஸ்வரன் தலைமையில் அண்மையில் நடைபெற்ற எழுக தமிழ் பேரணி தொடர்பில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவிடம் கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதிலளிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு கூறியுள்ளார்.

மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளதாவது, “நான் அறிந்த சி.வி.விக்னேஸ்வரன் இனவாதியல்ல. அவர் அரசியல் இலாபத்திற்காகவே இவ்வாறு பாரதூரமான கருத்துக்களை வெளியிட்டுள்ளார். இவர்களுக்கு மக்களுக்கு கூற எதுவும் இல்லை. ஏதும் தொழில் வழங்கியுள்ளனரா, வீதி அமைத்துள்ளனரா இடம்பெயர்ந்தவர்களின் முகாம்களை மூடி அவர்களை மீள்குடியேற்றியுள்ளனரா தமிழ் மக்களின் எந்தப் பிரச்சினைக்காவது தீர்வு வழங்கியுள்ளனரா?

மீனவர்களுக்கு கடலுக்கு சென்று மீன்பிடிக்க முடியுமா? 30 வருடங்கள் கடலுக்கு செல்ல முடியாதிருந்த மக்களுக்கு அந்த வாய்ப்பை பெற்றுக் கொடுத்தோம். இருந்தும் இன்று அவர்களுக்கு மீன்பிடிக்க செல்ல முடியாதுள்ளது. விவசாயிகளுக்கு தமது அறுவடையை விற்க முடியவில்லை. பெரிய வெங்காயத்தை விற்க முடியாதுள்ளது. இந்தப் பிரச்சினைகளுக்கு முதலமைச்சரிடமும் அரசாங்கத்திடமும் தீர்வு இல்லை. அதனால் இனவாதத்தையோ வேறு எதையாவது பரப்பி மக்களின் கவனத்தை திசை திருப்ப முயல்கின்றனர். மக்களின் கவனத்தை திருப்புவதற்காகவே இவ்வாறு செய்கின்றனர். அந்த மக்களுக்கு போராட்டம் செய்ய உரிமையிருக்கிறது.

மீனவர்கள் தமது பிரச்சினையை முன்வைப்பதற்காகவும் விவசாயிகள் தமது பிரச்சினையை வெளியிடவும், இளைஞர்கள் தொழில் கேட்டுமே இந்த போராட்டத்தில் இறங்கினார்கள். மக்கள் தமது பிரச்சினைகளுக்காகவே போராட்டம் நடத்தினார்கள். அரசாங்க ஊழியர்களுக்கு வாழ முடியாத நிலை இருப்பதால் அவர்கள் வந்தார்கள். மக்கள் இனவாத நோக்கத்தில் போராட்டம் நடத்தவில்லை. அது வேறு பக்கம் திசை திருப்பப்பட்டது.

வடக்கு மாகாண சபை தேர்தலை நானே நடத்தினேன். வடக்கு மாகாண முதலமைச்சரின் கருத்து பாரதூரமானது. அதனை அங்கீகரிக்க முடியாது. அதற்காக வடக்கு மாகாண சபை தேர்தலை நடத்தியது குறித்து நான் ஒருபோதும் கவலைப்படவில்லை. அது வடக்கு மக்களின் உரிமையாகும். அந்த உரிமையை அந்த மக்களுக்கு வழங்க வேண்டும். முன் கூட்டி தேர்தல் நடத்தாதே என பலர் என்னிடம் கூறினார்கள். தோற்பது தெரிந்தும் நான் தேர்தல் நடத்தினேன் ஏனென்றால் அவர்களுக்கு தமது உரிமையை வழங்க வேண்டியிருந்தது.” என்றுள்ளார்.

0 Responses to விக்னேஸ்வரன் இனவாதியல்ல; அவர் அரசியல் இலாபத்திற்காக நடிக்கிறார்: மஹிந்த

Post a Comment

Followers