Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

தென்கிழக்கு அமெரிக்காவின் பல பகுதிகளை முக்கியமாக புளோரிடா மாநிலத்தை நாளை காலை தீவிரம் அடைந்து வரும் மேத்யூ ஹரிக்கேன் புயல் மிக வலிமையாகத் தாக்கவுள்ளதாகவும் இதனால் இப்பகுதிகளில் வசிக்கும் சுமார் 15 இலட்சம்  மக்களை உடனடியாக வெளியேறும் படி புளோரிடா கவர்னர் உத்தரவிட்டுள்ளதாகவும் செய்திகள் வெளியாகி உள்ளன.

ஏற்கனவே ஹைட்டி, ஜமைக்கா மற்றும் டொமினிக்கன் குடியரசு ஆகிய நாடுகளைக் கடந்து வந்த மேத்யூ புயல் பலத்த சேதத்தை ஏற்படுத்தியதுடன் 69 இற்கும் அதிகமான மக்களின் உயிரைப் பறித்தும் இருந்தது. தற்போது இப்புயல் அமெரிக்காவின் புளோரிடா மாநிலத்தை நோக்கி நகர்ந்து கொண்டிருக்கின்றது. அமெரிக்க நேரப்படி வியாழன் நள்ளிரவு முதல் புளோரிடாவை இப்புயல் துவம்சம் செய்யும் எனக் கணிக்கப் பட்டுள்ளது. ஏற்கனவே இப்பகுதியை விட்டு வெளியேற மக்களுக்கு  சொற்ப கால அவகாசமே உள்ள நிலையில் உடனடியாக இடம்பெயரும் படியும் இல்லாவிட்டால் உயிரை இழக்க நேரிடும் எனவும் கடுமையாக எச்சரிக்கப் பட்டுள்ளது.

புளோரிடாவை அடுத்து மேத்யூ புயல் தெற்கு கரோலினா, வடக்கு கரோலினா, ஜார்ஜியா, விர்ஜினியா, மேரிலேண்ட் ஆகிய பகுதிகளையும் தாக்கக் கூடும் எனவும் அறிவிக்கப் பட்டுள்ளது. இதற்கு முன் 2012 ஆம் ஆண்டு அமெரிக்காவைத் தாக்கிய சாண்டி புயலின் போதே அதிகளவு மக்கள் வெளியேறி இருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. மேத்யூ புயலால் அதிகபட்சமாக ஹைட்டியில் 65 பேர் கொல்லப் பட்டதாகக் கூறப்படுகின்றது. இந்நிலையில் புளோரிடாவைத் தாக்கவுள்ள மேத்யூ புயல் வகை 3 அல்லது 4 ஐச் சேர்ந்தது என்று அறிவிக்கப் பட்டுள்ளது. அமெரிக்காவில் மொத்தமாக 12 மில்லியனுக்கும்  அதிகமான மக்கள் மேத்யூ புயலை எதிர்கொள்ள நேரிடும் எனக் கணிப்பிடப் பட்டுள்ளது.

புளோரிடா மட்டுமன்றி மேத்யூ புயல் தாக்கக் கூடிய ஏனைய மாநிலங்களிலும் அதிகளவு மக்கள் வெளியேறிக் கொண்டிருப்பதால் சில இடங்களில் வாகனங்களுக்கான எரிபொருள் தீர்ந்தும் கடைகளில் பொருட்கள் முடிந்தும் உள்ளதுடன் வாகன நெருக்கடியும் ஏற்பட்டிருப்பதால் மக்கள் அவதியுற்று வருவதும் குறிப்பிடத்தக்கது. மேலும் புளோரிடாவில் பள்ளிகள் மூடப் பட்டும் வைத்திய சாலைகளில் இருந்து நோயாளிகள் வெளியேற்றப் பட்டும் உள்ளனர்.

0 Responses to தென்கிழக்கு அமெரிக்காவின் ஃபுளோரிடா மாநிலத்தைத் தாக்க வரும் மேத்யூ புயல்!

Post a Comment

Followers