Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

சின்ன சின்ன பிள்ளைகளிடம் போட்டி மனப்பான்மையையும், அதிகளவு நினைவாற்றல் சுமையையும் தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை திணிக்கின்றது. இதனால், அதிகளவான மாணவர்கள் விரக்தியடைந்து மனச்சஞ்சலங்களுக்கு உள்ளாகின்றனர் என்று வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் சுட்டிக்காட்டியுள்ளார். 

வடக்கு மாகாண கல்வித் திணைக்களத்தினால் நேற்று சனிக்கிழமை நடாத்தப்பட்ட சாதனையாளர் கௌரவிப்பு விழாவில் பிரதம விருந்தினராக கலந்துகொண்டு உரையாற்றிய போதே வடக்கு மாகாண முதலமைச்சர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

அவர் தெரிவித்துள்ளதாவது, “இங்கு கௌரவிக்கப்படும் வெற்றியாளர்களை முன்மாதிரியாகக் கொண்டு ஏனைய மாணவர்களும் அடுத்தடுத்த வருடங்களில் தம்மையும் வெற்றியாளர்களாக மாற்றிக்கொள்ளக் கூடிய ஒரு தூண்டுதல் சக்தியை உருவாக்க வேண்டும் என்பதற்காகவே கல்வித்திணைக்களம் இவ்வாறான நிகழ்வுகளை பெருந்தொகைப் பணச் செலவில் வருடாவருடம் நடத்தி வருகிறது.

போட்டிகள் எம்மை உற்சாகப்படுத்துகின்றன.  அதன் மூலம் எமது அறிவையும் திறமையினையும் விருத்தி செய்வதோடு கல்வியிலும் கல்விசார்ந்த இணைப்பாட விதான செயற்பாடுகளிலும் நாம் எம்மை வள ர்த்துக்கொள்ள வேண்டும். போட்டிகள் எமக்கு சுமையாக மாறக்கூடாது. மனதிற்கு மகிழ்வளிப்பதோடு தோல்வியுற்றவர்கள் அடுத்த தடவை வெற்றிபெறுவதற்கான ஆரம்பமாக அமையும்.

இங்கே 5ஆம் வகுப்பு புலமைப்பரிசில் பரீட்சையில் மாகாண ரீதியில் வெற்றியீட்டிய 15 பேருக்கான பரிசில்கள் வழங்கிக் கௌரவிக்கப்பட்டன. இந்தப் புலமைப்பரிசில் பரீட்சை தொடர்பாக நாம் சற்று ஆராய வேண்டியுள்ளது.

சிறுவயதுகளிலேயே அந்தச் சின்னச் சிறிய பிள்ளைகளின் மனதில் போட்டிமனப்பான்மையும் அதிகள வான நினைவாற்றல் சுமைகளையும் இந்த தரம் ஐந்து புலமைப்பரிசில் பரீட்சைக்காக அவர்களுக்குத் திணிக்கின்றோம். இதனால் அதிகமான மாணவர்கள் விரக்தியடைந்தும் மனச் சஞ்சலங்களுக்கும் உள்ளாகின்றனர்.

உண்மையில் சிறுவர்கள் விளையாட்டுடன் கூடிய கல்விமுறைமைக்கு மாற்றப்பட வேண்டும். ஏட்டு க்கல்வியுடன் மட்டும் நின்றுவிடக்கூடாது.  செயன்முறை ரீதியாக மாணவர்களுக்கு இயற்கையுடன் கூடிய அறிவை உட்புகுத்த வேண்டும் கல்வியென்பது மாணவர்களுக்கு சுமையாக அமையக்கூடாது. தற்போது பரீட்சைகளில் தோல்விகண்ட எத்தனை மாணவர்கள்  உயிர்களை மாய்த்துள்ளனர். 

பெற்றோர்கள் ஆரம்பக் கல்வியை பிள்ளைகளுக்கு புகட்டும் பொருட்டு அதிகளவான சுமைகளை கொடுக்கின்றனர். இதனால் ஆரம்பக்கல்வியை சரியாகக் கற்காமல் பிள்ளைகள் விரக்கியடைந்தவர்களாக மாறுகின்றனர். குறிப்பாக தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சையில்  மொத்தமாக 195, 196 புள்ளிகளைப் பெற்று சிறப்புச் சித்திகளை அடைகின்ற மாணவ மாணவிகள் எவ்வளவு விடயங்களை அவர்களின் அந்தப் பிஞ்சு மனங்களில் தேக்கிவைக்கிறார்கள். எனவே மாணவர்களின் கல்வித்தரத்திற்கேற்ப அவர்களுக்கு ஏற்ற வகையில் கற்றல் செயற்பாடுகள் அமைவது முக்கியமான ஒன்றாகும்.

சதுரங்கப் போட்டிகளில் வெற்றியீட்டிய முதற் பத்து மாணவர்கள் வீதம் 160 பேர்  வெற்றியாளர்களாகத் தெரிவு செய்யப்பட்டுள்ளனர். சதுரங்கப் போட்டிகள் மாணவர்களின் உள விருத்திக்கும் சிந்தனை விருத்தி க்கும் மிகவும் உதவி செய்கின்றன. அதனாலேயே பாடசாலைகளுக்கிடையே இவ்வாறான போட்டிகளை நடாத்தி வருகின்றோம்.

அன்பான மாணவச் செல்வங்களே சிறுவயதில் இருந்தே கணிதம் விஞ்ஞானம் பொது அறிவு ஆங்கிலம் தமிழ் போன்ற பாடங்களில் மிகக் கூடிய கவனம் எடுத்து உங்கள் கல்வித் தரத்தை முன்னேற்றுங்கள்.

இவ்வளவு இன்னல்கள் இடப்பெயர்வுகள் சொத்து இழப்புகள் போன்ற பாரிய இழப்புகளுக்கு மத்தியிலும் தமிழினம் தலைநிமிர்ந்து நிற்கின்றது என்று சொன்னால் எம்மிடையே காணப்படும் அடிப்படைத் தகைமையாகிய கல்வி மீதான ஈடுபாடே ஆகும்.  ஆகவே மாணவர்களாகிய நீங்கள் உங்கள் நேரங்களில் கூடுதலான அளவை வெறுமனே வீண் பொழுதாகக் கழிக்காமல் கல்வி நடவடிக்கைளிலும் விளை யாட்டுக்களிலும் ஈடுபடுங்கள்.  அவ்வாறு ஈடுபட்டால்தான் நாம் ஒரு சிறந்த கல்விச் சமூகத்தை உருவாக்க முடியும்.” என்றுள்ளார்.

0 Responses to தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை சிறிய பிள்ளைகளிடம் நினைவாற்றல் சுமையை திணிக்கின்றது: விக்னேஸ்வரன்

Post a Comment

Followers