Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

அரசியல் ரீதியிலான தலையீடுகள் மற்றும் அழுத்தங்கள் இன்றி செயற்படும் போதுதான் ஆரோக்கியமான பத்திரிகைத்துறை சாத்தியமாகும் என்று வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார். 

யாழ்ப்பாணத்திலிருந்து புதிதாக வெளிவரும் ‘காலைக்கதிர்’ பத்திரிகையின் அறிமுக விழா நேற்று சனிக்கிழமை இடம்பெற்றது. அந்த நிகழ்வில் எதிர்க்கட்சித் தலைவர் இரா.சம்பந்தன் உள்ளிட்ட முக்கியஸ்தர்கள் விருந்தினர்களாக கலந்து கொண்டிருந்தனர். அங்கு உரையாற்றும் போதே வடக்கு மாகாண முதலமைச்சர் மேற்கண்டவாறு கூறியுள்ளார்.

சி.வி.விக்னேஸ்வரன் பத்திரிகைத்துறை தொடர்பில் தெரிவித்துள்ளதாவது, “அரசியல் ரீதியான தலையீடுகளோ அழுத்தங்களோ இல்லாமல் செயற்படும் போதுதான் ஆரோக்கியமான முறையில் பத்திரிகை ஆசிரியர்களால் செயற்பட முடியும். அப்போதுதான் வாசகர்கள் மத்தியில் நம்பகத் தன்மையையும் கட்டியெழுப்ப முடியும்

நண்பர் வித்யாதரன் பத்திரிகை தர்மம் உணர்ந்தவர். அனுபவம் மிக்கவர். ஆகவே அவர் முன்னிலையில் பத்திரிகா தர்மம் பற்றிப் பேசுவது ஒரு வழியில் பார்த்தால் அவசியமற்றது என்று படும். மறுபக்கம் பார்த்தால் அவர் போன்றவர்களுக்குத் தான் மீண்டும் மீண்டும் இவை பற்றிப் பேசவேண்டும் என்றும் கொள்ளலாம். ஏனென்றால் சூழல் அவர்களை எதிர்மறையாக மாற்றாமல் இருக்க இவ்வாறான உரிமையுடனான கருத்துதவிகள் நன்மை பயப்பன என்று நம்புகின்றேன்.

அதாவது பத்திரிகைகள் உண்மையை மக்களுக்கு எடுத்துக் கூறுகின்ற நடுநிலை தவறா ஊடகங்களாக அமைதல் மிகவும் அத்தியாவசியம். ஒரு பத்திரிகையில் வெளிவருகின்ற செய்திகள் உண்மைத்தன்மையை கொண்டிருத்தல் வேண்டும். அதே சந்தர்ப்பத்தில் அச் செய்திகள் பொதுமக்கள் குழப்பமடையாத வகையிலும் இனங்களுக்கிடையே சந்தேகங்களையும் காழ்ப்புணர்வுகளையுந் தூண்டாத வகையிலும் சமூகத்தின் முன்னேற்றத்திற்கும் எதிர்கால சுபீட்சத்திற்கும் ஏற்றவையாகவும்அமைதல் சிறப்பானது.

குறிப்பாக இளைஞர், யுவதிகள் விடயத்தில் இன்னும் கூடுதலான கவனங்கள் செலுத்தப்பட்டு செய்திகள் பிரசுரிக்கப்பட வேண்டும். இளைஞர் யுவதிகளின் தவறான சில நடவடிக்கைகளுக்கு முக்கியத்துவம் கொடுத்து அச் செய்திகளை முகப்பக்கத்தில் பிரசுரம் செய்வதன் மூலம் எதுவுமறியா அப்பாவி சிறுவர்களும் அச் செய்திகளை வாசித்து அதன் தூண்டல் விளைபேற்றினால் தாமும் தவறுகளை இழைக்க முற்படுவது அவதானிக்கப்பட்டுள்ளது.

சரியான விடயங்களைச்“சரி” என ஆமோதிப்பதற்கும் அதே நேரம் சமூகத்திற்கு ஒவ்வாத தவறான விடயங்களை “தவறு” என்று எடுத்துக் காட்டுவதற்கும் பத்திரிகைகள் பின்நிற்கக்கூடாது. பத்திரிகைகள் என்பன வயது வந்தவர்களதும் முதியோர்களினதும் பாடப் புத்தகங்கள் ஆவன.

உலகத்தை அவர்கள் பார்ப்பது ஊடகங்கள் ஊடாகவே. அதனை மனதில் இருத்தி உங்கள் பத்திரிகைகளில் வெளிவருகின்ற செய்திகளின் உண்மைத்தன்மை ஒன்றுக்கு இரண்டு தடவைகள் ஆராயப்பட வேண்டும். கட்டுரைகள், துணுக்குகள் ஆகியவற்றில் குறிப்பிடப்படும் விடயங்கள் சரியானவையாக இருக்க வேண்டும். அச்சுப்பிரதிகள் பிழையின்றி அமைதல் அத்தியாவசியம். இவை எல்லாம் நாங்கள் அறிந்து வைத்திருக்கின்ற விடயங்களாக அமைந்துள்ள போதிலும் இவற்றை முக்கியப் படுத்தி முன்னிலைப்படுத்துவதற்கு வலுவான சில காரணங்கள் உண்டு.

ஏனெனில் மக்கள் பத்திரிகைகளில் வருகின்ற செய்திகள் உண்மையானவை என்று நம்புகின்றார்கள். அச்செய்திகளை எடுத்துக்காட்டாகவும் ஆதாரங்களாகவுஞ் சுட்டிக் காட்ட முற்படுகின்றார்கள். உதாரணத்திற்கு பௌத்த விகாரைகளை உரிய அனுமதியின்றி இராணுவத்தினர் அனுசரணையுடன் பௌத்தர்கள் அற்ற இடங்களில் பௌத்த பிக்குமார் கட்டுவதன் தாற்பரியம் என்ன என்று நான் கேட்டதை வைத்து சிங்கள ஊடகங்கள் பௌத்தர்களை வடமாகாணத்தில் இருந்து வெளியே செல்லுமாறு முதலமைச்சர் கூறியுள்ளார் என்று கூற என் நண்பர் சர்வோதயத் தலைவர் கலாநிதி யு.வு.அரியரத்ன அவர்கள் உடனே கடிதம் எழுதி“என்ன விக்னேஸ்! இப்படிக் கூறிவிட்டாய்?” என்று என்னிடம் வினவினார். நான் அவ்வாறு கூறவில்லை என்று அவருக்குத் தெரிவிக்க “உன்மேல் இருந்த பெரு மதிப்பும் எதிர்பார்ப்புந் தெற்கில் சரியத் தொடங்கி விட்டது” என்றார்.

ஆகவே மன எழுச்சிக்காக, உணர்வைத் தூண்டுவதற்காகப் பத்திரிகைகள் உண்மையைத் திரிபு படுத்துவது“பூனைக்கு விளையாட்டு சுண்டெலிக்கு மரணவலி”என்று ஆகிவிடும் என்பதை நாம் மறத்தலாகாது.பிழையான சில பத்திரிகைச் செய்திகளினால்த் தான் எனக்கு உயிராபத்தை விளைவிக்கப் பத்திரிகைகள் காரணகர்த்தாக்கள் ஆகியுள்ளன. எங்களைச் சுண்டெலிகளாக்கி நீங்கள் பூனைகளாக வலம் வரப்பார்ப்பதுஅவ்வளவு நல்லதல்ல என்பது உங்களுக்குப் புரிந்திருக்கும் என்று நம்புகின்றேன்.

அடுத்து பத்திரிகையில் வருகின்ற மொழிநடைகள், மொழி வசனங்கள் என்பன நூறு சதவீதம்சரியானவையாக அமைவது ஒரு பத்திரிகையைத்தரமானது எனக் கொள்வதற்கு ஒரு நியமமாக அமையும்.மேலும் மாணவ உள்ளங்களில் உங்கள் மொழிப்பிரயோகமே மேலோங்கி நிற்கும்.

பத்திரிகைகளைப் படிக்கின்ற போது பலரும் தங்களுடைய அவசிய வேலைகளை விட்டு விட்டு அவசரமாகப் படிக்கின்றார்கள். அப்படியான சந்தர்ப்பத்தில் முதலாம் பக்கத்தில் ஒரு செய்தி அதன் தொடர்ச்சி 12ஆம் பக்கம் என குறித்துவிட்டு 12ஆம் பக்கத்தைத் தேடுவதற்கு ஒன்றொன்றாகப் பக்கங்களைப் பிரித்துப் பார்க்க வேண்டியிருப்பின் வாசகருக்கு நேரமும் கிடைப்பதில்லை அவருக்குப் பொறுமையும் இருப்பதில்லை. எனவே வாசகர்களின் பொறுமைச் சோதிக்காது பத்திரிகைகள் முறையாகப் பக்கங் கட்ட வேண்டும், முதற் பக்கத் தொடர்ச்சி கடைசிப்பக்கத்தில் இடம்பெறுமானால் மயக்கம் இருக்காது.

எனவே மக்களை, அவர்களின் எண்ணங்களை நல்லவிதத்தில் ஆற்றுப்படுத்த வேண்டியவர்கள் பத்திரிகையாளர்கள். சமூகத்தை முன்னிலைப்படுத்த வேண்டிய பத்திரிகைகள் பல தமது தார்மீகக் கடமைகளை மறந்து “தடுக்கி விழுந்தார் விக்கி தாங்கிப் பிடித்தார் மைத்திரி”என்பன போன்ற செய்திகளை எழுதுகின்றார்கள். இதில் என்ன செய்தி இருக்கின்றது அல்லது என்னத்தைக் கூற வருகின்றார்கள் என்பதை என்னால் கண்டுபிடிக்க முடியவில்லை.

நான் விழுவதை இரசிக்கின்றார்களா அல்லது என்மீது அதிமேதகு ஜனாதிபதிக்கு இருக்கின்ற அன்பை வெளிக்காட்ட விழைகின்றார்களா அல்லது விக்கியும் சிங்கள அரசுடன் கைகோர்த்து செயற்படுகிறார் என்று சொல்ல வருகின்றார்களா என்பதை நானறியேன்.

விமர்சனங்களுக்கு அரசியல் தலைவர்கள் ஆளாக்கப்படுவது சாதாரணமான விடயம். அந்த விமர்சனங்கள் அவர்களை நெறிப்படுத்துவதற்கும் எதிர்காலத்தில்  தவறுகள் நிகழாமல் அவர்கள்பார்த்துக்கொள்வதற்கும் ஏற்றவையாக அமைதல் வேண்டும். ஆனால் சிலர்தங்கள் பெயர்கள் பத்திரிகைகளில் அடுத்தநாட் பதிப்பில் வரவேண்டும் என்பதற்காக எழுந்துநின்று கையை மடித்து உரத்தக் கத்துகின்றார்கள். விதண்டாவாதத்திற்காக விமர்சனங்களை முன்வைக்கின்றார்கள். அவர்களைப் பத்திரிகைகள் தூக்கிப்பிடிக்கின்றன. ஆனால் இவ்வாறான தூக்கிப்பிடிப்பு விமர்சிக்கப்படுபவர்களுக்குப்பாதிப்பை ஏற்படுத்துவதில்லை. மாறாக விமர்சிப்பவர்களே பொது மக்களால் இனம் காணப்பட்டு அருவருப்பு நிலைக்கு தள்ளப்படுகின்றார்கள் என்பதே உண்மை.

அவர்களை அந்த அருவருப்பு நிலைக்கு அழைத்துச் செல்பவர்கள் பத்திரகையாளர்களே என்பதை பத்திரகையாளச் சகோதர சகோதரிகள் புரிந்து கொள்ள வேண்டும். சில்லறைகளுக்குச் சிறப்பிடம் கொடுப்பதை பத்திரிகைகள் தவிர்க்க வேண்டும். அத்துடன் செய்திகள் வெளியிடும் போது ஆராய்ந்து உண்மை அறிந்து அதைச் செய்ய வேண்டும்.

பத்திரிகைகள் தமது சொந்த கருத்துக்கள், தமது சுய இலாபங்கள், சுய அரசியல் முன்னெடுப்புக்கள் ஆகியவற்றிற்கு முன்னுரிமை கொடுத்து எம்மைத் திட்டுவதை மட்டும் முதன்மைப்படுத்தாது பொது நோக்கம் கொண்ட, மக்கள் நலம் சார்ந்த எதிர்கால அபிவிருத்திகள் தொடர்பாக,சமூக மேம்பாடுகள் தொடர்பாக எழுத முன்வர வேண்டும்.

இளைஞர் யுவதிகளின்எதிர்காலத்தை சுபீட்சம் உள்ளதாக மாற்றுவதற்கு அவர்களின் தற்போதைய கற்றல் நடவடிக்கைகள் எவ்வாறு வலுப்பெற வேண்டும்,சமூகத்தில் முன்னணி நிலையை அடைய கல்வியின் பங்கு  என்ன என்பன போன்ற பல நல்ல விடயங்களை எழுத முன்வரவேண்டும்.

இழிவானசெய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுத்து அவற்றிற்கு வர்ணப்படங்களுடன் விளக்கங்களும் அளித்து இளம் பிள்ளைகளை உணர்வுத் தூண்டல்களுக்கு உள்ளாக்கி சமூகச் சீர்கேட்டை ஏற்படுத்தாமல்படித்த பண்பட்ட கௌரவமான ஒரு சமூகத்தை உருவாக்குவதற்கு பத்திரிகைகள் யாவரும் முன்வரவேண்டும். அந்த விதத்தில் “காலைக்கதிர்” பத்திரிகை தனது ஆரம்பப் பதிப்பில் இருந்தே மக்கள் நலம் பேணத் தன்னைத்தயார் செய்துகொள்ள வேண்டும். விரும்பினால் என்னைத்திட்டுங்கள். ஆனால் உங்கள் திட்டுக்கள் எமது அரசியல் முன்னெடுப்புக்களைப் புடம்போடுபவையாக அமைய வேண்டும்.” என்றுள்ளார்.

0 Responses to அரசியல் அழுத்தங்கள் இன்றி செயற்படும் போதுதான் ஆரோக்கியமான பத்திரிகைத்துறை சாத்தியம்: விக்னேஸ்வரன்

Post a Comment

Followers

உலகப்பரப்பில் நடைபெறும் மாவீரர் நாள் விபரங்களை கீழ் உள்ள படத்தில் அழுத்தி காணலாம்.