Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

மட்டக்களப்பு மங்களாராமய விகாராதிபதி அம்பிட்டிய சுமணரத்தின தேரரை வேறு ஒரு விகாரைக்கு இடமாற்றுமாறு கோரி ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு கடிதம் ஒன்று அனுப்பப்பட்டுள்ளது.

காத்தான்குடி பள்ளிவாசல்கள் முஸ்லிம் நிறுவனங்களின் சம்மேளனத்தினால் ஜனாதிபதியிடம் கோரிக்கை விடுத்து குறித்த கடிதம் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பாக காத்தான்குடி பள்ளிவாசல்கள் முஸ்லிம் நிறுவனங்களின் தலைவர் ஏ.எம்.எம். தௌபீக் மற்றும் செயலாளர் ஏல்.எல்.எம். சபீல் நழீமி ஆகியோர் கையொப்பமிட்டு ஜனாதிபதிக்கு நேற்று ஞாயிற்றுக்கிழமை அவரச கடிதமொன்றை அனுப்பி வைத்துள்ளனர்.

அந்தக் கடிதத்தில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, “காத்தான்குடி பள்ளிவாசல்கள் முஸ்லிம் நிறுவனங்களின் சம்மேளனமானது மட்டக்களப்பு மாவட்டத்தில் இயங்கிவரும் ஓர் தாய் நிறுவனமாகும்.

இப்பிரதேசத்தில் இன நல்லுறவைக் கட்டியெழுப்புவதிலும், இனங்களுக்கிடையிலான சக வாழ்வு வேலைத்திட்டங்களை மேற்கொள்வதிலும் இப்பிரதேச மக்களின் சமூக, சமய கலாசார பண்பாட்டு விழுமியங்களைப் பாதுகாப்பதிலும் முன்னின்று உழைத்து வரும் நிறுவனமுமாகும்.

தற்போது நிலவும் நல்லாட்சி அரசாங்கத்தில் இன நல்லுறவு, இனப்பிரச்சினைக்கான தீர்வுத்திட்டங்கள் தயாரிக்கப்பட்டு வருகின்ற வேளையில் ஆங்காங்கே சிறுபான்மையினருக்கு எதிரான சம்பவங்களும் நடைபெற்று வருவதையும் தாங்கள் அறிவீர்கள்.

குறிப்பாக மட்டக்களப்பு மங்களாராமய விகாராதிபதி சுமனரத்திண தேரர் இப்பிரதேசத்திலுள்ள மக்களுக்கெதிராக மிகக் கேவலமான முறையில் தன்னுடைய செயற்பாடுகளை அண்மைக்காலத்தில் அரங்கேற்றி வருவதை தாங்கள் அறிவீர்கள்.

கடந்த யுத்தகாலத்தில் இந்நாட்டில் மூன்று இன மக்களும் மிகக் கடுமையாகப் பாதிக்கப்பட்டு, தற்போது தான் இயல்பு நிலைக்கு திரும்பிக் கொண்டிருக்கிறார்கள்.

இவ்வாறான சந்தர்ப்பத்தில் மேற்படி விகாராதிபதியின் மோசமான செயற்பாடுகள் மூவின சமூகத்தினரையும் பாதிக்கும் என நாம் அஞ்சுகிறோம்.

கிராமசேவை உத்தியோகத்தர், பொலிஸ் அதிகாரிகள் போன்றோரை அவர்களது பணியினை நிறைவேற்ற விடாமல் இடையூறு செய்வதையும், மோசமானவார்த்தைப் பிரயோகங்களால் ஏசுவதையும் கைகலப்பில் ஈடுபடுவதையும் செய்திகள் ஊடாக தாங்கள் அறிந்திருப்பீர்கள்.

எந்த  சமூகத்திலிருந்து இன நல்லுறவுக்கான அச்சுறுத்தல் வருமாக இருந்தாலும் அதற்கெதிரான நடவடிக்கைகளை உடனடியாக மேற்கொள்ள வேண்டியது தங்களின் தார்மீகக் கடமையாகும். மஹிந்த ராஜபக்ஷ கடந்த ஆட்சிக்காலத்தில் கூட இவ்வாறான செயற்பாடுகள் மிக உச்ச நிலையில் இருந்ததை தாங்கள் மறந்திருக்கமாட்டீர்கள்.

எனவே, இன நல்லுறவை சீர் குலைக்கும் செயற்பாடுகளில் தொடர்ச்சியாக ஈடுபட்டு வரும் மட்டக்களப்பு மங்களாராமய விகாராதிபதி மதிப்பிற்குரிய சுமனரத்திண தேரர் அவர்களை வேறு ஒரு இடத்திற்கு இடமாற்றி, சமூகங்களுக்கிடையிலான உறவுகளைப் பேணக்கூடிய ஒருவரை மட்டக்களப்பு மங்களராமய விகாரைக்கு விகாராதிபதியாக நியமிக்குமாறு தாழ்மையுடன் கேட்டுக் கொள்கிறோம்.” என்றுள்ளது.

0 Responses to மட்டக்களப்பு மங்களாராமய விகாராதிபதி சுமணரத்தின தேரரை இடமாற்றுமாறு ஜனாதிபதிக்கு கடிதம்!

Post a Comment

Followers

அதிகமாக வாசிக்கபட்டவை...