Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

‘சகல சமூகங்களுக்கும் நன்மை பயக்கும் துரிதப்படுத்தப்பட்ட வளர்ச்சி' என வரவு- செலவுத் திட்டத்துக்கு அரசாங்கம் பெயரிட்டுள்ள போதும், வளர்ச்சிக்கான எந்தவொரு தெளிவான யோசனைகளும் உள்ளடங்கப்படவில்லை என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன்  தெரிவித்துள்ளார். 

நாட்டை துரித வளர்ச்சிப் பாதையில் இட்டுச் செல்வதற்கான எந்த அறிகுறிகளும் வரவு- செலவுத் திட்டத்தில் தென்படவில்லை. இது சமூக உள்ளடக்கத்துக்குப் பதிலாக சமூகங்களுக்கிடையிலான இடைவெளிகளை அதிகரிப்பதற்கான அச்சுறுத்தலைக் கொண்டிருக்கின்றது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

2017ஆம் ஆண்டுக்கான வரவு- செலவுத் திட்டத்தின் இரண்டாம் வாசிப்பு மீதான முதலாவது நாள் விவாதத்தை  பாராளுமன்றத்தில் நேற்று வெள்ளிக்கிழமை ஆரம்பித்துவைத்து உரையாற்றும்போதே எம்.ஏ.சுமந்திரன் மேற்கண்டவாறு கூறியுள்ளார்.

அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது, “சகல சமூகங்களையும் உள்ளடக்கியதாக துரித வளர்ச்சியை நோக்கியதான வரவு- செலவுத் திட்டம் என நிதியமைச்சர் கூறினார். துரதிஷ்டவசமாக சாதாரண வளர்ச்சிக்கான யோசனைகள் கூட தெளிவாக இல்லை. சமூக உள்ளடங்கங்களுக்குப் பதிலாக சமூக இடைவெளிகளை அதிகரிக்கும் என்ற அச்சமே காணப்படுகிறது. இதற்குப் பல காரணங்கள் உள்ளன.

2017ஆம் ஆண்டு செலவீனங்களுக்கான ஒதுக்கீடுகள் வெகுவாகக் குறைக்கப்பட்டுள்ளன. கடந்த வருடத்தைவிட குறைவாக காணப்படுவதுடன், இதுபோன்ற குறைப்பு கடந்த 2002ஆம் ஆண்டு மேற்கொள்ளப்பட்டிருந்தது. இதனால் மீண்டெழும் செலவீனங்களைவிட மூலதனங்களைக் குறைப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது .

மூலதனச் செலவீனங்களைக் குறைப்பதன் ஊடாக எவ்வாறு துரித வளர்ச்சியை ஏற்படுத்த முடியும்? மாவட்ட செயலாளர்கள் ஊடாக வரிகளை அறவிடும் திட்டமொன்று 2016ஆம் ஆண்டு வரவு-செலவுத் திட்டத்தில் முன்மொழியப்பட்டிருந்தது. இதனை நாமும் வரவேற்றிருந்தோம். ஆனால் இது நடைமுறைப்படுத்தப்படவில்லை. இவ்வாறான நிலையில் 2017ஆம் ஆண்டு வரவு-செலவுத் திட்டத்தில் இது குறித்து எந்தவொரு வார்த்தையும் இல்லை.

அரசாங்க நிறுவனங்கள் பலவற்றை தனியார் மயப்படுத்துவது தொடர்பான யோசனைகள் இதில் முன்வைக்கப்பட்டுள்ளன. கடந்த காலங்களில் இவ்வாறான செயற்பாடுகளால் ஏற்பட்ட மோசமான அனுபவங்கள் இருக்கின்றன. அரசாங்க நிறுவனங்களைத் தனியார் மயப்படுத்துவதானது ஆரம்பத்தில் பாரிய முதலீடுகளைக் கொண்டுவருவதாகத் தோன்றினாலும் நீண்டகாலத்தில் இது நன்மையளிக்காது. இவ்வாறான முயற்சியானது பிழையான பாதையில் நாடு செல்வதையே எடுத்துக்காட்டுகிறது என்றார்.

உலக வர்த்தக நிலைமைகளில் வீழ்ச்சி காணப்படுகிறது. இதனை உலக வர்த்தக ஸ்தாபனமும் சுட்டிக்காட்டியுள்ளது. இவ்வாறான நிலையில் வர்த்தகத்தை தாராளமயப்படுத்துவதானது அரசாங்கம் எதிர்பார்ப்பதைப் போன்று ஏற்றுமதியை அதிகரிக்காது. மாறாக இறக்குமதியையே கூட்டும்.

எனவே, வர்த்தக செயற்பாடுகளை தாராளமயப்படுத்துவது தற்பொழுதுள்ள சூழ்நிலையில் பொருத்தமானதல்ல. நேரடி வரிகளுக்கும், மறைமுக வரிகளுக்கும் இடையிலான விகிதாசாரம் 80-20 என்ற அடிப்படையில் மாற்றப்பட்டுள்ளது. மறைமுக வரிகள் 80 வீதமாக அதிகரிக்கப்பட்டிருப்பதுடன், நேரடி வரி 20 வீதமாக குறைக்கப்பட்டுள்ளது. எனினும் இந்த விகிதாசாரம் 60-40 ஆக கடைப்பிடிக்கப்படும் என பிரதமர் கூறியிருந்தார். இருந்தபோதும் நிதி அமைச்சரின் அறிவிப்பு அதற்கு முற்றிலும் மாற்றாக உள்ளது. இது ஏழை பணக்காரன் என்ற சமூக இடைவெளியை அதிகரிக்கும்.

வடக்கின் மீள்குடியேற்றம் உள்ளிட்டவற்றுக்கான ஒதுக்கீடு போதுமானதல்ல. கடந்த வருடம் குறைந்த பணம் ஒதுக்கப்பட்டபோது உதவிவழங்கும் நாடுகளின் மாநாடு நடத்தப்பட்டு மேலதிக பணம் பெறப்படும் என அரசாங்கம் கூறியது. அதன் பின்னர் வடக்கில் 65000 வீடுகளை கட்டிக் கொடுக்கும் திட்டத்தை மீள்குடியேற்ற அமைச்சர் முன்வைத்தார். எனினும், இத்திட்டத்துக்கு நாம் எதிர்ப்புத் தெரிவித்தோம்.

இரும்பு உருக்கினால் ஆன, பொருத்து வீடுகள் வேண்டாம். பல தடவைகள் இடம்பெயர்ந்த மக்கள் சொந்த வீட்டில் இருக்கவே விரும்புகின்றனர். பொருத்து வீடுகளை அவர்கள் தங்களுடைய பிள்ளைகளுக்கு வழங்கிச் செல்ல முடியாது. இந்த வீடுகளுக்கு அத்திவாரங்கள் இல்லை. சில்லைப் பொருத்தினால் வீட்டை நகர்த்திச் செல்ல முடியும்.

இவ்வாறு அமைக்கும் வீட்டுக்கான செலவு 700,000 ரூபாவாக மதிப்பிடப்பட்டது. எனினும், அமைச்சர் முன்வைத்த வீடொன்றின் பெறுமதி இதனைவிட மூன்றுமடங்கு அதிகமானது. எமது மக்களுக்கு வீடுகள் அவசியம். இது தொடர்பில் சிவில் அமைப்புக்களுடன் இணைந்து நாம் ஆராய்ந்தபோது வீட்டுத் திட்டத்துக்கு உதவ ஐந்து உள்ளூர் வங்கிகள் முன்வந்துள்ளன. இது பற்றிய திட்டமொன்று தயாரிக்கப்பட்டுள்ளது.

65000 வீட்டுத்திட்டத்துக்கு மாற்றான திட்டமொன்றை சபையில் சமர்ப்பிக்கின்றேன். இதற்கமைய தலா ஒரு வீடு 800,000 ரூபா பெறுமதியானவை. ஏனைய வசதிகளுடன் வீடொன்று ஏறக்குறை 1 மில்லியன் பெறுமதியில் அமைக்க முடியும். மீள்குடியேற்ற அமைச்சர் முன்மொழிந்த வீட்டின் பெறுமதியைவிட அரைமடங்கு குறைந்த விலையில் இந்த வீடுகளை அமைக்க முடியும்.

இந்த நிலையிலேயே 2017ஆம் ஆண்டு வரவு-செலவுத் திட்டத்தில் வடக்கில் 50 ஆயிரம் வீடுகளை அமைப்பதற்கு 5 பில்லியன் ரூபா ஒதுக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கமைய வீடொன்றுக்கு 1 மில்லியன் ரூபா செலவாகிறது. நாம் முன்வைக்கும் திட்டத்துடன் இது ஒத்துப்போகிறது. இதனை கவனத்தில் எடுக்குமாறு அரசாங்கத்திடம் கேட்கின்றோம்.

 வடக்கில் வீடுகள், கடைத் தொகுதிகளைக் கொண்ட கலப்புத் திட்டமொன்றை அமைப்பதற்கான யோசனையொன்றும் முன்வைக்கப்பட்டுள்ளது. 1 பில்லியன் ரூபாவில் இதனை அமைப்பதற்கு முன்மொழியப்பட்டுள்ளது. ஒரு கட்டடத்தை அமைப்பதற்கு ஏன் 1 பில்லியன் ரூபா. நாம் அவ்வாறானதொரு கட்டத்தைக் கேட்கவில்லை. அவர்களின் பொருளாதாரத்தையும் வாழ்வாதாரத்தையும் ஊக்குவிப்பதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும்.” என்றுள்ளார்.

0 Responses to வளர்ச்சிக்கான எந்தவொரு தெளிவான யோசனையும் வரவு- செலவுத் திட்டத்தில் இல்லை - சுமந்திரன்

Post a Comment

Followers

உலகப்பரப்பில் நடைபெறும் மாவீரர் நாள் விபரங்களை கீழ் உள்ள படத்தில் அழுத்தி காணலாம்.