Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

கைச்சாத்திடுகின்ற ஒப்பந்தங்களைக் காட்டிலும் மனச்சாட்டியின்படி மனதிலுள்ள ஒப்பந்தத்தின் வலிமை அதிகமானது என்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதித் தேர்தலின் போது எந்தவித ஒப்பந்தங்களிலும் கைச்சாத்திடாமல் தனக்கு தமிழ் மக்கள் ஆதரவு அளித்தார்கள் என்பதையும், அதற்கு தான் நன்றி விசுவாசத்துடன் இருப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

யுத்தத்தினால் இடம்பெயர்ந்த மக்களுக்காக யாழ். கீரிமலையில் நிர்மாணிக்கப்பட்டுள்ள ‘நல்லிணக்கபுரம்’ வீடமைப்புத் திட்டம் நேற்று திங்கட்கிழமை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனாவினால் உத்தியோக பூர்வமாக திறந்து வைக்கப்பட்டு மக்களுக்கு வீடுகள் கையளிக்கப்பட்டன.  அந்நிகழ்வில் கலந்து கொண்டு பேசும் போதே ஜனாதிபதி மேற்கண்டவாறு கூறியுள்ளார்.

அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது, “உலகெங்கிலுமுள்ள தமிழ் மக்கள் தீபாவளி திருநாளைக் கொண்டாடி மகிழும் இக்காலத்தில் வடக்கில் இடம்பெயர்ந்த மக்களுக்கு வீடுகளையும், காணிகளையும் வழங்கும் புண்ணிய காரியத்தைச் செய்வதில் பெருமகிழ்ச்சியடைகின்றேன்.  வடக்கு மக்களின் மீள் குடியேற்றம் மற்றும் காணிப்பிரச்சினை நீண்ட காலமாக தொடரும் ஒருவிடயமாகும். இப்பிரச்சினைகளுக்கு தீர்வு காண்பதற்கு அரசாங்கம் முக்கியமளித்துச் செயற்படுகின்றது.

கீரிமலை பிரதேசம் புனித பூமி என தெரிவிக்கப்படுகிறது. உண்மையில் நமது நாட்டின் அனைத்துப் பிரதேசங்களுமே புண்ணிய பூமிதான். இந்த பூமியில் நாம் அனைவரும் சமத்துவமாக மகிழ்ச்சியாக வாழவேண்டும். யுத்தம் இந்த நாட்டில் இடம்பெற்ற ஒரு கசப்பான வரலாறு. அந்த இருள் சூழ்ந்த முட்பாதை முடிந்து எட்டு வருடம் ஆகிவிட்டது. அதற்காக ஒத்துழைத்த மக்களுக்கும் படையினருக்கும் எமது நன்றிகள். எனினும் மீண்டும் இந்த நாட்டில் யுத்தமொன்று ஏற்படாமல் பாதுகாப்பது நம் அனைவரதும் பொறுப்பாகும்.

ஆயுதங்களை ஏந்திய படையினரின் கரங்கள் தற்போது நல்லிணக்கத்துக்கும் மக்கள் சேவைக்கும் செயற்படுகிறது.  கடந்த ஒரு வருட காலமாக வடக்கில் மீள்குடியேற்றம் காணிகளை மீளளித்தல் விடயங்கள் இடம்பெற்று வருகின்றன. இந்த நடவடிக்கைகள் மேலும் துரிதப்படுத்தப்படும். யாழ் மாவட்டத்தில் ஒரு இலட்சம் வீடுகளை அமைப்பதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது. மக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்துவதற்கான சகல திட்டங்களும் துரிதமாக முன்னெடுக்கப்படும்.

இரண்டு முக்கிய விடயங்களை நாம் வெற்றிகொள்ள வேண்டியுள்ளது. நல்லிணக்கம் மற்றும் இனங்களுக்கிடையிலான சமத்துவம், வறுமையொழிக்கப்பட்டு அனைத்து மக்களினதும் வாழ்வாதாரத்தை மேம்படுத்துவதே அந்த சவால். அதற்காக நாம் அடுத்த வருடத்தை வறுமையொழிப்பு ஆண்டாகப் பிரகடனப்படுத்தியுள்ளோம்.

கடந்த வாரங்களில் யாழ்ப்பாணத்தில் நிலவிய குழப்பகரமான சூழ்நிலையின் போது அமைதியும் பொறுமையும் காத்த மக்களுக்கு நன்றி. தெற்கில் இதுபோன்ற சம்பவமொன்று இடம்பெற்றிருந்தால் நிலைமை இதைவிட மிக மோசமாகியிருக்கும்.  பொறுமை, அமைதியுடன் செயற்பட்டால் வடக்கு மக்கள் தமது அனைத்து எதிர்பார்ப்புகளையும் வெற்றிகொள்ள முடியும்.

நாங்கள் நாட்டில் தேசிய நல்லிணக்கத்தை ஏற்படுத்துவதற்காக புதிய அரசியலமைப்பினை உருவாக்கி வருவது அனைவருக்கும் தெரியும், வடக்கு மக்கள் என்றைத் தெரிவு செய்வதற்காக அவர்கள் செய்த உதவியை நான் மறக்க மாட்டேன். தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராஜா உரையாற்றும் போது தமிழ் மக்கள் எந்தவிதமான உடன்படிக்கைகளும் இன்றி எனக்கு வாக்களித்தாக கூறினார். அது உண்மை. கையெழுத்திடுகின்ற ஒப்பந்தங்களைவிட உள்ளத்தில் மனச்சாட்சியில் இருக்கின்ற அந்த ஒப்பந்தம் முக்கியமானது என்பதை இவ்விடத்தில் தெரிவித்துக்கொள்கின்றேன்.

இந்த நாட்டில் வாழ்கின்ற மக்கள் மத்தியில் மனச்சாட்சியின் ஊடாக   நல்லிணக்கத்தினை ஏற்படுத்துவதற்காக நாமனைவரும் ஒன்று பட்டு செயற்படவேண்டும். எமது நாட்டில் ஒற்றுமையீனத்தை இல்லாமல் செய்வதற்கு செய்யப்பட்ட காரணங்கள் இந்த நாட்டில்  பல தசாப்தங்களாக இருந்துள்ளன. அது இறுதியில் யுத்தமாக உருவானது. நீண்ட காலமாக யுத்தம் நடைபெற்றது. யுத்தத்தின் கொடுமைகளை நாங்கள் எல்லோரும் அனுபவித்துள்ளோம். மீண்டும் யுத்தம் ஏற்படாமலிருக்க வேண்டுமாயின் நாங்கள் எல்லோரும் பொறுப்புணர்வுடன் செயற்பட வேண்டும். அதற்கான சந்தர்ப்பம் தற்போது தான் உருவாகியுள்ளது.

இதைப்பற்றி பலர் அரசியல் ரீதியாக விமர்சனம் செய்கின்றார்கள். கேலியாக பேசுகிறார்கள். இத்தகைய செயற்பாட்டுக்காக பொருத்தமற்ற வகையில் செயற்படுகின்றார்கள். ஆனால் இது   குறைவாக மதிப்பீடு செய்யக்கூடிய விடயமல்ல. கடந்த 50, 60 வருட காலமாக இதைப்பற்றிய அனுபவங்கள் எம்மிடம் உள்ளன. நாடு என்ற ரீதியில் நல்ல தீர்மானத்தை எடுப்பதற்கு நல்ல சந்தர்ப்பமாக தற்போதைய சூழலுள்ளது. நாங்கள் அரசியமைப்பு மூலமாக எல்லா இன மக்களும் ஏற்றுக்கொள்ளக்கூடிய அரசியலமைப்பைத்தான் உருவாக்கப்போகின்றோம்.  தமிழ் சிங்கள முஸ்லிம் மக்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளும் வகையில் அரசியலமைப்பை  உருவாக்கி வருகின்றோம்.

0 Responses to மனதிலுள்ள ஒப்பந்தத்தின் வலிமை அதிகமானது; யாழில் மைத்திரி தெரிவிப்பு!

Post a Comment

Followers