Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

யாழ்ப்பாணம் கொக்குவில் குளப்பிட்டியில் பொலிஸாரினால் படுகொலை செய்யப்பட்ட மாணவர்களில் விஜயகுமார் சுலக்சன் (வயது 24), துப்பாக்கிச் சூட்டினாலும், மோட்டார் சைக்கிளில் பின்னால் இருந்து பயணித்த மற்றைய மாணவரான கிளிநொச்சியைச் சேர்ந்த நடராசா கஜன் (வயது 23), விபத்தால் ஏற்பட்ட காயம் காரணமாகவும் உயிரிழந்துள்ளதாக யாழ்ப்பாணம் நீதவான் நீதிமன்ற நீதவான் சி.சதீஸ்தரன், மரண விசாரணை அறிக்கையில் தெரிவித்துள்ளார். 

கடந்த 20ஆம் திகதி நள்ளிரவு 11.45 மணியளவில் கொக்குவில், குளப்பிட்டி பகுதியில் பொலிஸாரால் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிச் சூட்டினால் படுகொலையான மாணவர்களின் வழக்கு, இன்று வெள்ளிக்கிழமை யாழ்ப்பாணம் நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.

இதன்போது, சந்தேகநபர்களாக அடையாளம் காணப்பட்ட ஐந்து பொலிஸாரும் நீதிமன்றில் ஆஜர்ப்படுத்தப்பட்டனர். இதன்போது, தனது மரண விசாரணையின் அறிக்கையில், நீதவான் இவற்றை குறிப்பிட்டுள்ளார்.

'மோட்டார் சைக்கிளைச் செலுத்திச் சென்ற சுலக்சன் மீது துப்பாக்கி சூடு மேற்கொள்ளப்பட்டு, குண்டு பாய்ந்ததில் அவர் உயிரிழந்தார். அதன் பின்னர் நிகழ்ந்த விபத்தில் ஏற்பட்ட காயம் காரணமாக மற்றைய மாணவன் கஜன் உயிரிழந்தார்' என நீதவான் கூறியுள்ளார்.

இந்த வழக்கின் சான்றுப்பொருட்களான இரத்த மாதிரி, மாணவர்களது உடைகள், உடமைகள், மற்றும் சம்பவம் நடைபெற்ற இடத்திலிருந்து மீட்கப்பட்ட துப்பாக்கி குண்டின் வெற்றுக்கோது என்பன குற்றப்புலனாய்வு பொலிஸாரால் நீதிமன்றத்தில் பாரப்படுத்தப்பட்டன.

இது தொடர்பான விசாரணைகள் தொடர்ந்து நடைபெற்று வருவதாக குற்றப்புலனாய்வு பொலிஸார், நீதிமன்றில் கூறினர். இந்த வழக்கு விசாரணை தொடர்பில் தம்மிடமுள்ள பெறுமதி வாய்ந்த தகவல்களை குற்றப்புலனாய்வு பொலிஸாருக்கு வழங்குவதற்கு நீதவான் அனுமதிப் பெற்றுத்தரவேண்டும் என மாணவர்கள் சார்பில் ஆஜராகிய சட்டத்தரணிகள் நீதவானிடம் கோரினர்.

சட்டத்தரணிகளிடமுள்ள தகவல்களை பெற்றுக்கொள்ளுமாறு குற்றப்புலனாய்வு பொலிஸாருக்கு நீதவான் பணித்தார். இதனையடுத்து, சந்தேகநபர்கள் ஐவரையும் எதிர்வரும் 18ஆம் திகதி வரையும் விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டார்.

0 Responses to சுலக்சன் துப்பாக்கி சூட்டினாலும், கஜன் விபத்தினாலும் உயிரிழப்பு; மரண விசாரணை அறிக்கையில் தெரிவிப்பு!

Post a Comment

Followers

உலகப்பரப்பில் நடைபெறும் மாவீரர் நாள் விபரங்களை கீழ் உள்ள படத்தில் அழுத்தி காணலாம்.