Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

யாழ்ப்பாணத்தில் ‘பிரபாகரன் படை’ உருவாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன- பிரதமர் ரணில் விக்ரமசிங்க தலைமையிலான தற்போதைய அரசாங்கமே காரணம் என்று முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ குற்றஞ்சாட்டியுள்ளார்.

தற்போதைய அரசாங்கத்தின் நடவடிக்கைகளால் நாட்டின் தேசிய பாதுகாப்பு பெரும் அச்சுறுத்தலுக்கு முகம்கொடுத்துள்ளதாகவும், இதனால் தென்பகுதியிலிருந்து, யாழ்ப்பாணத்திற்கு சுதந்திரமாக செல்வதற்கு முடியாத நிலைமை ஏற்படுத்துள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

அம்பாந்தோட்டை சூரியவெவ பகுதியில் நடைபெற்ற மக்கள் சந்திப்பொன்றில் கலந்து கொண்டு பேசும் போதே மஹிந்த ராஜபக்ஷ மேற்கண்டவாறு கூறியுள்ளார்.

அவர் மேலும் குறிப்பிட்டுள்ளதாவது, “நாட்டின் தேசிய பாதுகாப்பு தொடர்பான விடயத்தில் இந்த அரசாங்கம் அக்கறையின்றி இருப்பதால், மிகவும் ஆபத்தான நிலை ஏற்பட்டுள்ளது. யாழ்ப்பாணத்திலுள்ள பொலிஸ் நிலையங்களில் கடமையாற்றும் தமிழ் பொலிஸ் உத்தியோகத்தர்களை சேவையிலிருந்து உடனடியாக விலகிக்கொள்ளுமாறு வலியுறுத்தி கடிதமொன்று அனுப்பிவைக்கப்பட்டுள்ளதாக ஊடகங்களில் செய்திகள் வெளியாகியிருந்தன. ‘பிரபாகரன் படை’ என்ற பெயரில் இந்த எச்சரிக்கை கடிதம் வெளியிட்டிருக்கின்றது. இந்த நிலைமைகள் ஏற்படும் என்பதை முன்கூட்டியே நாம் கூறியிருந்தோம்.

ஆனால் இந்த அரசாங்கம் அவற்றை பொருட்படுத்தாமல், வடக்கில் நிலைகொண்டுள்ள இராணுவத்தை குறைத்தது. பொலிசாரை பலப்படுத்துமாறு விடுத்த கோரிக்கையை நடைமுறைப்படுத்தவில்லை. இவற்றின் விளைவே இவை.

எமது ஆட்சியின் போது வடக்கில் ஏராளமான தமிழ் இளைஞர், யுவதிகளை பொலிஸ் சேவைக்கு இணைத்துக் கொண்டோம். ஆனால் இன்று அவர்கள் அனைவரையும் பொலிஸ் சேவையிலிருந்து விலகிக்கொள்ளுமாறு கடிதம் அனுப்பப்பட்டிருக்கின்றது.  இதன் பின்னணி குறித்து ஆராயாமல் இந்தக் கடிதத்தை வெளியில் கொண்டுவந்தது யார் என்பதை விசாரணை செய்யும் ஒரு நிலமையே இன்று ஏற்பட்டிருக்கின்றது. 

தவறொன்று இழைத்தால் தவறை செய்தவர் யார் என்பதையே கண்டுபிடிக்க வேண்டும். அதனைவிடுத்து அந்தத் தவறை வெளியில் கொண்டுவந்தவரை விசாரணைக்கு உட்படுத்தக்கூடாது. ஆனால் இன்றைய அரசாங்கம் அதனையே செய்துவருகின்றது. தேசிய பாதுகாப்பை நாம் உறுதிப்படுத்திக்கொடுத்தோம்.

அம்பாந்தோட்டையிலிருந்து யாழ்ப்பாணத்திற்கு சுதந்திரமாக சென்றுவருவதற்கான நிலமையை நீங்கள் தான் ஏற்படுத்திக் கொடுத்தீர்கள் என்று இங்கு ஒருவர் கூறுகின்றார்.  ஆனால் யாழ்ப்பாணத்திற்கு எத்தனை நாட்களுக்கு சுதந்திரமாக சென்றுவரக்கூடிய நிலமை இருக்கும் என்பதை உறுதியாக கூற முடியாதுள்ளது.

இது ஒரு பாரிய பிரச்சனை. நாட்டை பிளவுபடுத்த ஒருபோதும் இடமளிக்க முடியாது. இன்று புதிய அரசியல் யாப்பின் ஊடாக நாட்டை பிளவுபடுத்துவதற்கான சூழ்ச்சிகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன. இதற்கு இடமளிக்க முடியாது.  அரசாங்கத்தின் இந்த சூழ்ச்சிகள் தொடர்பில் இதனைவிட மக்கள் தெளிவுபெற வேண்டும் என நான் நம்புகின்றேன். ” என்றுள்ளார்.

0 Responses to யாழில் ‘பிரபாகரன் படை’ உருவாக மைத்திரி- ரணில் அரசே காரணம்: மஹிந்த

Post a Comment

Followers

உலகப்பரப்பில் நடைபெறும் மாவீரர் நாள் விபரங்களை கீழ் உள்ள படத்தில் அழுத்தி காணலாம்.