Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

யாழ். பல்கலைக்கழக மாணவர்கள் இருவர் கடந்த மாதம் பொலிஸாரினால் சுட்டுப் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் சுயாதீன விசாரணைகள் முன்னெடுக்கப்படும் என்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன உறுதியளித்துள்ளார்.

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, பிரதமர் ரணில் விக்ரமசிங்க, சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு, புனர்வாழ்வு, மீள்குடியேற்றம் மற்றும் இந்து சமய விவகார அமைச்சர் டி.எம்.சுவாமிநாதன் ஆகியோருக்கும், யாழ்ப்பாண பல்கலைக்கழக மாணவர்களுக்குமிடையில் நேற்று செவ்வாய்க்கிழமை நடைபெற்ற சந்திப்பிலேயே இந்த உறுதிமொழி வழங்கப்பட்டுள்ளது.

கொக்குவிலில் வைத்து யாழ். பல்கலைக்கழக மாணவர்கள் இருவர் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம் குறித்து நீதி நிலைநாட்டப்படும் என்றும் அரசாங்கத்தினால் உறுதியளிக்கப்பட்டுள்ளது.

யாழ். பல்கலைக்கழக துணைவேந்தர் வசந்தி அரசரட்னம் மற்றும் யாழ் பல்கலைக்கழகத்தின் கலைப்பீட மாணவர் ஒன்றியத்தின் தலைவர் கே. ரஜீபன் தலைமையில் 16 பேர் கொண்ட மாணவர் பிரதிநிதிகள் குழு இச்சந்திப்பில் கலந்துகொண்டது.

இச்சம்பவம் தொடர்பில் குற்றப்பத்திரம் தாக்கல் செய்வதற்கும் அதனைத் தொடர்ந்து சட்ட நடவடிக்கைகள் எடுப்பதற்கும் காலஅவகாசம் தேவைப்படுவதாகவும், இவ்வாரத்தினுள் அறிக்கையொன்று சமர்ப்பிக்கப்படவிருப்பதாகவும் ஜனாதிபதி இச்சந்திப்பில் சுட்டிக்காட்டியுள்ளார். உயிரிழந்த மாணவர்களின் குடும்பங்களுக்கு ஒரு மாதத்துக்குள் நஷ்டஈடு பெற்றுக் கொடுக்கப்படும் என்றும் அரசாங்கத் தரப்பில் உறுதியளிக்கப்பட்டுள்ளது.

ஜனாதிபதி மற்றும் பிரதமருடன் நடத்திய பேச்சுவார்த்தைகள் முழுமையாகத் திருப்தியளிக்கும் வகையில் அமையாதபோதும், அரசாங்கம் வழங்கிய உறுதிமொழிகளை சக மாணவர்களுக்கு அறிவித்து அவர்கள் ஏற்றுக்கொண்டால், மீண்டும் கல்வி நடவடிக்கைகளில் ஈடுபடவிருப்பதாக யாழ். பல்கலைக்கழக கலைபீட மாணவர் ஒன்றியத் தலைவர் எஸ்.ரஜீவன் நேற்றைய சந்திப்பின் பின்னர் கூறினார்.

மாணவர்கள் மீதான துப்பாக்கிச்சூட்டு சம்பவம் தொடர்பான முழுமையான விளக்கமொன்றை ஜனாதிபதி வழங்க வேண்டும், கைது செய்யப்பட்டுள்ள ஐந்து சந்தேக நபர்களில் குற்றவாளியை இனங்கண்டு விரைவில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய வேண்டும், இது தொடர்பிலான வழக்கு விசாரணைகளை தாமதப்படுத்தக்கூடாது, படுகொலை செய்யப்பட்ட இரண்டு மாணவர்களுக்காக அவர்களது பெற்றோருக்கு ஏற்றுக்கொள்ளக்கூடிய நஷ்டஈட்டை அரசாங்கம் விரைவில் வழங்கிவைக்க வேண்டும், தமிழர் தாயகப் பகுதிகளான வடக்கு மற்றும் கிழக்கு பகுதிகளில் மாணவர்கள் மட்டுமல்ல, ஒட்டுமொத்த தமிழ்ச் சமூகத்திற்கும் இவ்வாறான சம்பவமொன்று இனியும் இடம்பெறக்கூடாது என்ற உறுதியை ஜனாதிபதி வழங்க வேண்டும் போன்ற கோரிக்கைகள் மாணவர் தரப்பில் முன்வைக்கப்பட்டது. இந்தக் கோரிக்கைகள் ஏற்றுக் கொள்ளப்பட்டுள்ளன. இந்தச் சம்பவம் தொடர்பில் பக்கச்சார்பற்ற விசாரணைகள் நடத்தப்படும் என நேற்றைய சந்திப்பில் உறுதிபடத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

உயிரிழந்த மாணவர்களுக்கு நீதி வேண்டும் எனக் கோரி யாழ் பல்கலைக்கழக மாணவர்கள் வகுப்பு பகிஷ்கரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். நேற்றுமுன்தினம் நிர்வாக முடக்கப் போராட்டத்திலும் இவர்கள் ஈடுபட்டனர். இந்த நிலையில் பல்கலைக்கழகத்துக்குச் சென்றிருந்த அமைச்சர் டி.எம்.சுவாமிநாதன் மாணவர்களுடன் கலந்துரையாடியதுடன், ஜனாதிபதி மற்றும் பிரதமரை கொழும்பில் சந்திப்பதற்கு ஏற்பாடு செய்வதாக உறுதியளித்தார். இதற்கமையவே நேற்று இச்சந்திப்பு நடைபெற்றது.

0 Responses to சுயாதீன விசாரணை, உயிரிழந்த யாழ். பல்கலைக்கழக மாணவர்களின் குடும்பங்களுக்கு நஷ்டஈடு; ஜனாதிபதி உறுதி!

Post a Comment

Followers