Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

மாவீரர் மாதத்தில்.
சிறுகதை:-

மணியம் அப்புவின் வீடு கனகபுரம் மாவீரர் துயிலும் இல்லத்திற்குக் கிட்டத்தான் உள்ளது. அவரின் ஒரேமகன் மேஜர் மனோ என்ற மனோகரன் மாங்குளம் சமரில் மாவீரரானவர். அவரின் வித்துடலும் அங்கேதான் விதைக்கப்பட்டுள்ளது.

அப்புவுக்கு வயசாகிவிட்டது. அவரின் முதுகில் சிறிய வளைவு தெரியத்தொடங்கியது. கண்ணிமைகள் தடித்துப்போயின. மூக்கின் இருகரைகளிலும் வாயைநோக்கி வரிக்கோடுகள் தெரிந்தன. மாநிறம் மங்கிச்சுருங்கினாலும் அவரின் சுறுசுறப்பும் வீச்சு நடையும் குறையவில்லை.

காலைக் கதிரவனின் இளங்கதிற் கீற்றுக்கு இணையான முகப்பிரகாசத்தோடு அவர் வெளிக்கிழம்பி.. தனது முதற்கடமையான மாவீரர் துயிலும் இல்லத்திற்குச் சென்று மலர்கள்தூவி வணங்கி மனம்நிறைந்து திரும்பும் அழகு தனியானது!

«என்ரை பிள்ளைமட்டுமல்ல இஞ்சை துயிலுகிற எல்லாப்பிள்ளையளும் என்ரைபிள்ளையள்தான்! என்ரை மனம்நிறைய அவர்கள்தான் இருக்கிறார்கள்..»

என்று, அப்பு அடிக்கடி சொல்லுவார். அவரின் மனைவியார் தெய்வானை ஆச்சியும் இப்படித்தான் கதைப்பார். இவர்களைக்காணப் போராளிகள் வரும்போது அந்த அப்புவும் ஆச்சியும் அவர்களைக் கட்டியணைத்து காட்டும் அன்புக்கு இணையேதும் சொல்லமுடியாது. பொங்கிப் பிரவகித்து ஓலிக்கும் மகிழ்ச்சியோடு.. அவர்கள் புரியும் சிரிப்பொலியால் அந்த அயலே பிரகாசிக்கும்.

மணியம் அப்புவுக்கு மிகவிசாலமான வயல்நிலமும் தோட்டமும் உள்ளது. பலகுடும்பங்களுக்கு வாழ்வுகொடுத்துவரும் அவர், தனது நிலங்களில் வீடுகளும்கட்டி அவர்களை அங்கு அமரவும் வைத்துள்ளார். தனது நாலுசார் வீட்டிலும் சிலரை இருத்தியுள்ளார்.

மாவீரர்நாளில் அப்புவின் வீடு வார்த்தைகளின் சக்தியைமீறிய மகிழ்ச்சியோடு துலங்கும். வீட்டுக்கு வருவோருக்கு வாய்நிறைந்த வரவேற்புக்கூறி, அமரவைத்து உபசரிப்பார்கள். வீட்டுவிறாந்தை நீளத்திற்குப் பாய்கள்விரித்து.. தலைவாழை இலைவைத்து சோறுகறிபடைத்துச் சிறப்பான சபைவைப்பார்கள்.

காற்றில் அசைந்தாடும் வீரச் செங்கொடிகள் துலங்க.. விடுதலைப் பாடல்கள் ஒலிக்க.. கல்லறைகளின்முன்பாக தீப்பந்தங்கள் ஓங்கி ஒளியுமுழ்ந்து எரிய, பொதுச்சுடரின் குங்குலியத் தணல்கள் காற்றேறிப்பறக்க.. திரள்திரளாக நிறைந்திருந்த மக்கள்.. மலர்கள்;தூவி, நெய்விக்கேற்றி வணங்கி.. வாய்குழறி.. கண்கள்வடியத் தொழுதுநின்றதை.. அந்தஊரே திருவிழாக்கோலம் பூண்டு விழங்கியதை அன்று.. அங்கே கண்டுவியந்தவரே அறிவார்கள்.

அமைதியும் ஆனந்தமும் இயல்வுமிகு வாழ்வியலும் வீழ்ந்துகெடவே, காலம்மாறியது. கொடிய அரசின் படைகள் கிளிநொச்சியை அடிமைப்படுத்தும் அதியுச்சமுயல்வோடு அசுரம்புரிந்தவாறுவரவே.. சண்டை தொடங்கியது. தொடர் எறிகணைகள் தலைகளுக்குமேலாகச் சீறிப்பறந்தன! ஆகாயவிமானங்கள் பேரிரைச்சலோடுசுற்றிக் குண்டுகளைவீசியன. பதறிபடி மக்கள் வீதிகளில்.. திக்குத்திசை தெரியாது.. அவலக்குரல்கள் எழுப்பியவாறு அலைந்தோடும் அந்த ஈனமிகுகாட்சிகளைக் கண்டு தாங்கமுடியாது, தெய்வானைக் கிழவியார் தன்கைகளால் நெஞ்சை அழுத்திப்பிடித்தபடி.. அலறினார்!

மணியத்தார் தனது றைக்டர் வண்டியை எடுத்து ஓடவிட்டார். அயலட்டத்தார்களையும், வீதியில் செல்;லும் முடியாதவர்களையும், அவர் ஏற்றிஏற்றிப் பலமுறைகள் எங்கோ பாதுகாப்பான இடத்தில் இறக்கிவிட்டும், அவர்கள் ஓதுங்கவசதிகள்செய்தும்.. அந்தக்கிழவர் தன்னால் முடிந்தளவுக்கு உதவிகள்புரிந்தார்.

தமது வாழ்விடத்தைவிட்டு.. வளங்களைத் துறந்து.. அகதிகள் என்றபெயர்தாங்கி.. தினமும் ஓரிடமெனப் புலம்பெயர்ந்து.. பலவாறுஉலைந்து மாளும் தம்நிலைகண்டு தெய்வானை ஆச்சி மனங்குமுறினார். தீப்பொறிகள் பறக்கவே தொடர்ந்துவந்து துரத்தும் எறிகணைகளுக்கிடையே.. வான்குண்டுகளின் அதிர்வுகளுக்குமத்தியில்.. பதுங்கி நடுங்கியபடி, பசிவேறு வருத்தவே.. நாட்களைக்கடத்தும் அந்த இழிநிலை வாழ்க்கை தொடரவே.. தெய்வானைக் கிழவியின் உடல் தளர்ந்துபோனது. அவரை நோய்கள்வந்து தாக்கித் துன்புறுத்தின.

துணுக்காய்.. விஸ்வமடு.. உடையார்கட்டு.. இருட்டுமடு.. சுதந்திரபுரம்.. இரணப்பாலை.. வலைஞர்மடம் என்று சென்றமர்ந்து கொட்டில்கள்கட்டிக் கட்டி.. அவர்கள் வாழ்வைக்கடத்தவே.. இறுதியாக முள்ளிவாய்க்காலில் பெரும்போர் மூண்டது!

“வாழ்வா சாவா எதுவந்தாலும் இந்த வலைஞர்மடத்திலையே அதுநடக்கட்டும்.. இதுக்குமேலே என்னாலை முடியாது.”
என்று ஆச்சி பிடிவாதம் பிடித்தகட்டத்தில்..

வானஊர்திகள் பொழிந்த ஈனமிகு நெருப்புமழையால் திசைகள் எரிந்தன! திரவக்குண்டுகள் கொட்டுண்டு வெடித்ததால் எம்வீரர்கள் பிடிசாம்பற் குவியல்களாய்ப்போகவும்..

எம்மினத்தின் பேராயிரம் மனிதத்திருமேனியர் நெருப்பாகி.. நீறாகிக் கரியாகி.. மறைந்தேபோயினர்!..

ஒரு அக்கினிப் பிரளயமே நடந்து முடிந்தது. முள்ளிவாய்க்கால் தீக்காற்றுவீசும் சுடலைப் பெருவெளியாக மாறியது!

அந்த அப்புவும் ஆச்சியும் எப்படி உயிர்தப்பினார்கள் என்பதுவும், அவர்கள் பட்டதுயரங்களின் மிகையுறு விபரணங்களும் ஒரு பெரும் கதைக்களத்துக்குரிய விடயங்களாகும்.

நெடியகொடுமைகள் நடந்துஓய்ந்த அந்தக் கடியகால இடைவெளியில் உலகத்தின் பார்வையோட்டம் எம்தாயக மண்ணைநோக்கிச் சற்றுத்திரும்பியநாளில்.. பேரினவாதத்தின் பேய்மூச்சானது தனது சுருதியில் சிறியமாற்றத்தைக் காண்பித்ததால்.. மீண்டெழுந்த உயிர்களோடு.. கொலையுண்ட உறவுகளின் நினைவுகளைத் தாங்கியவர்களாக மக்கள்பலர்; தமது ஊர்களுக்குத் திரும்பியபோது.. அவர்களோடு சேர்ந்து மணியம் அப்புவும், ஆச்சியும் புறப்பட்டார்கள்.

இரக்கமற்ற ஓரினப் பேய்க்;கூட்டம் உண்டுகக்கிய சக்கைகள்போல் ஊரெங்கும் யாவுமே உயிரற்றுத் தெரிந்தன. தெருவின் கடைக்கோடிவரை வீடுகள் உடைபட்டும் எரியுண்டும் முற்றாய் அழிந்தும் கிடந்தன. தெரிந்தவரகள்; என்று எவர் முகங்களையும் தேடமுடியவில்லை. எல்லோரையும் இந்த இடப்பெயர்வால் தொலைத்துவிட்டோமா.. என்று பலவாறு எண்ணியபடி.. மணியம் அப்புவும்.. தெய்வானை ஆச்சியும் தங்களின் அந்த உடைந்துகிடந்த வீட்டுக்கு வந்துசேர்ந்தனர். .

துயிலும் இல்லம் இடித்தழிக்கப்பட்ட படுபாதகக் கொடுமையயை அவர்கள் அறிந்திருந்தபோதும்.. அவற்றைச் சென்றுபார்த்ததும்.. அந்த அதிற்சியின் உச்சத்தால்.. மனங்கலங்கிய மணியம் அப்பு துடிதுடித்து மயங்கிவிழவே. தாங்கித்தூக்கிய சிலர் அவரை வீட்டுக்குக் கொண்டுவந்து சேர்த்தனர்.

அன்று அதிர்ச்சியடைந்தவர் பின்பு தெழிந்து எழவில்லை. வைத்தியசாலையில் அவர் அனுமதிக்கப்பட்டார்.. இருந்தும் எதுவும் கைகூடவில்லை. அந்தத் தீராதஅதிர்ச்சி மீழாதநோயாகிப்போகவே.. மருத்துவர்கள் அவருக்கு ஏதுசெய்வது என அறியாது விழிக்கவே.. அப்புவின் உடல்நிலையை உணர்ந்த உறவினர்கள் அவரை வீட்டுக்கொண்டுவந்து சேர்த்தனர்.

சோகம் துலங்கவே அங்கே கூடியவர்கள் தங்களுக்குள் மெல்லக்கதைத்தனர்.. கூப்பியகைகளோடு அந்த நல்லமனிதருக்காகப் பிரார்த்தித்தனர். கவலையானது கண்களைக் கசியவைத்து மனங்களை அமுக்கியது.

தெய்வானை ஆச்சி பக்கத்தில் இருந்த பெண்ணின் மடியில்சரிந்துபடுத்து விம்மிக் குழறியழுதர்.

அப்புவின் மூச்சின்வீச்சு ஓய்ந்தநிலையில்.. உயிற்பின் ஒளிதணிந்துபோன அவரின் கண்கள் வீட்டு முகட்டைப் பார்த்தவண்ணம் வெறித்துக்கிடந்தன. வரண்டுஒட்டிப்போன அந்த முகத்தில் எந்த அறிகுறிகளும் தெரியவில்லை.

எனவே.. மருத்துவரை அழைத்துவந்தார்கள். அப்புவைப் பரிசோதித்தவர், அவரின் இதயத்துடிப்பு நின்றவிட்டதாகக் கூறவே, அந்த வீடும் அயலும் அழுகைஒலியால் அதிர்ந்தன.

0 Responses to கல்லறைத் தெய்வங்ளை... - ந. கிருஷ்ணசிங்கம்

Post a Comment

Followers

உலகப்பரப்பில் நடைபெறும் மாவீரர் நாள் விபரங்களை கீழ் உள்ள படத்தில் அழுத்தி காணலாம்.