Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

முஸ்லிம்களின் திருமணச் சட்டம் தொடர்பில், இஸ்லாமிய சமூகத்துடன் கலந்துரையாடியே நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படும். மாறாக, அவசரப்பட்டு அரசாங்கம் முடிவுகளை எடுக்காது என்று தொழிற் பயிற்சி அமைச்சர் மஹிந்த சமரசிங்க தெரிவித்துள்ளார்.

அரசாங்க தகவல் திணைக்களத்தில் நேற்று திங்கட்கிழமை நடைபெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் பங்கேற்று கருத்துத் தெரிவித்த போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.

மஹிந்த சமரசிங்க கூறியுள்ளதாவது, “முஸ்லிம் பெண்களின் திருமண வயதெல்லை தொடர்பில் திருமணச் சட்டம் திருத்தப்பட வேண்டும் என்று அரசாங்கம் ஒருபோதும் எண்ணவில்லை. ஆனால் முஸ்லிம் சமூகத்தின் ஒரு தரப்பினரிடமிருந்தே இந்தக் கோரிக்கை எட்டு வருடங்களுக்கு முன்னர் முன்வைக்கப்பட்டிருந்தது. அப்போது இது தொடர்பில் ஆராய்ந்து உகந்த சிபார்சுகளை செய்யுமாறு நீதியரசர் சலீம் மர்ஷூப் தலைமையில் குழு ஒன்றும் அமைக்கப்பட்டது.

கடும் போக்குக் குழுக்களை கட்டுப்படுத்துவதற்கான சட்ட நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டியதன் அவசியம் உண்டு. இனக்குழுக்களும், மத அமைப்புகளும் நேர்மையாகவும், நியாயமானதாகவும் நடப்பதற்கான அறிவுறுத்தல்கள் வழங்கப்பட வேண்டும். இது தொடர்பில் நீதியமைச்சர் சட்ட ரீதியான சில ஏற்பாடுகளைச் செய்ய வேண்டும். சகல சமூகங்களும் சமமாக வாழ வேண்டும் ஒவ்வொரு பிரஜைக்கும் சம உரிமை கிடைக்க வேண்டும். இந்த அடிப்படையிலேயே முஸ்லிம்கள் குறித்தும் அரசாங்கம் நியாயமான முடிவுகளை எடுக்கும்.

நீதியரசர் சலீம் மர்ஷூப் தலைமையிலான குழுவின் அறிக்கை மிக விரைவில் வெளியிடப்படவுள்ளது. அதன் பின்னர் அது அரசியலமைப்பு சபைக்கு சமர்ப்பித்து ஆராயப்படும். அந்த சபையில் அமைச்சர்கள் ரவூப் ஹக்கீம், ரிசாத் பதியுதீன் போன்ற அமைச்சர்களும் உள்ளனர். இந்தச் சட்டம் தொடர்பில் சமூகம் சார்ந்த தரப்புகளுடன் கலந்துரையாடியே தீர்மானம் எடுக்கப்படும். அதேபோன்று கண்டிச் சட்டம், தேச வழமை சட்டம் போன்ற சமூகங்கள் சார்ந்த விடயங்களும் அவர்களுடன் கலந்துரையாடியே தீர்வு எட்டப்படும்.” என்றுள்ளார்.

0 Responses to முஸ்லிம்களின் திருமணச் சட்டம் தொடர்பில் கலந்துரையாடியே நடவடிக்கை: மஹிந்த சமரசிங்க

Post a Comment

Followers

அதிகமாக வாசிக்கபட்டவை...