Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

ஐ.எஸ். (ஐ.எஸ்.ஐ.எஸ்- இஸ்லாமிய இராச்சியம்) தீவிரவாத அமைப்போடு இலங்கை முஸ்லிம்களுக்கு தொடர்பு ஏதும் இல்லை என்று அமைச்சரவைப் பேச்சாளரும் சுகாதார அமைச்சருமான ராஜித சேனாரத்ன தெரிவித்துள்ளார்.

ஐ.எஸ். தீவிரவாத அமைப்பில் இலங்கையைச் சேர்ந்த 32 முஸ்லிம்கள் இணைந்துள்ளதாக நீதியமைச்சர் விஜயதாச ராஜபக்ஷ வெளியிட்ட கருத்தோடு அரசாங்கம் உடன்படவில்லை. அது அவரது சொந்தக் கருத்து என்றும் அமைச்சரவைப் பேச்சாளர் குறிப்பிட்டுள்ளார்.

விஜயதாச ராஜபக்ஷவின் கூற்றினால் முஸ்லிம்கள் மத்தியில் அச்ச உணர்வு ஏற்பட்டிருப்பதாக கூறிய ராஜித சேனாரத்ன, இனவாதம் மற்றும் மத அடிப்படை வாதம் தூண்டப்படுவதைத் தடுப்பது குறித்து ஆராய ஜனாதிபதி, பிரதமர் தலைமையிலான குழு அமைக்கப்பட்டுள்ளதாகவும் கூறியுள்ளார்.

அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடக மாநாடு நேற்று புதன்கிழமை இடம்பெற்றது. அங்கு கருத்து வெளியிடும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

ராஜித சேனாரத்ன மேலும் குறிப்பிட்டுள்ளதாவது, “ஐ.எஸ். தீவிரவாத அமைப்பு தொடர்பில் விஜயதாச ராஜபக்ஷ தெரிவித்த கருத்து தொடர்பில் அமைச்சரவையில் ஆராயப்பட்டது. அவர் கூறியவை அவரது தனிப்பட்ட கருத்துக்களே அன்றி அரசாங்கத்தின் நிலைப்பாடல்ல.

ஜனாதிபதியும் இந்த விடயம் தொடர்பில் என்னுடன் பேசினார். பாதுகாப்பு அமைச்சு மற்றும் பாதுகாப்பு தரப்புடன் இது குறித்து ஆராயந்தேன். ஆனால், அமைச்சர் விஜயதாச ராஜபக்ஷ கூறியது போன்று ஐ.எஸ். தொடர்பில் எதுவித தகவலும் கிடையாது. அவருக்கு வேறு தரப்பினரால் கிடைத்த தகவலை தான் பாராளுமன்றத்தில் குறிப்பிட்டிருந்தார். அவை பாதுகாப்பு தரப்பிலிருந்து கிடைக்கவில்லை. பாதுகாப்பு தரப்பு இந்த தகவலை உறுதி செய்யவில்லை.

ஐ.எஸ். அமைப்பில் 32 இலங்கை முஸ்லிம்கள் இணைந்ததாக அவர் குறிப்பிட்டிருந்தார். ஆனால் 4 குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் வெளிநாட்டில் குடியிருக்க சென்ற நிலையிலே இவ்வாறான சம்பவம் நடந்துள்ளது. இலங்கையில் இருந்து சென்று எவரும் ஐ.எஸ். அமைப்பில் இணையவில்லை. பாதுகாப்பு தரப்பும் புலனாய்வு பிரிவும் அவதானமாகவே இருக்கிறது.

வெளிநாட்டிலிருந்து வரும் விரிவுரையாளர்கள் இங்குள்ள மாணவர்களுக்கு மத அடிப்படைவாதத்தை தூண்டும் வகையில் விரிவுரை நடத்துவதாக அமைச்சர் கூறியிருந்த கருத்தும் தவறானது. இது தொடர்பில் நாம் ஆராய்ந்து பார்த்தோம். அவருடன் பேசிய போது எமது கருத்தை ஏற்றார்.

இலங்கையில் எவருக்கும் ஐ.எஸ். அமைப்புடன் தொடர்பு கிடையாது. முஸ்லிம் மக்கள் நல்லாட்சியில் பாதுகாப்பை எதிர்பார்க்கின்றனர். ஐ.எஸ். பற்றிய கருத்தினால் முஸ்லிம்கள் அச்சமடைந்துள்ளனர். மனவேதனை ஏற்பட்டிருந்தால் அது மறைந்து விடும்.

கடந்த தேர்தலில் 99 வீதமான முஸ்லிம் மக்கள் நல்லாட்சிக்காக வாக்களித்தார்கள். முஸ்லிம்களின் வாக்குகள் கிடைக்காது என்பதால் மஹிந்த ராஜபக்ஷவின் தரப்பினர்கள் முஸ்லிம்கள் வாக்களிக்காது பகிஷ்கரிக்க வேண்டும் என எதிர்பார்க்கின்றனர். அதற்காகவே இவ்வாறான விடயங்களை பூதகரமாக்குகின்றனர். இது தவிர தமிழ் மக்கள் வாக்களிப்பதை தடுப்பதற்காக ஆவா போன்ற குழுக்களை பயன்படுத்தி வடபகுதி மக்களை பயமுறுத்தி வருகின்றனர்.

முஸ்லிம் மக்களில் 90 வீதமானவர்கள் மோதல்களையோ, இனவாதத்தயோ விரும்பவில்லை. ஆக்ரோஷமான சிறிய இளைஞர் தரப்பினர் இருக்கின்றனர். அவர் ஏதாவது செய்த தயாரானால் மூத்த முஸ்லிம் தரப்பினர் எமக்கு அறிவூட்டுகின்றனர். முஸ்லிம் தரப்பில் இருந்து இனவாத மதவாத விவகாரங்கள் தலைதூக்கினால் அந்தத் தகவல் எமக்குக் கிடைத்து விடுகிறது.

இனவாதம் பேசி அண்மையில் கைதானவர் மஹிந்த அணியில் முக்கியஸ்தராவார். அவர் நீலப்படையிலும் இருந்தவர். மஹிந்த தரப்பின் பாதயாத்திரையிலும் கலந்து கொண்டிருந்தார். கைதான முஸ்லிம் நபர் கோத்தபாய ராஜபக்ஷவுடன் தொடர்புபட்டு தேசிய புலனாய்வு பிரிவுக்கு (என்.ஐ.பி) தகவல் வழங்கி வந்தவர். இந்த இருவரும் கடந்த அரசாங்கத்துடன் தொடர்புட்படிருந்தவர்களாவர்.

சில பிக்குமார் இனவாதத்தை தூண்ட முயல்வது தொடர்பிலும் அமைச்சரவையில் ஆழமாக ஆராயப்பட்டது. ஜனாதிபதி மற்றும் பிரதமரின் தலைமையின் கீழ் நல்லாட்சிக்குப் பங்களித்த முன்னாள் ஜனாதிபதியின் செயலாளர்களை இணைத்து குழுவொன்று நியமிக்கப்பட்டு இனவாதத்திற்கு எதிராக செயற்படுவது குறித்து ஆராயப்படவுள்ளது. இந்தக் குழு வெறுக்கத்தக்க பேச்சு, இனவாத பேச்சுக்களை தடுத்தல், ஏனைய மதங்களை விமர்சித்தல் போன்றன தொடர்பில் ஆராய்ந்து அறிக்கை சமர்பிக்க இருக்கிறது.” என்றுள்ளார்.

0 Responses to ஐ.எஸ். தீவிரவாத அமைப்புடன் இலங்கை முஸ்லிம்களுக்கு தொடர்பில்லை: ராஜித சேனாரத்ன

Post a Comment

Followers

உலகப்பரப்பில் நடைபெறும் மாவீரர் நாள் விபரங்களை கீழ் உள்ள படத்தில் அழுத்தி காணலாம்.