Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

அச்சு, இலத்திரணியல் மற்றும் பதிவு செய்யப்பட்ட இணையத்தளங்களை கண்காணிப்பதற்காக சுயாதீன ஆணைக்குழுவொன்றை அமைப்பதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக தகவல் ஊடகத்துறை அமைச்சரும் அமைச்சரவை பேச்சாளருமான கயந்த கருணாதிலக்க தெரிவித்துள்ளார்.

ஊடகங்களை சர்வதேச தரத்திற்கும் முறைமைகளுக்கும் ஏற்ப மேற்பார்வை செய்ய வேண்டிய தேவையென்று ஏற்படுள்ளதாகவும், இதற்காக மக்களின் ஆலோசனைகளையும் கருத்துக்களையும் பெற இருப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

டிசம்பர் 31 வரை மக்களின் கருத்துகள் பெறப்பட்ட பின் சுயாதீன ஆணைக்குழு உருவாக்கவும் ஊடகவியலாளர்களுக்கு ஒழுக்க நெறியொன்றை அறிமுகம் செய்யவும் திட்டமிட்டுள்ளதாகவும் தகவல் ஊடகத்துறை அமைச்சர் கூறியுள்ளார்.

அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடக மாநாடு நேற்று புதன்கிழமை இடம்பெற்றது. அங்கு கருத்து வெளியிடும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

அமைச்சர் கயந்த கருணாதிலக்க   மேலும் கூறியுள்ளதாவது, “ஊடகங்கள் மீது அடக்குமுறை பிரயோகிக்கப்படுவதாக முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ குற்றஞ்சுமத்தியுள்ளார். ஆனால் அவரது காலத்தில் 13 ஊடகவியலாளர்கள் கொல்லப்பட்டதோடு 87 பேர் மீது தாக்குதல் நடத்தப்பட்டது. 4 ஊடக நிறுவனங்களும் தாக்கப்பட்டதோடு 20 ஊடகவியலாளர்கள் பொய்க் குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டுள்ளனர். பலர் காணாமற்போனதோடு பலர் வெளிநாட்டுக்கு சென்றுள்ளனர்.

ஊடக உரிமைகள், தர நிர்ணயம் தொடர்பில் பொதுமக்களின் கருத்தறிய அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது. அச்சு ஊடகங்களை மேற்பார்வை செய்வதற்கு இருக்கும் பொறிமுறை பலவீனமானது. இலத்திரனியல் ஊடகங்களை மேற்பார்வை செய்வதற்கு எந்த பொறிமுறையும் கிடையாது.

இந்த நிலையில் அவற்றை மேற்பார்வை செய்யவும், ஒழுக்கநெறியை பின்பற்றுகிறார்களா என கவனிக்கவும் ஒழுக்க நெறியை மீறி செயற்படும் ஊடகங்கள் தொடர்பிலான மக்களின் முறைப்பாடுகளை விசாரணை நடத்தவும் புதிய ஆணைக்குழுவுக்கு அதிகாரம் வழங்கப்படவுள்ளது.” என்றுள்ளார்.

0 Responses to ஊடகங்களைக் கண்காணிக்க சுயாதீன ஆணைக்குழு அமைக்க அரசாங்கம் முடிவு: கயந்த கருணாதிலக்க

Post a Comment

Followers