Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

“கடந்த ஆட்சிக் காலத்தில் நாம் தவறு இழைத்திருக்கின்றோம். அதனாலேயே மக்கள் எங்களை நிராகரித்தார்கள். ஆனாலும், மீண்டும் எங்களுக்கொரு சந்தர்ப்பம் வழங்குங்கள் திருத்திக் கொள்கிறோம்.” என்று முன்னாள் பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பஷில் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் தோல்விக்கு தானே காரணம் என ஆளும் தரப்பினர் முன்வைக்கும் குற்றச்சாட்டினை முழு மனத்துடன் ஏற்றுக்கொள்வதாகவும், இதற்காக பிறர் மீது பழி சுமத்த விரும்பவில்லையென்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

முன்னாள் அமைச்சர் ஜீ.எல்.பீரிஸை தவிசாளராகக் கொண்டு ஆரம்பிக்கப்பட்டுள்ள ஶ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் முதலாவது செய்தியாளர் மாநாடு நேற்று வியாழக்கிழமை பத்தரமுல்லையிலுள்ள கட்சி அலுவலகத்தில் நடைபெற்றது. அதில் கலந்து கொண்டு பேசும் போதே பஷில் ராஜபக்ஷ மேற்கண்ட விடயங்களைக் கூறியுள்ளார்.

அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது, “ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியை நாம் பிரிக்கவில்லை. தேசிய அரசாங்கம் எனும் போர்வையில் சுதந்திரக் கட்சி ஆதரவாளர்கள் கைவிடப்பட்டுள்ளார்கள். மக்களுக்கு நாட்டின் பொருளாதாரம் மற்றும் பாதுகாப்பு குறித்து அச்சம் எழுந்துள்ளது. அவர்களின் பயத்தை களையும் நோக்கிலேயே நாம் இந்தக் கட்சியை ஆரம்பித்துள்ளோமே தவிர சுதந்திரக் கட்சிக்கு எதிராக செயற்படுவதற்காக அல்ல.

எமது கட்சி சுதந்திரக் கட்சி எனும் நெல் மணியிலிருந்து புதிதாக முளைவிட்ட நாற்று மாத்திரமே. சுதந்திரக் கட்சியின் கொள்கைகளில் காலத்துக்கு காலம் தலைவர்கள் மக்கள் நலன்கருதி சிறிய மாற்றங்களை செய்திருந்தனர். அதே வகையில் நாமும் ஒருசில சிறிய மாற்றங்களுடன் கட்சிக் கொள்கைகளைப் பின்பற்றுவோம்.

கடந்த ஜனாதிபதி தேர்தலில் 58 இலட்சம் வாக்குகள் எமக்கு கிடைத்திருந்தன. தற்போது இவ் எண்ணிக்கை 78 இலட்சத்திலும் அதிகரித்துள்ளது. இந்நிலையில் கூட்டுறவுச் சங்க தேர்தலில் கூட அமோக வெற்றுயீட்டும் நிலையை நாம் அடைந்துள்ளோம்.  முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, கட்சித் தலைவர் பதவியை ஏற்றுக்கொள்வார் என்று நம்புகிறேன்.

1951ஆம் ஆண்டு மறைந்த பண்டாரநாயக்கவினால் ஆரம்பித்து வைக்கப்பட்ட சுதந்திரக் கட்சியின் பிரதான நோக்கங்களை நிறைவேற்றும் நோக்கிலேயே எமது புதிய கட்சி ஆரம்பிக்கப்பட்டுள்ளது. தேர்தல்கள் ஆணையாளரினால் அங்கீகாரம் வழங்கப்பட்ட நாள் முதல் எமது கட்சி இயங்க ஆரம்பித்துள்ளது. அதன் முதலாவது அங்கத்துவத்தை நான் பெற்றுக் கொண்டேன். தற்போது ஏனையோர்க்கும் அங்கத்துவம் வழங்கும் நடவடிக்கை ஆரம்பிக்கப்பட்டுள்ளது. அதனைத்தொடர்ந்து நாடு முழுவதும் கிளைகளை ஆரம்பிப்போம். இளைஞர்கள் பெண்களுக்கு சங்கங்களை அமைப்போம் பின்னர் அதிகாரிகளை நியமிப்போம்.

2005 தேர்தலின் வெற்றிக்குப் பின்னால் நான் இருந்தேன். ஆனால் அதற்காக நான் பெருமை தேடிக்கொள்ளவில்லை. அதேபோன்று தோல்விக்கான காரணத்தையும் நான் ஏற்றுக்கொள்கிறேன். அதுவே பண்பாக இருக்குமென்று நான் நினைக்கிறேன். மஹிந்த ராஜபக்ஷ யுத்தம் செய்யாது பிரபாகரனுடன் பேச்சு வார்த்தை மூலம் தீர்வு காண முற்பட்டார். ஆனால் அது முடியாமல்போனது. எனவே தமிழர்களின் பிரச்சினைகளுக்கு தீர்வினை எட்டுவதற்கு எமது கட்சி ஏற்பாடு செய்யும். அதேபோன்று பேருவளை பிரச்சினையின் பின்னணியிலும் நாம் இருக்கவில்லை. இந்த அரசாங்கத்தைச் சேர்ந்தவர்களே இருந்தனர்.” என்றுள்ளார்.

0 Responses to கடந்த ஆட்சிக் காலத்தில் விட்ட தவறுகளை திருத்திக் கொள்ள எங்களுக்கு சந்தர்ப்பம் வழங்குங்கள்: பஷில்

Post a Comment

Followers

உலகப்பரப்பில் நடைபெறும் மாவீரர் நாள் விபரங்களை கீழ் உள்ள படத்தில் அழுத்தி காணலாம்.