Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

தமிழ் மக்களின் அரசியல் பிரச்சினைகளுக்கு சமஷ்டி அடிப்படையிலான அதிகாரப் பகிர்வின் மூலமே தீர்வு காண முடியும் என்று வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார். 

அரசியல் ரீதியான பேச்சுவார்த்தைகளின் மூலம் மட்டும் தமிழ் மக்களின் பிரச்சினைகளுக்குத் தீர்வு பெற்றுக்கொள்ள முடியாது. சிங்கள மக்களோடு எமது பிரச்சினைகளைப் பேசி அதன் மூலம் சிறந்ததொரு தீர்வைப் பெற்றுக்கொள்ள முடியும். அதனைக் கருத்தில் கொண்டே புதிய செயற்பாடுகளை ஆரம்பித்துள்ளோம் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

தமிழ் மக்கள் பேரவையின் ஏற்பாட்டில் ‘வடக்கு- தெற்கிற்கான உரையாடல்’ என்ற தொனிப் பொருளில் ஊடகவியலாளர் சந்திப்பொன்று கொழும்பில் நேற்று செவ்வாய்க்கிழமை இடம்பெற்றது. அங்கு கருத்து வெளியிடும் போதே சி.வி.விக்னேஸ்வரன் மேற்கண்டவாறு கூறியுள்ளார்.

அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது, “வடக்கிலிருந்து நாம் பேசுவதும் எமது பிரச்சினைகளும் திரிபுபடுத்தப்பட்டே தெற்கு மக்களிடம் போய்ச் சேருகிறது. இதனால் எமது உண்மையான பிரச்சினை என்னவென்று தெற்கு மக்கள் உணர்ந்து கொள்ளாமல் உள்ளனர். நாம் தெற்கின் பல பகுதிகளுக்கும் சென்று அதனை தெளிவுபடுத்துவோம். எமது செயற்பாடுகளுக்கு எதிர்ப்புத் தெரிவிக்கப்பட்டாலும் நாம் இதனை மேற்கொள்வோம். இரு பகுதி மக்களும் பேசினால் நியாயமான தீர்வு கிடைக்கும் என்ற நம்பிக்கை எமக்குள்ளது.

‘சமஷ்டி’ என்பதை சிங்கள மக்கள் தவறாகப் புரிந்து கொண்டுள்ளனர். சமஷ்டி என்பது நாட்டைப் பிரிப்பதல்ல. நாட்டை ஒன்றிணைப்பதே என்பதே அவர்கள் புரிந்துகொள்ள வேண்டும். புலிகளை வைராக்கியத்துடன் பார்த்த மக்கள் இப்போதும் தமிழ் மக்களின் தேவைகள் எதிர்பார்ப்புகள் பற்றி நாம் பேசும் போது வைராக்கியமாகவும், இனவாதமாகவுமே பார்க்கின்றனர். எமது மக்களின் பிரச்சினைகளை எடுத்துக் கூறுவது எவ்வாறு இனவாதமாகும்?

யுத்தம் முடிவடைந்து நீண்டகாலம் ஆகிவிட்டது. இந்த நிலையில் வடக்கு- கிழக்கில் படையினரின் தேவை கிடையாது. பொலிஸாரின் சேவை தாராளமாகப் போதும் தேவைப்படின் பொலிஸாரின் எண்ணிக்கையை அதிகரிக்கலாம். எவராவது குகைக்குள் இருந்து கிளம்பிவிடுவார் என எதிர்பார்ப்பது மடமையாகும். அப்படி நினைத்துக்கொண்டு இன்னும் நூறு வருடமானாலும் படையினரை அப்படியே வைத்திருப்பது நியாயம் அல்ல.

படையினருக்கு அங்கிருந்து வெளியேறுவது விருப்பமில்லை. அவர்கள் அங்கு மக்களின் 65,000 ஏக்கர் காணிகளை பிடித்து வைத்துள்ளனர். எமது மக்கள் இன்னும் அகதி முகாம்களிலேயே வாழ்கின்றனர். படையினர் அந்தக் காணிகளில் பயிர்ச் செய்கை மேற்கொள்வதும் வியாபாரம் செய்வது ஹோட்டல் கட்டுவதுமே இடம்பெறுகிறது.” என்றுள்ளார்.

0 Responses to சமஷ்டியே எதிர்பார்ப்பு; சிங்கள மக்களுடன் பேசி பிரச்சினைகளைத் தீர்க்க முயல்கின்றோம்: விக்னேஸ்வரன்

Post a Comment

Followers

உலகப்பரப்பில் நடைபெறும் மாவீரர் நாள் விபரங்களை கீழ் உள்ள படத்தில் அழுத்தி காணலாம்.