Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

சீனா வழங்கிய கடன்களுக்காக அதிக வட்டியை வசூலிப்பதாக வைக்கப்படும் குற்றச்சாட்டுக்கள் உண்மைக்கு புறம்பானவை என்று மறுத்துள்ள இலங்கைக்கான சீனத் தூதுவர் யான் லியாங், “நாம் அதிக வட்டி வசூலித்தால் ஏன் எங்களிடம் புதிய கடன்களைப் பெறுகிறீர்கள்?” என்றும் கேள்வியெழுப்பியுள்ளார்.

இலங்கையில் பல்வேறு வேலைத் திட்டங்களில் ஈடுபட்டிருக்கும் சீன நிறுவனங்கள் எவையும், திட்டங்களைப் பெற்றுக் கொள்வதற்காக எந்தவொரு இலஞ்சத்தையும் வழங்கவில்லை. இலங்கை தொடர்பான தமது பங்களிப்பு மற்றும் தொடர்புகள் தவறான அர்த்தப்படுத்தலுக்கு உள்ளாக்கப்பட்டுள்ளதாகவும் அவர் குற்றஞ்சாட்டினார்.

இலங்கைக்கான சீனத் தூதுவர் யான் லியாங் நேற்று புதன்கிழமை சீனத் தூதரகத்தில் ஊடகவியலாளர்களைச் சந்தித்தபோதே இந்த விடயங்களைத்  தெரிவித்துள்ளார்.

அவர் மேலும் கூறியுள்ளதாவது, “இலங்கையின் அபிவிருத்தி செயற்பாடுகள் மற்றும் இயற்கை அனர்த்தங்களின் சீனா பல்வேறு உதவிகளை வழங்கியுள்ளது. எந்தவொரு நாட்டின் உள் விவகாரத்திலும் தலையிடுவதில்லையென்ற கொள்கையை சீனா பின்பற்றி வருகிறது. சீன எந்த நாட்டின் அரசாங்கத்துடனும் இணைந்து பணியாற்றும்.

அதிக வட்டியில் சீனா கடன்களை வழங்குவதாக விமர்சனங்கள் முன்வைக்கப்படுகின்றன. பல்வேறு அமைச்சர்கள் மற்றும் ஊடகங்கள் இது பற்றி விமர்சனங்களை வெளியிடுகின்றமை நியாயமற்றது. வட்டி வீதம் அதிகம் எனில் ஏன் மீண்டும் எம்மிடம் புதிய கடன்களை பெறுகின்றீர்கள். இலங்கை மாத்திரமன்றி சகல நாடுகளுக்கும் 2 வீத வட்டியையே நாம் பேணி வருகின்றோம். இது பற்றி நான் ஏற்கனவே அமைச்சர் ரவி கருணாநாயக்கவுடன் பேசியுள்ளேன். அவர் பல தடவைகள் பகிரங்கமாக விமர்சித்துள்ளார்.

ஏனைய நாடுகளுக்கு 2 வீத வட்டியில் கடன் கொடுக்கின்றீர்கள். ஏன் எம்மிடம் மாத்திரம் 5 வீத வட்டி அறவிடுகிறீர்கள் என சீன வியாபாரிகள் முறைப்பாடு செய்கின்றனர். இவ்வாறான நிலையில் அதிக வட்டியில் இலங்கைக்கு கடன் வழங்கப்படுவதாக முன்வைக்கப்படும் குற்றச்சாட்டு நியாயமற்றது.

நாட்டின் பொருளாதாரத்தை பலப்படுத்துவதற்கும் அபிவிருத்தி செய்வதற்கும் அரசாங்கத்துடன் இணைந்து சீனா பணியாற்றி வருகிறது. துறைமுக நகர திட்டத்தில் சீன நிறுவனத்துடன் எந்தவொரு நாடும் இணைந்து பணியாற்ற முடியும். இதனால் சுற்றாடலுக்கு தாக்கம் ஏற்படாது. புதிய அரசாங்கத்தால் கொழும்பு நகரத் திட்டம் இடைநிறுத்தப்பட்டு, அது மீண்டும் ஆரம்பிக்கப்படும் வரையான காலபகுதியில் 140 மில்லியன் அமெரிக்க டொலர் நஷ்டத்தை சீன நிறுவனம் எதிர்நோக்கியுள்ளது.

சர்வதேச மட்டங்களிலும் இருதரப்பு வர்த்தக துறைகளிலும் நீண்டகாலமாக சீனா இலங்கைக்கு உதவி வருகிறது. இலங்கைக்கு பாதிப்பை ஏற்படுத்தும் எந்த விடயத்தையும் நாம் முன்னெடுக்கவில்லை. ஆனால் ஊடகங்கள் எப்பொழுதும் எதிர்மறையான விடயங்களையே பெரிதுபடுத்துகின்றன. உண்மையின் அடிப்படையில் முன்வைக்கப்படும் விமர்சனங்களை ஏற்றுக்கொள்ள நாம் தயாராக இருக்கின்றோம்.” என்றுள்ளார்.

0 Responses to நாம் அதிக வட்டி வசூலித்தால் ஏன் எங்களிடம் புதிய கடன்களைப் பெறுகிறீர்கள்; இலங்கையிடம் சீனத் தூதுவர் கேள்வி!

Post a Comment

Followers