Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

இராணுவத்தினரால் கருணா குழுவினருக்கு வழங்கப்பட்டிருந்த T56 ரக துப்பாக்கியே முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் நடராஜா ரவிராஜ் மற்றும் அவரது பாதுகாவலரை படுகொலை செய்ய பயன்படுத்தப்பட்டதாக பிரதி சட்டமா அதிபர் ரொஹான் அபேசூரிய கொழும்பு மேல் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளார்.

கிரித்தலை இராணுவ முகாமில் இருந்து 150 துப்பாக்கிகள் கருணா தரப்பினருக்கு வழங்கப்பட்டமை விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளதாகவும் நடராஜா ரவிராஜ் படுகொலைக்கு இந்தத் துப்பாக்கிகளில் ஒன்றையே பயன்படுத்தியதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் நடராஜா ரவிராஜ் மற்றும் அவரது பாதுகாப்பு உத்தியோகத்தரான பொலிஸ் அதிகாரி ஆகியோரது படுகொலை தொடர்பாக பிரதிவாதிகள் ஆறு பேருக்கு எதிராக சட்டமா அதிபர் தொடுத்துள்ள வழக்கு முறைப்பாட்டாளர்களின் சார்பில் நேற்று செவ்வாய்க்கிழமை விசேட ஜூரி சபைகளுக்கு முன் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது. இதன்போது பிரதி சட்டமா அதிபர் தனது வாதத்தை முன்வைத்து பேசிய போதே மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

இந்த வழக்கில் முதலாவது சாட்சியான ப்ரீதி விராஜ் மனம்பெரி என்ற பொலிஸ் உத்தியோகத்தர் இந்த கொலைக்கு தொடர்புடையவர் என்றும் அவருக்கு சட்டமா அதிபரினால் வழங்கப்பட்ட நிபந்தனைகளுடன் கூடிய மன்னிப்பின் காரணமாக அவர் இந்த வழக்கின் முதலாவது சாட்சியாக குறிப்பிடப்பட்டுள்ளார் என்றும்  பிரதி சட்டமா அதிபர் குறிப்பிட்டுள்ளார்.

ப்ரீதி விராஜ் மனம்பெரி கொலையாளி வந்த மோட்டார் சைக்கிளை செலுத்தியவர் என்று தெரிவித்த பிரதி சட்டமா அதிபர், வேறு கண்ணால் கண்ட சாட்சியங்கள் இல்லாததினால் அவருக்கு நிபந்தனையுடன் கூடிய மன்னிப்பு வழங்க சட்டமா அதிபர் தீர்மானித்ததாகவும் கூறியுள்ளார்.

இந்த வழக்கில் ஆஜராகியுள்ள பிரதிவாதிகளுடன் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள பிரதான சாட்சியாளர் வழக்கு நடவடிக்கைகள் முடிவடையும் வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளமை பொது மன்னிப்பு வழங்கப்படும் போது விளக்கமறியலில் இருக்க வேண்டும் என்கின்ற சட்ட அடிப்படையை கொண்டே என்றும் பிரதி சட்டமா அதிபர் தெரிவித்துள்ளார்.

இந்த வழக்கில் குற்றஞ்சுமத்தப்பட்டுள்ள ஒருவர் இறந்துள்ள நிலையில் ஏனைய இருவரும் தலைமறைவாகியுள்ளனர். இந்த இருவரும் கருணா தரப்பை பிரதிநிதித்துவப்படுத்துபவர்கள். தற்போது நீதிமன்றத்தில் ஆஜராகியுள்ள மூவரும் கடற்படையின் புலனாய்வுப் பிரிவில் கடமையாற்றியவர்கள் என்றும் குறிப்பிட்டுள்ளார்.

இதில் ஒரு பிரதிவாதி கடற்படையின் லெப்டிணன் கொமாண்டர் ஒருவர் என்று தெரிவித்த பிரதி சட்டமா அதிபர் கருணா தரப்பினரும் மேற்படி புலனாய்வுப் பிரிவின் அதிகாரிகளும் செய்த இந்த குற்றச் செயல் மிகவும் பாரதூரமானது என்றும் கூறியுள்ளார்.

2006ஆம் ஆண்டு நடைபெற்ற இந்த சம்பவத்தின் விசாரணைகள் 2016ஆம் ஆண்டே நிறைவடைந்தது. இது மிகவும் சிக்கல்கள் நிறைந்ததாகவும் பலகோணங்களில் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டன. 10 வருடங்களாக நடைபெற்ற இந்த விசாரணைகளின் போது இரகசிய பொலிஸாருக்கு சர்வதேச பொலிஸாரின் உதவியும் பெறவேண்டிய நிலை ஏற்பட்டது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் நடராஜா ரவிராஜ் சில காலம் சட்டமா அதிபர் திணைக்களத்திலும் சேவை செய்துள்ளார். அரசியல் பிரவேசத்திற்காக அவர் அங்கிருந்து சென்றுவிட்டதாகவும் பிரதி சட்டமா அதிபர்  குறிப்பிட்டுள்ளார்.

0 Responses to இராணுவத்தால் கருணா குழுவுக்கு வழங்கப்பட்ட ஆயுதத்தினாலேயே ரவிராஜ் கொல்லப்பட்டார்: பிரதி சட்டமா அதிபர்

Post a Comment

Followers

உலகப்பரப்பில் நடைபெறும் மாவீரர் நாள் விபரங்களை கீழ் உள்ள படத்தில் அழுத்தி காணலாம்.