Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

உலக சனத்தொகையில் 3.3% வீதமான மக்கள் தமது சொந்த நாட்டை விட்டு இன்னொரு நாட்டில் இடம்பெயர்ந்து வாழும் சர்வதேச அகதிகள் ஆவர் எனப் புதிய கணிப்பீடு ஒன்று தெரிவிக்கின்றது.

2 ஆம் உலக மகா யுத்தத்துக்குப் பிறகு முன்பு எப்போதையும் விட கடந்த இரு வருடங்களில் மத்திய கிழக்கிலும் ஆப்பிரிக்காவிலும் இருந்து யுத்தம் மற்றும் வறுமை காரணமாக சுமார் 1.4 மில்லியன் மக்கள் ஐரோப்பாவுக்குத் தஞ்சம் கோரி சென்றுள்ளனர் என்றும் இது ஐரோப்பாவின் மிகப் பெரிய அகதிகள் பிரச்சினை என்றும் கூறப்படுகின்றது.

இந்நிலையில் அமெரிக்காவின் புதிய அதிபராகப் பதவியேற்கவுள்ள டொனால்ட் டிரம்ப் அகதிகள் பிரச்சினையை மிக முக்கிய தேர்தல் பிரச்சார உத்தியாக பயன்படுத்தி இருந்தார் என்பதுடன் மெக்ஸிக்கன் எல்லையுடன் சுவர் ஒன்று அமைத்து உரிய ஆவணங்கள் அற்ற மில்லியன் கணக்கான அகதிகளை நாடு கடத்தப் போவதாகவும் தீவிரவாதத்துக்கு ஆதரவளிக்கும் நாடுகளில்  இருந்து வெளியேறும் மக்களைத் தடை செய்யப் போவதாகவும் தெரிவித்திருந்தார்.

இன்றைய சர்வதேச அகதிகள் தினத்தின் போதான முக்கிய சில புள்ளி விபரங்களைப் பார்ப்போம் :

1.1960 ஆம் ஆண்டு 79 மில்லியனாக இருந்த உலக அகதிகள் எண்ணிக்கை கடந்த 50 வருடங்களில் 2015 ஆம் ஆண்டு 250 மில்லியனாக உயர்ந்துள்ளது.

2.குடிபெயர்பவர்கள் மற்றும் அகதிகள் ஆகிய இரு பிரிவினருக்கும் இடையே முக்கிய வித்தியாசம் உள்ளது. குடிபெயர்வர்கள் சிறப்பான வாழ்க்கைத் திறன் மற்றும் பொருளாதாரத்தை நோக்காகக் கொண்டு பிற தேசங்களுக்கு செல்கின்றார்கள். அகதிகளோ குழப்பநிலை மற்றும் துன்புறுத்தல்கள் காரணமாக வெளியேறுகின்றார்கள்.

3.உலகில் ஒவ்வொரு 113 இற்கும் ஒரு நபர் ஏதேனும் ஒரு காரணத்துக்காக இடம்பெயர்ந்தவர் ஆவார்.

4.இந்த வருடத் தொடக்கத்தில் மட்டும் சுமார் 4700 அகதிகள் மத்திய தரைக் கடலில் விபத்தில் சிக்கி நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளனர். இதுவே பதிவுகளில் அதிக தொகையாகும்.

5.அமெரிக்காவே உலகில் சர்வதேச அகதிகளை அதிகம் உள்வாங்கி இருக்கும் நாடாகும். ஜேர்மனி 12 மில்லியன், ரஷ்யா 11.6 மில்லியன், சவுதி 10.2 மில்லியன் மற்றும் பிரிட்டன் 8.5 மில்லியன் அகதிகளை உள்வாங்கி உள்ளன.

6.10  இல் 9 அகதிகள் அபிவிருத்தி அடைந்து வரும் நாடுகளில் தஞ்சம் புகுந்து வருகின்றனர்.  அதிகபட்சமாக துருக்கி 3 மில்லியனுக்கும் அதிகமான அகதிகளை உள்வாங்கி உள்ளது.

7. இயற்கை அனர்த்தங்களான வெள்ளம், புயல், வறட்சி மற்றும் நிலநடுக்கம் போன்றவற்றால் இடம்பெயரும் மக்கள் தொகை 2008 இல் சராசரியாக 22.5 மில்லியனாக இருந்தது. இத்தொகையும் ஒவ்வொரு வருடமும் கணிசமான அளவு அதிகரித்து வருவது குறிப்பிடத்தக்கது.

0 Responses to உலக சனத்தொகையில் 3.3% வீதமான மக்கள் நாடுகடந்து வாழும் அகதிகள் ஆவர் : சர்வதேச அகதிகள் தினத்தில் வெளியான புதிய கணிப்பீடு

Post a Comment

Followers